(சட்டச் சொற்கள் விளக்கம் 751-760 : தொடர்ச்சி)

761. Adequate Groundsபோதுமான காரணங்கள்‌  

ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள, நீக்க, வழக்கினை எடுத்துக் கொள்ள, வழக்கைத் தள்ளுபடி செய்ய, மேல் முறையீட்டை எடுத்துக்கொள்ளப் போதுமான தற்சார்பான காரணங்கள் இருத்தல்.  

மாநில நீதிமன்றங்களில் இருந்து வரும் வழக்கை எடுத்துக் கொள்ள உச்ச நீதி மன்றம்  தரப்பாட்டை வரையறுப்பதற்கான போதிய காரணங்கள்.
762. Adequate Reasons To The Contraryமாறாகச் செய்வதற்குப் போதிய காரணங்கள்  

மாறாகப் போதுமான காரணங்கள்  

மலைவு(contrary) ஆகப் போதுமான காரணங்கள்

  முன் முடிவிற்கு எதிராகச் செயற்படுவதற்குரிய எதிரிடையான, முரணான, மாறுபாடான காரணங்களாகும்.  

நீதி மன்றத் தீர்ப்பில் பதிவு செய்ய வேண்டிய தனித்த போதிய காரணங்கள் எதிரிடையாக இல்லையெனில்,  அதற்குரிய தண்டனை ஓராண்டிற்குக் குறைவாக இருக்கக்கூடாது. (சுங்கச்சட்டம், 1962, பிரிவு 135/ Section 135 in the Customs Act, 1962)  

இடம், காலம், கலை, உலகம், நயம், ஆகமம் என்பவற்றைப் பொருத்தமின்றிக் கூறுகை யாகிய குற்றம் அறுவகை மலைவாகும் (contrary).
763. Adequate Reliefபோதுமான மாற்றீடு  

relief என்னும் சொல் உருவாவதற்குக் காரணமான ஃபிரெஞ்சுச்சொல்லான relief        என்பதற்கு உதவி எனப் பொருள். பழம் ஃபிரெஞ்சுச் சொல்லான relever என்பதற்குத் தணி, விடுவி எனப் பொருள்கள். rilievo/relievo ஆகிய இத்தாலியச்சொல்லில் இருந்துபிரெஞ்சிற்குச் சென்று ஆங்கிலத்திற்கு வந்தது.

relevare  என்னும் இலத்தீன் சொல்லிற்கு எழுப்பு, ஒளி உருவாக்கு எனப் பொருள்கள்.   ஒரு துயரம் நேர்ந்ததும்  அச்சூழலில் உதவுவதாக,  அத்துயரத்தைத் தணிப்பதாக, அதிலிருந்து விடுவிப்பதாக,  அதிலிருந்து நல்ல நிலைக்கு எழுப்புவதாக,  துயர இருளைப் போக்கும் ஒளியை உருவாக்குவதாக உள்ள செயற்பாடே இச்சொல். 

நிவாரணம் என்று முதலில் சொன்னார்கள். அது தமிழல்ல என்பதால்  துயரத்தைத் துடைப்பதற்கு உதவுவது என்னும் பொருளில் துயர் துடைப்பு உதவி எனக் கூறி வந்தோம். துயரத்தை முழுவதுமாகத் துடைக்க முடியாது. ஓரளவு  தணிக்கத்தான் முடியும் எனக் கருதித்,  துயர் தணிப்பு உதவி என இப்போது கூறுகின்றோம்.  ஓர் அயற்சொல்லுக்கு மாற்றாக மூன்று சாெற்களின் கூட்டைச் சொன்னால் அயற்சொல்தான் நிலைக்கும். எனவே, சுருக்கமாக மாற்றீடு எனலாம். நேர்ந்த துயரத்திற்கு மாற்றாக இணையான ஈடு எதுவும் இல்லை என்றாலும் ஓரளவேனும்ஈடு செய்ய உதவுவது. எனவே, மாற்றீடு என்றே பயன்படுத்துவோம்.  

புயல், வெள்ளம், மழை, நிலநடுக்கம், கடல் கோள், இடி மின்னல் தாக்குதல் முதலிய இயற்கைச் சீற்றங்களாலும்  கட்டடம் இடிந்து விழுதல், துயர நேர்ச்சி(விபத்து) போன்றவற்றாலும் நேரும் இழப்பிற்கு அவற்றை ஈடுகட்டும் வகையில் போதிய அளவு தருவது போதிய மாற்றீடு.
764. Adherenceகடைப் பிடித்தல்‌  

பின்பற்றல்  

பின்பற்றி ஒழுகல்  

ஒட்டுறவு  

ஒட்டு    

காரணம் அல்லது நம்பிக்கையின் மீது ஏற்படும் பற்று.  

ஒரு பொருள் அல்லது மேற்பரப்பில் வேகமாக ஒட்டிக்கொள்ளும் தரம் அல்லது செயல்முறை.  

நோய் வராமல் இருப்பதற்கான உண்ணும் முறையைக் கடைப்பிடிக்க   அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல துய்க்க துவரப் பசித்து (திருக்குறள் 944)   என்கிறார் திருவள்ளுவர்.  

ஆணுக்குரிய நாற்குணங்களுள் கொண்ட பொருளை மறவாமையாகிய ‘கடைப்பிடி’ ஒன்றெனப்படுகிறது.(மற்ற மூன்று அறிவு, நிறை, ஓர்ப்பு என்பனவாகும்.)  

கற்றதைக் கடைப்பிடிக்க வேண்டும்.   எனவே, சட்ட விதிகளை, சட்ட நடைமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.
765. Adhesive Stampஒட்டு வில்லை  

ஒட்டக்கூடிய முத்திரை வில்லை   .

தேவையான முத்திரைக் கட்டணம் செலுத்திய பின், சட்ட ஆவணங்களில் ஒட்டப்படும் முத்திரை வில்லை.

அஞ்சல் வில்லைகளும் அஞ்சல் சாரா வில்லைகளும் உள்ளன. அஞ்சல் சாரா ஒட்டு வில்லைகள்,காப்பீடு,  உறுதிப் பத்திரம், பங்குப் பரிமாற்றம் போன்றவற்றில் ஒட்டப்படுகின்றன. இவ்வாறு ஒட்டினால்தான் அவை ஏற்கப்பெறும்.

மாநில முத்திரைச்சட்டம், பிற பயன்பாட்டிற்காகச் சிறப்பு ஒட்டு வில்லைகளைப் பயன்படுத்த இசைவளிக்கலாம்.
766. Aditio Hereditatisபரம்பரை அணுகுமுறை;  

பரம்பரை அணுகல்  

மரபுரிமையர் அல்லது இறுதி முறியில் பரம்பரையர்க்கு உரிமை வழங்குதல்.

இலத்தீன் தொடர்
767. Adjective Law        செயல்முறைச் சட்டம்  

நடைமுறைச்சட்டம்(procedural law) என்றும் சொல்கிறார்கள்.  

நீதிமன்றச் செயற்பாட்டு ஆளுமையையும் அரசும் தனியாரும் பல்வகை நீதிமன்றங்களிலும் தம் உரிமைகளைச் செயற்படுத்தும் முறைகளையும் குறிக்கிறது.
768. Adjoining Landதொட்டடுத்த நிலம்  

அடுத்துள்ள நிலம்‌  

பிறருக்கு உரிமையான சொத்துடைமையால் பிரிக்கப்படாத பக்கத்து நிலம்.  

தொட்டடுத்த நிலம்:   மலையாளத்தில் இப் பழந்தமிழ்ச் சொல் நிலைத்துள்ளது.
769. Adjoining Stationதொட்டடுத்த நிலையம்  

காவல் அதிகாரி   அவரது பணி வரம்பிற்கு அப்பாற்பட்ட அல்லது தொட்டடுத்த நிலைய வரம்பில் உள்ள ஒருவரை,  புலனாய்விற்கு அழைக்கக்கூடாது – தில்லி உயர்  நீதி மன்றம்   குற்றநடைமுறைத் தொகுப்பு 1973 பிரிவு 160 உம்(Section 160 in The Code Of Criminal Procedure, 1973)  இதைத்தான் வலியுறுத்துகிறது.
770. Adjournஒத்திப்போடுவது  

வழக்கை வேறு நேரத்திற்கோ வேறு நாளுக்கோ தள்ளி வைப்பது.  

ஒதுக்கிப்போடு-தல், ஒற்றிப்போடு-தல், ஒற்றிவை-த்தல், தவணை தள்ளிவைத்தல்

ஒற்றிவை > ஒத்திவை  

நிலத்தை ஒருவரிடம் பொருத்தி வைக்கும் அடைமானம் அல்லது உடைமையை நுகரும் உரிமையுடன் கூடிய அடைமானம் என்பதை ஒற்றி வைத்தல் என்பர்.

தனக்குரிய உரிமை நுகர்வைச் சிறிது காலம் தள்ளிப்போடுவதுபோல், தள்ளிப்போடுவதற்கும் ஒற்றி என்றாகி ஒத்தி என்றானது.  

வழக்கினைப் பின்னொரு நாளுக்குத் தள்ளிப்போடுவதால் பின்போடு என்றும் கூறுகின்றனர்.   சான்று உசாவலுக்காக வழக்கை ஒத்தி வைப்பதைச் “சோதனாபிரதிகாலம்” என்கின்றனர். இதனைத்தமிழில் “சான்று உசாவல் ஒத்திவைப்பு” எனலாம்.  
வழக்கினை இழுத்தடிப்பதற்காக அடிக்கடி ஒத்திவைக்கும் சூழலுக்கு ஆளாக்கும் குற்றஞ்சாட்டப் பட்டவர்களைப் பார்க்கிறோம். அத்தகையவர்களை “இழுப்பாணி” என்கின்றனர்.

Postpone = காலக்கழிவு, தடுத்துவை-த்தல், இடை நிறுத்தல்,   “காலக்கழிவு” என்கிறார் நம்மாழ்வார். “காலக்கழிவு செய்யேலே” (திருவாய்மொழி,2.9.2) ஒத்திப்போடுதல்(adjourn) என்பதிலிருந்து வேறுபடுத்து வதற்காக இதனைத் தள்ளி வைத்தல் எனலாம்.  

குடும்ப நீதிமன்றங்கள் சட்டம், 1984 இல் பிரிவு 9(3)(Section 9(3) in The Family Courts Act, 1984): (3) துணைப்பிரிவு (2) மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரம், வழக்கை ஒத்திவைப்பதற்கான குடும்ப நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகாரத்தையும் மீறியதாக இருக்கக்கூடாது.