பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு: நூலாய்வு

முனைவர் செ.இராசேசுவரி எழுதியுள்ள
பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டில் இருந்து சப்பானுக்கு
நூலாய்வு
1/2
நூலாசிரியர் முனைவர் செ.இராசேசுவரி, மொழிபெயர்ப்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். எட்டிற்கு மேற்பட்ட ஆங்கில நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர். ஆங்கிலத்தில் தமிழ்க்கவிதைகளையும் மொழிபெயர்த்துள்ளார். ‘தமிழணங்கு’ இதழின் ஆசிரியராக இருந்தும் வேறு சில இதழ்களில் பணியாற்றியும் இதழ் உலகிலும் முத்திரை பதித்து வருகிறார். வெளி மாநிலத்தவருக்கும் வெளி நாட்டவர்க்கும் தமிழ் மொழியும் கற்பித்துள்ளார். கிரேக்கம், எபிரேயம், சப்பானியம் முதலான மொழிகளையும் கற்றவர். எனவே, கிரேக்கம்-தமிழ் அகராதி, எபிரேயம்-தமிழ் அகராதி உருவாக்கங்களில் தன் பங்களிப்பை அளித்துள்ளார். …. விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் பண்பாட்டு நகர்வுகள் என்னும் நூலைப்பற்றி இப்பொழுது நாம் பார்ப்போம்.
158 பக்கங்கள் கட்டுரைப் பகுதிகள் கொண்ட இந்நூலில் 9 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
பண்பாட்டு ஆய்வு நூல் வரிசையில் தேவேந்திரன், பெண் தெய்வ வழிபாடு, காணாமல் போன கடவுளர் வரிசையில் இவரின் ‘பண்பாட்டு நகர்வுகள் – தமிழ்நாட்டிலிருந்து சப்பானுக்கு’ நூல் இடம் பெற்றுள்ளது.
சாம்பலில் இருந்து மீண்டு எழுந்த ஃபீனிக்சு பறவை சப்பான் எனக் கட்டுரை அளித்துள்ளார். இரண்டாம் உலகப்போரின் குண்டு வீச்சால் பேரழிவிற்கு உள்ளான சப்பான் உழைப்பால் முன்னேறி உலகநாடுகளுடன் போட்டிபோடும் நிலைக்கும் முன்னணி நிலைக்கும் வந்துள்ளதைக் குறிப்பிடுகிறார். தமிழ்நாட்டுக் கடவுள்கள் சப்பானியக் கோவில்களில் இடம் பெற்றுள்ளதையும் சப்பானிய மொழி தமிழ்மொழியுடன் நெருங்கிய தொடர்பு உடையதையும் இதில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து சப்பான் சென்றவை என்பது முதல் கட்டுரையாகும். கி.மு.261 ஆம் ஆண்டில் நடைபெற்ற கலிங்கப்போருக்குப் பின்னர், அசோகர் தம் பிள்ளைகளைத் தெற்கே அனுப்பிப் புத்த சமயத்தைப் பரப்பினார். இவ்வாறு தமிழ்நாட்டில் வேரூன்றிய புத்த சமயம் இங்கிருந்து சப்பானுக்குச் சென்றது. புத்த சமயத்துடன் தமிழ் மொழி, கலை, இலக்கியம் தெய்வ உருவங்கள் முதலானவையும் சப்பானுக்குச் சென்றுள்ளன. இவற்றை நூலாசிரியர் இக்கட்டுரையில் தெரிவிக்கிறார். 1.பெரிய புடைப்புச் சிற்பங்கள், 2. பெரிய உருவச் சிலைகள், 3. பாத வழிபாடு, 4. புகை, ஆவி மருந்து 5. தூண், 6. உணவு-உடம்பு-மருத்துவம், 7. பல துறை ஞானம், 8. தொழில் வழி சாதிப்பிரிவுகள், முதலியன தமிழ்நாட்டிலிருந்து சப்பானுக்கு நகர்ந்து பரவியதைக் குறிப்பிடுகிறார்.
தமிழும் சப்பானிய மொழியும் – சில ஒற்றுமைகள் என இரண்டாவது கட்டுரை அளித்துள்ளார். தமிழ்நாட்டிலிருந்து புத்த சமயம் சென்றபொழுது உடன் தமிழும் சென்றது என்கிறார். காஞ்சி நகரிலிருந்து சென்றதாலும் நிலையாமையைக் குறிக்கும் காஞ்சி என்னும் சொல்லாலும் சப்பானிய எழுத்துகள் காஞ்சி என அழைக்கப்பட்டதாக நூலாசிரியர் கூறுகிறார். எழுத்தொலிகள், குற்றுகரம், மெய்மயக்கம், மூக்கொலிச் சாயல், சப்பானிய மொழியில் தமிழ்ச்சொற்கள், பெயர்ச்சொல்லும் வேற்றுமை உருபுகளும், வேற்றுமை உருபுகள் இணைப்பு, வினைச்சொல் உருவாக்கம், மதிப்புச் சொற்கள், எதிர்மறைச் சொல் வடிவம், எண்ணும்மை, எண்ணுப் பெயர்கள், சுட்டுப்பெயர்களும் வினாப் பெயர்களும் ஆகிய தலைப்புகள் வழி சப்பானிய மொழி தமிழுக்குக் கடன் பெற்றதைக் குறிப்பிடுகிறார்.
“தமிழகத்திலிருந்து சென்ற பெளத்தர்கள் தமிழ்மொழியின் அமைப்பில் சப்பான் மொழியின் இலக்கணத்தைக் கட்டமைத்தனர். சங்க இலக்கியத்திற்குரிய ஐந்திணை நிலமும் பொழுதும் கருப்பொருள் பாகுபாடு போன்ற அமைப்புகளும் சப்பானின் பழங்கவிதைகளில் காணக் கிடைக்கின்றன. மொழி இலக்கணம் தவிர்த்து தொழில் அடிப்படையிலான சமூகப்பாகுபாடு, தொழில் வாரியான ஊர்கள் வழிபாடு, பழக்க வழக்கம், நம்பிக்கை போன்ற பல ஒற்றுமைகள் இரு மொழிகளுக்கும் இரு நாடுகளுக்கும் இடையே காணப்படுகின்றன” என இக்கட்டுரையின் நிறைவாகக் கூறுகிறார்.
மூன்றாவது கட்டுரை நெருப்பும் புகையும் என்பது. தமிழகத்தில் இருந்து சப்பான் சென்ற துறவிகள் இங்குள்ள பல சமய, குமுக நடைமுறைகளையும் தங்களோடு கொண்டு சென்று தாம் சென்ற நாடுகளில் புத்த சமயத்துடன் பரப்பினர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்டதில் நெருப்பும் புகையும் முதன்மை இடத்தைப் பெற்றுள்ளன என்கிறார்.
தமிழ்நாட்டில் மருத்துவப் பண்புகள் உடைய ஐயவி புகைத்தல், அகில் புகைத்தல் முதலியவை ஆசிய நாடுகளில் பரவியுள்ளன என்கிறார். இவ்வாறு பல கருத்துகளை இக்கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
நெருஞ்சி இலக்கிய இயக்கம்(தஞ்சாவூர் 613001, பேசி 7598478793) மொத்தம் 180 பக்கங்கள் கொண்ட இந்நூலை வெளியிட்டுள்ளது. இதன் விலை உரூ.200/-
சித்திரை 27, 2057 ஞாயிறு 10.05.2026 ஆற்றிய நூலாய்வுரை.






Leave a Reply