(சட்டச் சொற்கள் விளக்கம் 531-540 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

541. Acquiring Propertyசொத்தினை அடைதல்  

வணிகச்சொத்துகள் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் மூலம் தொடர்ந்து கை மாறுகின்றன.

சொத்து கையகப்படுத்தல் என்பது மனைவணிகச்சொத்தின் மீது உரிமை அல்லது உரிமைகளைப் பெறுவதற்கான செயல்முறையைக் குறிப்பது.
542. Acquisition  கையகப்படுத்துதல்  

அகப்படுத்தல்,

கைப்பற்றுகை, கைப்பற்றல், கைக்கொள்ளல்,

ஈட்டல்,

திரட்டூக்கம், 
ஊறல்,
அடைவு,
செயல்,
தேட்டம், 
உழைப்பு,
பெற்றி,
பேறு, உரிமை, 
சேகரம்,
சம்பாத்தியம்,
ஈட்டியது,
முயன்றடைதல், 
வித்தி.  

சம்பத்தி, ஆர்ச்சனம், ஆர்ச்சிதம்,சப்தி, சம்பிராத்தி முதலிய பிறமொழிச் சொற்களைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டும்.  

தனியார் சொத்துகளைப் பொதுச் செயல்களுக்காக அரசாங்கமே சட்டப்படி எடுத்துக் கொள்ளுவது, கையகப்படுத்தல் அல்லது நில எடுப்பு எனப்படுகிறது.  

கல்வி நிறுவனங்கள் அமைத்தல், பாலம் கட்டுதல், சாலை போடுதல், பொதுக் குடியிருப்புத் திட்டங்கள், குடிசைமாற்றுத் திட்டங்கள், ஊரகத்திட்டங்கள், நல வாழ்வு நிலையம் அல்லது மருத்துவமனை போன்ற பொதுக்கட்டடங்கள் கட்டுதல் ஆகிய பொதுநலச செயல்களுக்குத் தேவையான நிலங்களைத் தனியாரிடமிருந்து அரசு, தக்க இழப்பீடு தந்துவிட்டு, சட்டபடி தன் கைவசம் எடுத்துக் கொள்வதே இது.   

இந்தியா, பாகித்தான் ஆகிய நாடுகளில், தனியார் வசமுள்ள நிலத்தை, அரசு பொது நோக்கத்திற்காகக் கையகப்படுத்தத் துணை செய்ய ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டம் நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1894 ஆகும். இது வெவ்வேறு காலக்கட்டங்களில் பல திருததங்களுக்கு உள்ளானது.  

இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) 2011 செட்டம்பர் 7 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் நில எடுப்பு, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை வரையறை ஆகியவற்றை விளக்குகிறது. இச்சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீட்டு உரிமை, வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு-மீள்குடியேற்றச் சட்டம்(Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013) அல்லது நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 2013 என்று மாற்றியமைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டது.  

சிறப்புப் பொருண்மிய வலயச் சட்டம் (2005), அணுத்திறன் சட்டம் (1962), இருப்பூர்திச் சட்டம் (1989) முதலிய பதினாறு சட்டங்களின் கீழ் நிகழும் கையகப்படுத்தல், இச்சட்டத்தின் பரப்புக்குள் வாரா.
543. Acquisition and transfer of undertaking  எடுப்பிற்குரியவற்றைக் கையகப்படுத்தலும் (உரிமை) மாற்றலும்  

கையகப்படுத்தலும் ஏற்பு நிறுவனங்களை மாற்றலும்   எடுத்துக்காட்டாக ஏற்புவங்கி நிறுவனத்தை/நாட்டுடைமையாக்கப்பட்டநிறுவனத்தை (under taking bank)கையகப்படுத்தி  அதன் உரிமையை மாற்றுதல்  
544. Acquisition by prescription  நீடிய துய்ப்புரிமையால் ஈட்டுதல்

நீண்ட காலத் துய்ப்புரிமை அடிப்படையில் சொத்தினை அல்லது சொத்துமீதான சில உரிமைகளை அடைதல்.  

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம் 1882, பிரிவு 15(S. 15 IEA,1882)   பிரிவு4(2) இந்திய மீன்பிடிச் சட்டம், 1897  

prescription என்றால் பெரும்பான்மை மருத்துவர் எழுதித்தரும் மருத்துவக் குறிப்பு என்றே கருதுவதால் அப்பொருளில் சில அகராதிகளில் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அது பொருந்தாது.
545. Acquisition By Transferமாறுதல் வழி அடைதல்  

மாறுதல் வழிக் கையகப்படுத்தல்  

ஒன்றின் உரிமையை அதன் பங்குகளை மாற்றிப் பெறுதல் மூலம் அடைதல்
546. Acquisition Of Citizenshipகுடியுரிமை பெறுதல்  

பிறப்பால்(பிரிவு 3), பதிவால்(பிரிவு 5), மரபு வழியால்(பிரிவு 4), குடியுரிமை அளிப்பால்(பிரிவு 6), வாழ்நிலத்தை எல்லை வரம்பில் சேர்த்துக் கொள்வதால் குடியுரிமை பெறப்படுகின்றது. (இந்தியக் குடியுரிமைகள் சட்டம்  1955)
547. Acquisition Of Domicile  வாழ்வகம் கொள்ளல்  

வாழ்விடம் கொள்ளல்

வாழிடம் கொள்ளல்

உறைவிடம் கொள்ளல்  

ஒருவர் தன் உரிம மூலம் இல்லாத ஒரு நாட்டில் தன் நிலையான வாழ்விடத்தை அமைத்துக் கொள்வதன் மூலம் புதிய குடியிருப்பைப் பெறுகிறார்.   இந்திய வழியுரிமைச் சட்டம்( The Indian Succession Act,) 1925
548. Acquisition Of Easements  துய்ப்புரிமைகளைப் பெறுதல்  

easement என்றால் வசதி உரிமைகள் என்கின்றனர். இவ்வாறு சொல்வதை விடப்பயன்பாட்டு உரிமை என்னும் பொருளில் துய்ப்புரிமை எனச் சுருக்கமாகக் கூறலாம்.  

இந்தியத் துய்ப்புரிமைச் சட்டம், 1882,(The Indian Easements Act, 1882) பிரிவு 12, அசையாச் சொத்தின் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட உரிமையாளர்களில் ஒருவர், மற்றவர் அல்லது மற்றவர்களின் இசைவுடன் அல்லது இசைவின்றி அத்தகைய சொத்தின் பயன் நுகர்ச்சிக்காக, துய்ப்புரிமையைப் பெறலாம் என்கிறது.  

கூட்டுரிமையாளராலும் துய்ப்புரிமை பெறலாம். இந்நேர்வில் பிற கூட்டுரிமையரின் இசைவு தேவையில்லை.
549. Acquisition Of Gain  ஆதாயம் அடைதல்

ஆதாயத்தைக் கையகப்படுத்தல்  

ஒரு நிறுவனம் மற்றொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் வணிக ஒருங்கிணைவு. இதில், நிறுவனம் 50%இற்கு மேற்பட்ட பங்குகளை வாங்குகையில்  வாங்கப்படும் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெறும் ஆதாயம் அடைகிறது.
550. Acquisition Of Landsநிலக் கையகப்படுத்தல்  

நிலங்களைக் கையகப்படுத்துதல்  

நில எடுப்பு  

பொது நன்மை கருதி அரசு நிலத்தை எடுத்துக் கொள்ளுதல்.
காண்க: Acquisition- கையகப் படுத்துதல்