( தமிழ்ச்சொல்லாக்கம் 522-526 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 527-531

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

527. கசுபா – அகநகர்

இவர் திருநெல்வேலி அக நகரிலே (கசுபா) கீழப் புதுத் தெருவிலே குடியிருப்புடையார். ‘குப்ப குறிச்சிச் செல்லம்பிள்ளை’ என்று இவர் பெயர் மிகச் சிறப்பாய் வழங்கிவரலாயிற்று.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக்கம்-2

நூலாசிரியர்         :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

528. மார்க்க சகாயர் – வழித்துணைவர்

தனபாலன் என்னும் வணிகற்குக் குதிரைச் சேவகனாய் வழித்துணை சென்றமையாற் றிருவிரிஞ்சைப் பெருமாற்கு ‘மார்க்க சகாயர்’ என்னுந் திருப்பெயர் வழங்குதலின் அது நோக்கி ஈண்டு வழித்துணையாகியுள்ளார் என்றிடத்திற்கேற்பக் கூறினா ரென்பாருமுளர்.

நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 84

529. நியாயவாதி – வழக்கறிஞர்

முன் மேற்படிப்பு’யென்னும் 7-ஆவது பிரிவில் கூறியபடி (பக்கம் 14) நமது நண்பர் சட்டப்பரீட்சையில் தேறி வழக்கறிஞர் (நியாய வாதி) ஆன காலத்தில் சமீனைவிட்டுப் பிரிய நேரிடும் போலிருந்த சமயத்தில் ஆசிரியருக்கும் மாணவருக்குமுள்ள அன்பின் தகைமைக்கேற்ப இருவரும் பிரிந்தும் பிரியாதிருப்பதற்கு வேண்டியதற்குரிய ஏதுக்கள் திருவருளால் அமைந்துள்ளன என்பது இங்கு இப்பொழுது வெளியிடப்போகும் செய்திகளால் இனிது விளங்கும்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 பக்கம்-78)

530. இராச சம்பிரதாயம் – அரசர் வழக்கு

‘நிலைபெற்ற உலகின்க ணுண்டாக மந்திரிகள் வழக்கு மொழிந்தீர்களென்றான்’ என்றும், நிலைபெற்ற உலகின்க ணுண்டாக மொழிந்தீர்கள், இங்ஙனம் மொழிவது மந்திரிகளுக்கு வழக்கமென்றான் என்றும் பொருள் கூறி மந்திரிகள் வழக்கு, என்றதனால் இஃது அரசர் வழக்கு அஃதாவது இராச சம்பிரதாயம் ஆகாதென்னுங் குறிப்புப் பொருளுங் கூறுப.

நூல்   :           பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 94

நூலாசிரியர்         :           வா. மகாதேவ முதலியார்

531. Novel /நாவல் – புதுக்கதை (1925)

தமிழிலே ஆங்கில நுண்ணூல்களை மொழிபெயர்க்கவும், வடமொழியிலும் பிறமொழியிலுமுள்ள அரிய நூல்களை மொழி பெயர்க்கவும், தமிழ்நாட்டில் பல இடங்களிலுமுள்ள பல்வகைக் கலைத்துறைகளுக்குரிய ஏடுகளி யாவற்றையுஞ் சேர்த்து அவற்றை ஒத்துப் பார்த்து அச்சியற்றவும், தமிழிலே புதுக்கதை (நாவல்)களாகப் பிழையோடு எழுதப்படுகின்ற புத்தகங்களைத் திருத்தஞ் செய்யவும், பிழை மிக்கனவற்றைக் கண்டித்து ஒதுக்கவும், தமிழில் இலக்கணம், சங்கநூல், நீதிநூல், பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சமயநூல், சோதிட நூல் நீதிநூல், மருத்துவநூல், யோகநூல், இசைநூல், கணக்கு நூல், ஓவியம், சிற்பம், முதலியவற்றைத் தனித்தனி செம்மையாக ஆராய்ச்சி செய்யவும், ஆங்கிலத்திலே யுள்ளபடி பலவகைப் பேரகராதிகள் அமைக்கவும் வேண்டிய நிலையங்கள் ஏற்படுகின்றவரை தமிழ் வளர்ச்சி செம்மையாக நடைபெற முடியாது.

வி. சங்கரலிங்கம்பிள்ளை

நூல்   :           செந்தமிழ்ச் செல்வி

சிலம்பு 3     :           பரல், 9, 1925 செப்டம்பர். பக்கம் – 493, 494

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்