seeninainaa-anjali01

 மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்தவரான சீர்மிகு புலவர் செ. சீனி நைனா முகம்மது, கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனை பெயர்களிலும் படைப்புகளை வழங்கிய அறிஞர்.

 தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூரில் கீழாயூர் என்னும் ஊரில் ஆவணி 26, 1978 – செப்டம்பர் 11 1947வியாழக்கிழமையன்றுபிறந்தவர்; தம் பன்னிரண்டாம் அகவையில் மலேசியா சென்ற தந்தையுடன் உடன் சென்றார். அங்கேயே கல்வி கற்றார். பள்ளி சார்ந்த கல்வியில் பயிலாமல் தனிப்பட்ட முறையில் பயின்று அறிஞராகத் திகழ்பவர்களைப் ‘படிக்காத மேதைகள்’ என்பர். அத்தகைய ‘படிக்காத மேதை’ அறிஞர் சீனி நைனாமுகம்மது. பள்ளிப்படிப்பு பயின்றவர், உயர்கல்வியகங்களுக்குச் செல்லும் வாய்ப்பு பெறவில்லை. தனிப்பட்ட முறையில், தொல்காப்பியம் முதலான தமிழ்நூல்களைக் கற்று இலக்கண இலக்கியப் புலவராகத் திகழ்ந்தார்.

1961 முதல் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் சுடர்விட்டு வந்தார். கட்டுரைகள், சிறுகதைகள், வானொலி நாடகங்கள், கவிதைகள், மேடைக்கவியரங்கங்கள் ஆகியவற்றின் மூலம் மன்பதை நலனையும் தமிழ் உணர்வையும் ஊட்டி வந்தார். தம் நாவன்மையால் மேடையில் மட்டுமல்லாமல் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இலக்கியப் பொழிவுகள் ஆற்றியுள்ளார். இசுலாமியச் சமய உரைகளும் நிகழ்த்தியுள்ளார். கவிதை இலக்கணத்தைப்பிறருக்கும் கற்பித்தார். இதனால் மலேசியாவில், மரபுக் கவிஞர்கள் உருவாகக் காரணமாக இருந்துள்ளார்.உரைகள், பொழிவுகள் வழியாக மலேசியாவில் தொல்காப்பியத்தை நிலைபெறச்செய்துள்ளார்.

இவரது கவிதைகளை,           “தமிழ் நேசன்” ஞாயிறு கவியரங்கப் பரிசு (இரு முறை), கீழ்ப் பேரா இலக்கிய வட்டத்தின் சிறந்த கவிதைக்கான திங்கள் பரிசு (1974); மதுரையில் வெளிவந்த “குரானின் குரல்” வெள்ளிவிழாக் கவிதைப் போட்டியில் முதல் பரிசு (1979) எனப் பல பரிசுகள் அணிசெய்தன.

ஆய்வரங்கங்கள், கருத்தரங்கள், பாவரங்கங்கள், தமிழ்இலக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்திய பைந்தமிழ்ப்பாவலர் சீனி நைனா முகம்மது, உலக இசுலாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டை 2011 இல் பிறருடன் இணைந்து நடத்தினார்.

கெடல் இயக்கும் நெஞ்சுடையார் துறைதோறும் தமிழெழிலைக்கெடுக்கப் பாடு படல்தன்னை நினைக்கையிலே நெஞ்சுபதைத்துக் கிளர்ந்து எழுந்தவர். மலேசிய நக்கீரரான சீனி நைனா முகம்மது, கெடல் எங்கே தமிழின் நடை அங்கெல்லாம் தலையிட்டுத் திருத்துவார்;   நற்றமிழை நலிவு செய்வோரைக் கண்டால் பொங்கி எழுவார்; அதே நேரம் அறியாமையில் உள்ளவர்களை ஆற்றுப்படுத்தவும் செய்வார்.

 இவர் பெற்ற பட்டங்களுள் குறிப்பிடத்தக்கன, உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் வழங்கிய இறையருள் கவிஞர் என்னும் பட்டமும் சென்னைத் தமிழ்ச்சங்கம் வழங்கிய ‘தொல்காப்பிய ஞாயிறு என்னும் பட்டமும் ஆகும்.

  தம் இதழ்ப்பணியாலும் மலேசிய மக்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.பெர்மிம் பேரவையின் இசுலாமிய மாத இதழ் “நம் குரல்” ஆசிரியர் (1980-86), பினாங்கிலிருந்து வந்த “மலேசிய நண்பன்” நாளிதழின் செய்தி ஆசிரியர் (1988) என இதழ்ப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். 1998 முதல் தாமே”உங்கள் குரல்” என்னும் திங்களிதழை வெளியிட்டு அதன் ஆசிரியராக அரும்பணி ஆற்றினார்.

இவ்வாறு பல்வகைச் சிறப்புகள் பெற்றிருப்பினும் இவரது “உங்கள் குரல்” இதழே இவருக்கு மிகச்சிறந்த பெருமையைத் தேடித்தந்தது எனலாம். தூய தமிழில் இதழை வெளியிட்டும்   இலக்கணப் பயிற்சிக்கு வழிகாட்டியும் மரபுக்கவிதைப்படைப்புகளுக்கு ஊக்கமூட்டியும் தமிழார்வத்தை இவ்விதழ் மூலம் வளர்த்தார்.

 

இலக்கிய இதழாக மட்டுமல்லாமல், மலேசியாவில்   நடைபெறும் தேர்வுகளுக்கான தேர்வுக் கலைத்திட்டத்தைப் பின்பற்றிய கட்டுரைகள் பாடக்குறிப்புகளையும் வெளியிட்டு வந்தார். மலேசியாவில் தொடக்கப்பள்ளி பூர்த்தித் தேர்வு (Ujian Pencapaian Sekolah Rendah (UPSR), இடைநிலைப்பள்ளித் திறன் தேர்வு(PENILAIAN MENENGAH RENDAH -PMR), மலேசியக் கல்விச்சான்றிதழ்த் தேர்வு (SIJIL PELAJARAN MALAYSIA -SPM), மலேசியா உயர்கல்விச் சான்றிதழ்த் தேர்வு (Sijil Tinggi Pelajaran Malaysia -STPM) ஆகிய தேர்வுகள் நடைபெறுகின்றன. இத் தேர்வுகளுக்கான தமிழ்மொழிப் பாட வழிகாட்டிகள், வினாவிடை அணுகுமுறைகள், மாதிரி வினாக்கள், பயிற்சிகள் முதலானவற்றையும் ‘உங்கள்குரல்’ இதழில் வெளியிட்டு ஆசிரியர்க்குத் துணை நின்று மாணாக்கர்களைத் தகுதிப்படுத்தும் பணியினைச்சிறப்பாகச் செய்து வந்தார்.

கட்டுரைகள், செய்திகள், சிறுகதை முதலான பொதுவான பகுதிகளுடன் தமிழ் ஆர்வத்தையும் தமிழ்ப்புலமையையும் ஊட்டும் பல பகுதிகள் ‘உங்கள் குரல்’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெருமை சேர்த்தன. மாணாக்கர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் உதவும் வகையில், தொல்காப்பிய அடிப்படையில், ‘தொல்காப்பிய மரபு’ என்னும் தமிழ் இலக்கணத்தொடர் கட்டுரை மூலம் இலக்கணத்தை எளிமையாகப் புரிந்து கொள்ளச் செய்தார். இதே போன்று இவரது ‘தொல்காப்பியத் தேன்’, என்னும் தொடர் தமிழ்இலக்கணத் தேனை மக்களுக்கு வாரி வழங்கியது.

‘திண்ணைப்பள்ளி’   வினா-விடைப் பகுதி மூலம் நேயர்களைத் தொடர்பு கொண்டு இலக்கண இலக்கிய ஆவணமாகப் போற்ற வேண்டிய குறிப்புகளை அளித்து வந்தார்.

‘யார்க்கும் எளிதாகும் வெண்பா’ எனும் பகுதி மூலம் எளிமையான முறையில் மரபு இலக்கணம் பயின்ற மரபுக் கவிஞர்களானவர்கள் பலர். சிறு செய்தியாயினும் பெருங்கவனம் செலுத்தக்கூடியவர் என்பதற்குச்சான்றாக இவ்விதழில் இடம் பெறும் அடிக்குறிப்புகளின் சிறப்புகளைக் கூறலாம்.

அவருடன் பழகியதில் மறக்க முடியாத நினைவு ஒன்று: ஒரு நாள் காலை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ்ச் செம்மொழிச் சிறப்பு மலர் வெளியிட இருப்பதாகவும் கட்டுரை அளிக்குமாறு என்னிடம்தான் (தமிழ்நாட்டில்) முதலில் கேட்பதாகவும் அரசேற்பால் பெறும் பயன்கள் பற்றியகட்டுரை தருமாறும் தெரிவித்தார். அப்பொழுதுதான் ungalkural-semmozhimalar-coverமணவைமுசுதபா இது குறித்துத் தெரிவித்ததாகக் கூறினேன். தான் அவரிடம் தமிழ்நாட்டில் கட்டுரை பெறும் பொறுப்பை ஒப்படைத்திருப்பதாகக்கூறினார். இன்னின்னாரிடம்கட்டுரைகள் கேட்டிருப்பதாகக் கூறியபொழுது நானும் சிலரை நினைவூட்டினேன். சில ஆண்டுகள் கழித்து மலர் வந்துவிட்டதா எனக் கேட்ட பொழுது காலத்தாழ்ச்சி ஏற்பட்டுள்ளதை வருத்தத்துடன் தெரிவித்தார். 2007 இல்தான் மலர் வந்தாலும் சிறப்பாக அமைந்துள்ளது. 39 கட்டுரைகளைத் தாங்கி மலர் வந்துள்ளது. செம்மொழி: பொது விளக்கம், செம்மொழி: நேற்று-இன்று-நாளை, செம்மொழி: சிறப்பியல்புகள், செம்மொழி :அக்கரை நாடுகளில், தமிழ்க்கல்வி,கலை நிறுவனங்கள் என்ற தலைப்புகளில் 39 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பின்னிணைப்பாகத், தமிழ்ச்செம்மொழிப் போராட்ட வரலாற்றுக் குறிப்புகள், அரசு ஆணைகள் இடம் பெற்றுள்ளன. ‘உங்கள் குரல்’ இதழின் வாயிலான பணிகளில் இம்மலரும் இடம் பெற்றுவிட்டது.

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்பால் பெருமதிப்பும் பேரன்பும் கொண்ட இலக்கண அறிஞர் சீனி நைனாமுகம்மது அவர் வழியில் தொல்காப்பியத்தைப்ungalkural-cover-S.Ilakkuvanarphoto பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டு வாழ்ந்தார். அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டுச் சிறப்பிதழும் வெளியிட்டுள்ளார்.

இலக்கணக் காவலர்சீனி நைனா முகம்மது, ஆவணி 21, 2045 / ஆக.6, 2014 காலை, மலேசியாவின் புகிட் சம்புல் அருகே உள்ள அவரது இல்லத்தில் நெஞ்சு வலியின் காரணமாக மறைந்தார். அவருக்கு அகவை 67. இவரது மனைவி இரகிமா மகள் சமிமா, குடும்பத்தினரை மட்டுமல்லாமல் தமிழ் உலகினையும் ஆறாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொல்காப்பிய அறிஞர் சீனி நைனா முகம்மதுஅவர்களின் மறைவினால் வருந்திய தமிழ் உள்ளங்கள் அவர் பற்றிய புகழரைகளைத்தெரிவித்துள்ளனர். அவற்றில் சில:-

பினாங்கு துணை முதல்வர் இராமசாமி, “நாட்டில் எஞ்சியிருந்த தமிழறிஞர்களுள் ஒருவரான சீனி நைனாமுகமதுவின் மறைவு நாட்டுக்கே பேரிழப்பாகும்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

மலேசிய இந்திய முசுலிம் காங்கிரசுத் தலைவர் ஃபாரூக் இராசா முகமது, “மலேசிய இந்திய சமூகத்தின் தேசீய அடையாளமாகத் திகழ்ந்தவர் சீனி நைனா முகமது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிறந்த அறிஞர் ஒருவரைத் தமிழ் இழந்துவிட்டது. அடுத்த ‘தொல்காப்பிய விருது’ அவரைச் சென்றடையும் என்று நம்பியிருந்தேன்” எனப் பேராசிரியர்இராசம் அம்மையார் தெரிவித்துள்ளார்.

“மலேசியாவிற்கு மட்டுமல்லாமல் தமிழ்நிலம் முழுமைக்கும் பேரிழப்பு” என்கிறார் பேரா. மறைமலை இலக்குவனார்.

“தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம், இசுலாம் எனப் பல முனைகளிலும் முத்திரை பதித்த அவர் தனது தமிழ் அறிவைப் பிறருக்கு ஊட்டி மகிழ்ந்தவர். பல்வேறு வகுப்புகள் நடத்தி யாப்பிலக்கணம், தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம் என போதித்தவர். அவர் மூலம் உலகின் பல பகுதிகளில் உள்ளவர்கள் தங்களின் அறிவை, இலக்கிய ஆற்றலை விரிவாக்கிக் கொண்டனர். ஆழம்-அகலம்-தெளிவு கொண்ட இலக்கிய மாமேதையை இழந்தோம்.” என்கிறார் முத்து நெடுமாறன்

தொல்காப்பிய நல்லறிஞர், நற்றமிழ்ப் பற்றாளர், நற்பண்பாளர், நற்பாவலர் பேரன்புமிக்க சீனி நைனா முகம்மது ஐயாஅவர்கள்  திடீரென்றுமறைந்துவிட்டார்என்னும்செய்தி பேரிடியாய்ப் பேரதிர்ச்சியாய் இருக்கின்றது! அவர் சில நூற்றுக்கணக்கானமாணவர்களுக்குத் தொல்காப்பியத்தையும் தமிழிலக்கணங்களையும்அவராகவே பயிற்றுவித்திருக்கின்றார். இலக்கணத்தில் நல்லார்வம் ஊட்டியிருக்கின்றார். அவர்களில்சிலராவது நல்ல தொல்காப்பிய, தமிழிலக்கண, பிறமொழி இலக்கண அறிவாளிகளாக வளர்ந்தெழுவார்கள் என்றுநம்புகின்றேன். நல்லறிஞர் கவிஞர் சீனி நைனா முகம்மதுஐயாஅவர்களின் படைப்புகள் எழுத்துகள், பேச்சுகள், ஒலிக்கோப்புகள், நிகழ்படங்கள் அனைத்தையும் முறையாகத் தொகுத்து ஆவணப்படுத்திக் காத்தல்வேண்டும்”என்று இரங்கலுரையுடன் வேண்டுகோள் விடுக்கின்றார் பேராசிரியர் செல்வா

 seeninainaa-mohammed04

   “இசுலாமியப் பெருமக்களுள் தமிழுக்கு உழைத்தோர்களைப் பலராகப் பட்டியலிட்டுப் போற்றமுடியும். அந்த அறிஞர் பெருமக்களுள் தொல்காப்பியத்தை நுட்பமாகக் கற்ற பெருமையும் மலேசிய மண்ணில் எடுத்துரைத்துப் பரப்பிய பெருமையும் ஐயா சீனி நைனா முகமது அவர்களுக்கு உண்டு. தமிழ் பற்றியோ, தமிழர் பற்றியோ எவரேனும் குறைத்துப் பேசிவிட்டு ஐயாவிடமிருந்து தப்பிச் செல்லமுடியாது. அந்த அளவு தமிழ்ப்பற்றுடையவராக விளங்கியவர்.மலேசிய மண்ணில் தமிழ் வளர்ச்சிக்குத் தொடர்ந்து கடமையாற்றிய ஐயா சீனி நைனாமுகமது அவர்களின் இழப்பு தமிழுலகிற்கு ஈடு செய்ய இயலாத இழப்பு” என முனைவர் மு இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.

“சிறந்த தமிழ்ப்புலவர் என்பதுடன், சிறந்த தமிழ்நெஞ்சினர் சீனிஐயா.” என்கிறார்பொறி.நாக.இளங்கோவன்.

“அல்லும் பகலும் அயாரது உழைத்து – தமிழ்மக்கள்நெஞ்சில் நிறைந்த சீனி நைனா முகம்மது “ என்கின்றனர் காவிரிமைந்தன் சியாவுதீன் முதலான தமிழ்த்தேர் அமைப்பினர்.

“கவித்தொண்டு

உந்தன் உயிர் தொண்டு

உங்கள் குரல்

தமிழுலகம் தடம் புரளாமல்

செல்லும் வழி சொன்னீர்

நாளெல்லாம்

உனக்குத் தமிழ்ப்பணிதான்

இலக்கணம் போதித்த ஆசான்

தமிழர் மனம் இனிக்க

எறும்பாய் உழைப்பைத் தந்தாய்”

என்கிறார் மலேசியாவே.ம.அருச்சுணன்.

கூற்றுவனுக்கு ஏன் இந்த விரைவு என்பதாகப் பல்வேறு அமைப்புகளும் அறிஞர்களும் உலக அளவில் தங்கள் துயரங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.

 

மாணாக்கர்க்கு வழிகாட்டியாய் இருந்ததுடன் தமிழாசிரியர்களுக்கும் ஆசானாய்த் திகழ்ந்த, புதிய தமிழ் வாழ்த்து படைத்த அறிஞர் சீனி நைனாமுகம்மது அவர்களின் படைப்புகளை வழிகாட்டியாகக் கொண்டு

நற்றமிழ் நடையை நாம் பேணுவோம்! நானிலமெங்கும் பரப்புவோம்!

இதழுரை
ஆடி 25, 2045 / ஆக.10, 2014http://www.akaramuthala.in/wp-content/uploads/2013/12/AkaramuthalaHeader.png