(சட்டச் சொற்கள் விளக்கம் 481-490 : இலக்குவனார் திருவள்ளுவன்-தொடர்ச்சி)

491. Achromatic (achromatically)எழுதப்பெறா  
வாய்மொழியான
எழுத்தில் வராததான
நிறமற்ற சாயல் மற்றும் செறிவு இல்லா  

இச்சொல் சட்டத்தில் எழுத்தாவணமற்ற வாய்மொழிக் கூற்றைக் குறிக்கிறது. எனவே, எழுதப்பெறா ஆவணம் எனலாம்.
492. Acidஎரி நீர்மம்
எரிமம்  
புளிமம்
காடிப் பொருள்  
அமிலம்    

இந்தியத் தண்டனைச் சட்டம், 1860 குற்றவியல் சட்டம் (திருத்தச்) சட்டம், 2013 இன் பிரிவு 326(ஆ) இன் விளக்கம் 1 இன் கீழ், எரிமம்  பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது: ” காடித்தன்மை அல்லது அரிக்கும் தன்மை அல்லது எரியும் தன்மை கொண்ட எந்தப் பொருளும், உடல் காயத்தை உண்டாக்கும் திறன் கொண்டது; வடுக்கள் அல்லது சிதைவு அல்லது தற்காலிக அல்லது நிரந்தர ஊனம் ஏற்படுத்துவது”.
493. Acid attack            எரிமத்தாக்குதல்  

எரிமத் தாக்குதல்கள் / எரிமம் என்ற சொற்கள் “(எரிமவழிக்) குற்றங்களைத் தடுக்கும்  சட்டம் 2008” (பெண்களுக்கான தேசிய ஆணையம் – முன் வரைவு)  மூலம் வரையறுக்கப்பட்டுள்ளது.

“எரிமத்தாக்குதல்” என்பது, ஒருவர் மற்றவருக்கு நிலையான அல்லது பகுதியளவு சேதம் அல்லது சிதைவு அல்லது சிதைவை ஏற்படுத்தக்கூடும் என்ற நோக்கத்துடன் அல்லது தெரிந்தே அவர் உடல் மீது எந்த வகையிலும் எரிமத்தை (அமிலத்தை) வீசுவது அல்லது எரிமத்தைப் பயன்படுத்துவது. பிரிவு 326 அ, நிலையான  அல்லது பகுதியளவு தீங்கு, சிதைவு, உருக்குலைவு, தீக்காயங்கள் அல்லது இயலாமை ஆகியவற்றை வேண்டுமென்றே ஏற்படுத்த  எரிமத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவதைக் குறிக்கிறது  

‘நிருபயா’ கூட்டு வன்புணர்ச்சி வழக்கு, 2013இல் நீதிபதி வருமா ஆணைய அறிக்கையைத் தொடர்ந்து, ஒன்றிய அரசு இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்து, எரிம வீச்சுகளைத் தனி குற்றமாக அங்கீகரித்து குறைந்தது 10 ஆண்டுகள் தண்டனையும், அதிக அளவு ஆயுள் தண்டனையும் விதிக்க வகைசெய்யப்பட்டது.  

பாதிக்கப்பட்டவரின் மருத்துவச்செலவை ஈடுகட்டும் வகையில் இழப்பீட்டுத் தொகையை ஒறுப்புத் தொகையாக விதிததலும் ஆகும்.  

இந்தியத் தண்டிப்புத் தொகுப்பு, பிரிவு 326 (ஆ) இன் கீழ்த் தானாக முன்வந்து எரிமத்தை  வீசுவது அல்லது வீச முயல்வது குற்றமாகும். குற்றவாளிக்கு குறைந்தது  ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும், அஃது ஏழு ஆண்டுகளாக அதிகரிக்கப்படலாம். ஒறுப்புத் தொகையும் விதிக்கலாம்.  

குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 357- (ஆ) பின்வருமாறு கூறுகிறது:
“பிரிவு 357 (அ) இன் கீழ் மாநில அரசு செலுத்த வேண்டிய இழப்பீடு, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 326(இ) அல்லது பிரிவு 376(ஈ) இன் கீழ் விதிக்கப்படும் ஒறுப்புத் தொகையுடன் கூடுதலாக அரசும் இழப்பீடு செலுத்த வேண்டும். ”   குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 357-(இ) பின்வருமாறு கூறுகிறது: மத்திய அரசு, மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது வேறு எந்த ஒருவராலும் நடத்தப்படும் அனைத்துப் பொது அல்லது தனியார் மருத்துவமனைகளும், இந்தியத் தண்டிப்புச் சட்டத்தின் பிரிவு 326(அ), 376, 376(அ), 376(ஆ), 376(இ), 376(ஈ) அல்லது பிரிவு 376(உ) ஆகியவற்றின் கீழ் வரும் எந்தவொரு குற்றத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முதலுதவி அல்லது மருத்துவப் பண்டுவத்தை(சிகிச்சையை) இலவசமாக வழங்க வேண்டும்.
494. Acid oilஎரிம எண்ணெய்  
காடி எண்ணெய்
எரிம நெய்
வழலை நெய்  
தூய்மைப்படுத்து நிலைய எண்ணெய்  

காடி எண்ணெய் தரங்குறித்து பல வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன,
495. Acid testகடுந்தேர்வு  

புளிம ஆய்வு, எரிமச்சோதனை என்பன நேர் பொருளாக இருந்தாலும் பயன்பாட்டில் கடுந்தேர்வு எனப் பொருள் படுகிறது.   தீத் தேர்வு(அக்கினிப் பரீட்சை) என்றும் சொல்லலாம்.  

ஒப்பந்தங்களில் கடுந்தேர்வு(எரிம ஆய்வு):  மேட்சு எதிர் தலைமை வழக்குரைஞர்(Meates v Attorney-General)வழக்கில்  நீதிபதி குக்கின்(Cooke) கூற்றுப்படி, சலுகை, ஏற்பு அடையாளம் காண முடியாத ஒரு வழக்கில் கடுந்தேர்வு(எரிம ஆய்வு) என்பது, “இரு தரப்பிலும் உள்ள நியாயமான ஆட்களின் கண்ணோட்டத்தில் ஒட்டுமொத்தமாகவும் புறநிலையாகவும் பார்க்கும்போது, கொடுக்கல் வாங்கல்கள் ஒரு முடிவுற்ற பேரத்தைக் காட்டுகின்றனவா என்பதாகும்.”  
496. Acidificationஎரிமமாக்கம்
காடியாக்கம்  

பெருங்கடல் காடிமயமாக்கல் – கடல், அதன் வனவிலங்குகள், அவை வழங்கும் பொருட்கள், அவை வழங்கும் ஊழியங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. பன்னாட்டுக் குமுகம் நிலையான வளர்ச்சி இலக்குகளின் ஒரு பகுதியாக கடல் காடிமயமாக்கலை ‘குறைக்கவும் சரி செய்யவும் நிவர்த்தி செய்ய’ உறுதியளித்துள்ள நிலையில், இஃது எவ்வாறு நிறைவேற்றப்பட வேண்டும் என்பது தெளிவாக இல்லை. குறிப்பாக இந்தச் சிக்கலைச் சமாளிக்க வெளிப்படையாக வடிவமைக்கப்பட்ட பன்னாட்டு  ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை.  
497. Acido meter / acidimeterஎரிமமானி  
காடிமானி
புளிமமானி  

ஒரு காடிக்  கரைசலின் ஒப்பீட்டு அடர்த்தியை அளவிடுவதற்கான ஒரு வகை நீர்மமானி.  
498. Acifidifying agentஎரிம ஊக்கி  
காடி ஊக்கி  

காடியாக்கிகள் கனிம வேதிமங்கள் ஆகும். அவை ஒரு மனித (அல்லது பிற பாலூட்டி) உடலில் வைக்கப்படுகின்றன, அவை காடியை உருவாக்குகின்றன அல்லது காடியாக மாறுகின்றன.  இந்த வேதிமங்கள் உட்கொள்ளப்படும்போது வயிற்றில் இரைப்பைக் காடியின்  அளவை -திறன் நீரகம் அல்லது ஆற்றல் நீரகம் (pH=potential of hydrogen or power of hydrogen) அளவை அதிகரிக்கின்றன.  
499. Acknowledgeஒப்புகை  

ஒப்புக்கொள்
ஏற்றுக்கொள்  
உண்மையென்று ஏற்றுக்கொள்,
‘எனது’ என்று ஒப்புக்கொள்.
நன்றியோடு ஏற்றுக்கொள்,
பெற்றுக்கொண்டதைத் தெரிவி,

பிறர் உடைமையை அல்லது உரிமையை ஒப்புக்கொள், சட்ட முறைப்படி ஒப்புக்கொள் என இடத்திற்கேற்பப் பொருள் படும்.   சட்டத்தில் ஒப்புதல் என்பது சட்டம் செல்லுபடி ஆவதற்குரிய ஒருவரின் சொந்தச் செயலின் அறிவிப்பு அல்லது ஏற்பு ஆகும். இது, தவறான ஆவணங்கள் அல்லது மோசடியான தண்டனைகளைப் பதிவதைத் தடுக்கும். சட்டப்படி பிணைப்பு / செல்லுபடியாகும் என ஏற்றுக்கொள்ளுதல்.    (யாரொருவராலோ) உரிமை கோரப்படுவதை ஏற்றுக்கொள் அல்லது அவரது அதிகாரத்தையும் அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்.

காண்க Acknowledgement  
500. acknowledge due, by registered postபதிவஞ்சல் ஒப்புகையுடன்  

ஒருவருக்கு மடலை அல்லது ஆவணத்தை அல்லது வழக்குக் கேட்பு விவரத்தை அல்லது குற்ற உரையை அல்லது வாதுரையை அல்லது எதிர் வாதுரையை அல்லது அழைப்பாணையை அல்லது  ஏதேனும் ஒன்றை அஞ்சல் பெட்டியில் இடாமல் அஞ்சலகத்தில் அஞ்சற் பணியாளரிடம் பதிந்து அனுப்பிய பின், முகவரியாளரிடம் அது சேரும் பொழுது அதனைப் பெறுபவர் பெற்றதற்கு அடையாளமாக ஒப்புகையைக் கையொப்பமிட்டு அல்லது கைநாட்டிட்டுத் தெரிவிக்கும் அட்டையை இணைத்து அனுப்புதல்.  

(தொடரும்)