(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 50 / 69  இன் தொடர்ச்சி)

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி

பேராசிரியர் ப. மருதநாயகம்

51 / 69

 வடமொழி ஒரு செம்மொழியா?(2020) (தொடர்ச்சி)

ஏழாவதாக வடமொழிக் கவிதையியல் நூல்கள் குறித்த கட்டுரை அமைந்துள்ளது.

“சமற்கிருதத்தில் கவிதை, நாடகம்பற்றிய கோட்பாடுகளை ஆராயும் பல நூல்கள் காணப்படுகின்றன.இவற்றுள் பல தமிழை முதலாகக் கொண்ட பிற இந்திய மொழிகளில் காலந்தோறும் எழுதப்பெற்ற நூல்களின் தழுவல்களாகவும் மொழி பெயர்ப்புகளாகவும் சுருக்கங்களாகவும் விரிவாக்கங்களாகவும் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை ” என்கிறார் பேரா.ப.ம.நா. பாணினியின் அட்டாத்தியாயி, பரத முனிவரின் நாட்டிய சாத்திரம், பாமகர், ஆளந்தவர்த்தனர், அபிநவகுத்தர், வாமனர், குந்தகர்போன்றவர்கள் எழுதிய நூல்கள்யாவுமே தொல்காப்பியத்திற்குக் காலத்தால் பிற்பட்டவை என அறிஞர் ஆய்ந்து தெரிவித்துள்ளனர்.

இவற்றுள் பாணிணியின் இலக்கண நூலிலும் நாட்டிய சாத்திரத்திலும் கவிதையியல்பற்றி ஒன்றும் இல்லை. சமற்கிருத நூலார் கூறும் கவிதையியல் குறைகளையும் தமிழின் தழுவல்களையும் அடுத்து எடுத்துரைக்கிறார். கிரேக்க உரோமானியக்கவிதையியல் நூல்கள் பற்றி எலுடர் ஆல்சன்(Elder Olson) கூறும் கருத்துகள் சமற்கிருதக் கவிதையியல் நூல்களுக்கும் பொருந்தும் என்கிறார். அவையாவும் கவிஞர்களின் தகுதிகள், கவிதையின் பயன், கவிதையின் ஏதேனும் ஒரு கூறுபற்றிப் பேசுகின்றனவே தவிர, ஏற்கெனவே சமற்கிருதத்தில் எழுதப்பெற்ற கவிதைகளை யெல்லாம் ஆராய்ந்து தன்னுணர்ச்சிப்பாக்களைத் தெளிவாக வரையறுக்கவில்லை என்கிறார். சமற்கிருதக் கவிதையியல்பற்றி(History of Classical Sanskrit Literature என்னும் நூலில்) அதனாசிரியர் பட்டாச்சார்சி என்னும்  வங்கப்பெண்மணியும் அவ்வாறுதான் எழுதியுள்ளார் எனக் குறித்துள்ளார். சமற்கிருதத்தில் முதலில் எழுதப்பெற்ற நாடகங்கள் கிரேக்க இன்பியல் நாடகங்களின் தாக்கத்திற்கு உட்பட்டவை என்பது அன்னார் தெரிவிக்கும் ஆய்வு முடிவு.

நார்த்துராப்பு ஃபிரை(Northrop Frye) என்னும் கனடாக் கல்வியாளர் தமது திறனாய்வின் பகுப்பாய்வு(Anatomy of Criticism) என்னும் நூலில் எல்லா மொழி இலக்கியங்களையும் எல்லா வகை இலக்கியங்களையும் உள்ளடக்கக்கூடிய ஒரு கவிதை இயலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அவர் முயற்சி பெரும் பாராட்டிற்குரியதாயினும் தொல்காப்பியரின் வரையறையிலும் பாகுபாட்டிலும் உள்ள நிறைவையும் தெளிவையும் அவரது இலக்கியவியலில் காணமுடியாது என்கிறார் பேரா.ப.ம.நா.

சமற்கிருதக் கவிதையியல் நூல்களுக்கு இற்றைக்கு ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு  முன் தரப்பட்ட விளம்பரம் அளவிடற்கரியது. ஆனால், தொனி, வக்குரோத்தி போன்ற கோட்பாடுகளெல்லாம் தொல்காப்பியர் கூறும் இறைச்சி, உள்ளுறை போன்ற கோட்பாடுகளுக்குப் பெரிதும் கடன்பட்டவை யென்றும் தமிழ்க்கவிதையியலுக்குச் சமற்கிருதக் கவிதையியல் குறைந்தது பத்து நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்டதென்றும் சியார்சு ஆர்த்து தமது ஆய்வுமுடிவுகளை வெளியிட்டார். இதன் பின்னர் அத்தவறான பரப்புரை எடுபடாமல் போயிற்று.தொல்காப்பிய-சங்கக் கவிதையியல்பற்றி ஏ.கே.இராமானுசன்  எழுதிய கட்டுரைகள் சமற்கிருதக் கவிதையியலின் பொய்ப்பெருமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தன.

பதஞ்சலியின் (இ)யோக சூத்திரம் குறித்து விளக்குவது எட்டாம் கட்டுரை.

தமிழ்இலக்கியங்களின் காலத்தையும் சிறப்புகளையும் பின்னுக்குத் தள்ளும் ஆரியத்தைப் பல இடங்களிலும் சுட்டிக்காட்டுவதுபோல் இதிலும் பேரா.ப.ம.நா. பின்வருமாறு எடுத்துரைக்கிறார்:

திருக்குறளின் கருத்துகளும் உவமைகளும் உருவகங்களும் மனுநூலிற்கும் கெளடலீயரின் அருத்தசாத்திரத்திற்கும் வாத்தியாயனரின் காமசூத்திரத்திற்கும் சுக்கிரநீதிக்கும் சென்றதைப்போலவே பதஞ்சலியின் இயோகசூத்திரத்திற்கும் சென்றிருப்பதைக் காணலாம். எல்லா வடநூல்களும் எல்லாப் பழந்தமிழ் நூல்களுக்கும் முந்தியவை என்ற தவறான எண்ணம் தக்க ஆதாரங்கள் இல்லாமல் வலியுறுத்தப்பட்டபோது ஒற்றுமைகள் கண்டபோதெல்லாம் வடநூல்களிலிருந்தே தமிழ்நூல்கள் அவற்றை யெல்லாம் பெற்றுள்ளன வென்பதைத் தமிழறிஞர்களும் தாழ்வுமனப்பான்மை காரணமாகவும் பட்டம் பதவிகள் மேலிருந்த ஆசை காரணமாகவும் ஏற்றுக் கொண்டனர்.

வையாபுரி(ப் பிள்ளை) இத்தகைய முடிவுகளுக்குத் தம்மாலான பங்களிப்பைச் செய்தார். பண்டிதமணி, தெ.பொ.மீ. போன்றவர்கள்  தமிழும் வடமொழியும் அறிந்தவர்களாயிருந்தும் பல ஒப்புமைகளைத் தாமே கண்டறிந்த வழியும் அவை தமிழ் இலக்கியங்களிலிருந்தே வடநூல்களுக்குச் சென்றிருக்க வேண்டும் என்று சொல்லாமல், அகில இந்திய அறிவு மரபிலிருந்து தமிழ், வடமொழிப்புலவர்கள் இவற்றைப் பெற்றிருக்க வேண்டுமென்று கூறினர். அருத்தசாத்திரத்தைத் தமிழுக்குக் கொண்டுவந்த பண்டிதமணி திருக்குறளிலும் வடநூலிலும் காணப்படும் ஒற்றுமைகள் பலவற்றைச் சுட்டிக்காட்டுகிறார். ஆனால் திருக்குறளைக் காலத்தில் பிந்தையதாகக் கூறிய அக்காலச் சிலரின் கருத்துகளால் திருக்குறள்தான் மூலநூல் என்று சொல்லத் தயங்கியுள்ளார்.

‘நூல்களிலெல்லாம் சிறந்த நூலாகிய திருக்குறள்’(Thirukkural as the Book of Books) என்னும் ஆங்கிலக் கட்டுரையில், விபுலானந்த அடிகள் திருக்குறளுக்கும் (இ)சூத்திரத்திற்கும் உள்ள ஒப்புமைகளைக் கூறுகிறார். ஏறத்தாழ 40அதிகாரங்களில் உள்ள குறள் கருத்துகள் (இ)யோகசூத்திரத்தில் உள்ளதை விளக்குகிறார். இருப்பினும் அப்போது தவறான காலக்கணிப்பு திணிக்கப்பட்டதனால், திருக்குறள்தான் மூலம் என்று சொல்லத் தயங்கியுள்ளார்.

பதஞ்சலி முனிவரின் நூலில் கையாளப்படும் அறுபத்தைந்திற்கு மேற்பட்ட திருக்குறள் பாக்களை நமக்கு எடுத்துக் கூறுகிறார். ஆதலின் திருக்குறளின் தாக்கம் அவரது நூலில் மிகுதியாக உள்ளதை மேனாட்டாய்வாளர்கள் ஏற்றுள்ளனர். எனவே, அகில இந்திய அறிவு மரபிற்குத் தமிழின் பங்களிப்பு எவ்வளவு பேரளவினது என்பதை இதன் மூலம் பேரா.ப.ம.நா. உணர்த்துகிறார்.

பாடதாடிதகாவும் பாணா நாடகங்களும் ஒன்பதாம் கட்டுரையில் விளக்கப்படுகின்றன.

பாடதாடிதகா என்பது பாணா என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. இதன் ஆசிரியர் சியாமிலகா கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். மன்னன் கந்த குபுதனின் காலத்தில் வாழ்ந்தவர். நான்கு புகழ்பெற்ற பாணாக்களில் பாடதாடிதகா மிகவும் நீண்டது. பாணாவை இயற்றிய ஆசிரியரே விடனாக மேடையில் நடிப்பது வழக்கம். இவ்வாறு பாணா வகையையும் பாடதாடிதகாவையும் நமக்கு அறிமுகம் செய்தபின் பாடதாடிதகாவின் கதைச்சுருக்கத்தை அளிக்கிறார். மேலும் பின் வரும் கருத்துகளையும் நமக்குத் தெரிவிக்கிறார்.

தமிழில் உள்ள ஆற்றுப்படை, பரணி, கலம்பகம், உலா, பிள்ளைத்தமிழ் போன்ற சிற்றிலக்கியச்சுவையுடன் பாணா என்னும் சமற்கிருதச் சிற்றிலக்கிய வகையை ஒப்பிட அது தகுதியற்றது; அருவருப்பூட்டும் இழிகாமக் குப்பைகள் என வடநூலாரே பாணா வகைகளைக் கூறுகின்றனர். 

வாரருசி என்பவரால் கி.பி.முதலாம் நூற்றாண்டில் எழுதப்பெற்றதாகக் கூறப்படும் உபயாபிசாரிகா என்னும் பாணா வகை நாடகம்பற்றியும் அதன் கதைச்சுருக்துடன் தெரிவிக்கிறார். எல்லாப் பாணா வகையும் தரக்குறைவானவையாகத்தான் உள்ளன. தரமற்றபடைப்புகளை எல்லாம் எங்ஙனம் செவ்வியல் இலக்கியம் எனச் சொல்ல இயலும்? 

(தொடரும்)

இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 52/69 )