தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்
தூயதமிழ் ஊடக விருதுத் தொகையைத் தமிழ் வளர்ச்சித்துறை விருதுகளுக்கு இணையாக உயர்த்துக!
அறிஞர்களைப் போற்றும் அரசே பாராட்டிற்குரியது என்கின்றனர் உலக அரசியலறிஞர்கள். தமிழ்நாடு அரசும் பல வகைகளில் அறிஞர்களைப் போற்றுகிறது. அவர்கள் மூலம் அறிவுத் தளத்தை விரிவாக்குகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு போற்றுதலுக்குரியது.
அறிஞர்களையும் வல்லுநர்களையும் பாராட்டும் பொழுது சமநிலை இருக்க வேண்டும். திறமைக்கேற்பப் பாராட்டுதல்கள் அமைய வேண்டும். அவ்வாறு சமநிலை இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அக்குறையைக் களைய வேண்டுகிறோம்.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அரசு விருதுகள் அளிப்பதுபோல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககமும் விருதுகள் அளித்து வருகிறது. தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு, நற்றமிழ்ப் பாவலர் விருது, தூயதமிழ் ஊடக விருது, தூயதமிழ்ப் பற்றாளர் விருது, தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது என விருதுகளை வழங்கி வருகிறது.
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், கபிலர் விருது (2012 முதல்), உ.வே.சா விருது (2012 முதல்), கம்பர் விருது (2013 முதல்), சொல்லின் செல்வர் விருது (2013 முதல்), உமறுப் புலவர் விருது (2014 முதல்), சி.யு.போப்பு விருது (2014 முதல்), இளங்கோவடிகள் விருது (2015 முதல்), முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்), அம்மா இலக்கிய விருது (2015 முதல்), மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்) பதின்மருக்கு, சிங்காரவேலர் விருது (2018 முதல்), அயோத்திதாசப் பண்டிதர் விருது (2019 முதல்), மறைமலையடிகளார் விருது (2019 முதல்), தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் விருது (2020 முதல்), அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது (2020 முதல்), காரைக்கால் அம்மையார் விருது (2020 முதல்) என விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ்த்தாய் விருது ஐந்து நூறாயிரம் தமிழமைப்பிற்கு வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை மூலம் தமிழ் மேம்பாட்டு ஆணையம் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது. (ஆனால் தமிழ் மேம்பாட்டு ஆணையத்தின் செயற்பாடுகள் தெரியவில்லை.)
இவை தவிர, மாவட்டந்தோறும் தமிழ்த்தொண்டாற்றும் ஒருவருக்குத் தமிழ்ச்செம்மல் விருது வழங்குகிறது. இவ்விருதுத் தொகை உரூ.25,000 எனக் குறைவானதே.
நற்றமிழ் இதழ்களுக்கு இதழியல் விருது வழங்க வேண்டும் என நாமும் வேண்டியிருந்தோம். அதற்கேற்ப அரசு சி.பா.ஆதித்தனார் விருது வழங்குகிறது. இவ்விருது நாளிதழ், வார இதழ், திங்களிதழ் என மூன்று விருதுகள் வழங்கப்படுகின்றன. நல்ல தமிழ் இதழ்களுக்கு விருதுகள் வழங்கப்படுவதே சிறப்பு. என்றாலும் பெரும்பாலான இதழ்கள் அவ்வாறு இல்லை. எனவே, நல்ல தமிழில் வெளி வரும் இதழ்களுக்கு அகரமுதலி இயக்ககம் மூலம் தூயதமிழ் ஊடக விருது வழங்குவது போற்றுதலுக்குரியது.
இன்றைக்குத் தமிழ் வாழ்வதற்கு அடிப்படையாய் இத்தகைய நற்றமிழ் ஊடகங்களே இருக்கின்றன. இவற்றால் தமிழ்ச்சொற்கள் வாழ்கின்றன; தமிழை நிலைக்கச் செய்கின்றன. இல்லையேல் தமிழ் தேய்ந்து போகும்; மறைந்து போகும்; அழிந்து போகும். இவற்றிற்குக் காரணமான தூய தமிழ் ஊடகத்திற்குக் கூடுதல் தொகையில் விருது வழங்காவிட்டாலும் பிற விருதுகளுக்கு இணையாகவாவது வழங்க வேண்டாவா? இல்லையே!
மேலே குறிப்பிட்டுள்ள தமிழ்வளர்ச்சித்துறை விருதுகள் விருதாளர் ஒவ்வொருவருக்கும் உரூபாய் இருநூறாயிரம் (2 இலட்சம்) வழங்கப்படுகிறது. இவற்றில் இதழாளருக்கான விருதுகள் மூன்றும் மொழிபெயர்ப்பிற்கான விருதுகள் பத்தும் வழங்கப்படுகின்றன.
தூய தமிழ் ஊடக விருதுத்தொகை உரூ.50,000 / மட்டுமே. மேலும் 25, 000 உரூ. மதிப்பிலான தங்கப்பதக்கம் மட்டுமே வழங்கப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறையில் விருதாளர் ஒவ்வொருக்கும் 1 சவரன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
தூயதமிழ்ப் பற்றாளர் விருது மாவட்டந்தோறும் ஒருவருக்கு உரு.20,000/ விருதுத் தொகையாக வழங்குகிறது. தூயதமிழ்ப் பற்றாளர் பரிசு மாநில அளவில் மூவருக்கு ஒவ்வொ்ருவருக்கும் உரூ.5,000/வீதம் வழங்குகிறது.
இவற்றிற்குக் காரணமான தூய தமிழ் ஊடகத்திற்குக் கூடுதல் தொகையில் விருது வழங்காவிட்டாலும் பிற விருதுகளுக்கு இணையாகவாவது வழங்க வேண்டாவா? இல்லையே!
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௬௰௮ – 668)
எனவே, தனித்தமிழே தமிழையும் தமிழரையும் வாழ வைக்கும், அரசின் நிலைத்தன்மைக்கு வழி வகுக்கும் என்பதை உணர்ந்து மனம் கலங்காமலும் சோர்வு கொள்ளாமலும் காலங்கடத்தாமலும் தெளிவுடன் செயற்பட்டு முடிக்க வேண்டும்.
எனவே, இப்போது அறிவித்துள்ள 2023ஆம் ஆண்டிலிருந்தே ஊட்கத்தமிழ் விருதிற்கான பரிசுத்தொகையை இரண்டுநூறாயிரமாக உணர்த்தியும் தங்கப்பதக்கத்தை 1 சவரனாக உயர்த்தியும் அகரமுதலி இயக்ககக்தின் பிற விருதுத் தொகைகளையும் உயர்த்தியும் சமநிலை பேண அன்புடன் வேண்டுகிறோம்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்
இதழுரை – அகரமுதல
தூய தமிழ்ப் பயன்பாடு என்பதுதான் தமிழ் இன்றும் வளர்ந்தோங்கி நிற்கக் காரணம். மற்ற திராவிட மொழிகளைப் போல் காலம் போன போக்கில் அயற்சொல் கலப்பை நீடிக்க விட்டிருந்தால் தமிழும் இன்று மற்ற மொழிகள் போல் இந்திக்குப் பின்னால்தான் நிற்க வேண்டியிருந்திருக்கும். மறைமலை அடிகளார், பாவாணர், இலக்குவனார் போன்ற தூய தமிழ்ப் பற்றாளர்கள்தாம் தமிழை அயற்சொல் கலப்பின்றிப் பயன்படுத்த வேண்டியதன் கட்டாயத்தை எடுத்துரைத்து அதை திராவிட இயக்கங்களும் முன்னெடுக்க இன்று தமிழ் மொழியானது ஆங்கிலத்தை விட அதிகச் சொல்வளம் கொண்ட மொழியாகத் திகழ்கிறது. எனவே தூய தமிழைப் பேணுபவர்களுக்கு அரசு கூடுதல் முதன்மை வழங்கல் வேண்டும். உங்கள் கோரிக்கை சரியானது ஐயா! இவற்றையெல்லாம் தொடர்ந்து நுட்பமாகக் கவனித்து எழுதி வருபவர் தாங்கள்தாம்.
தெளிவான சரியான கருத்திற்கு நன்றி நண்பரே.