(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1061-1065 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1066-1070

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Border – வரம்புகள்
    பூஞ்செடிகளைக் சூழ்ந்து கோலப்பட்டிருக்கும் வரம்புகளில் விதவிதமான கள்ளிகளும், கீரைகளும், புற்களும், சிறு செடிகளும் உள்ளன. ஐரோப்பியரது பங்களாக்களிலேயே பூக்கள் பறிக்கப்படாமல், கொத்துக் கொத்தாகச் செடிகளிலே புன்முறுவல் தவழும் இன்முகத்துடன் மிளிர்கின்றன.
    நூல் : தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் (1968), பக்கம் : 147
    எழுதியவர் : அரு. சோமசுந்தரம், ஊழியன் 21-9.1926
    தமிழ் வாரப் பத்திரிகை, காரைக்குடி.

தொகுப்பு : ஏ. கே. செட்டியார்

  1. Under Ground Drainage – புதை சாக்கடை
    ‘எனக்கு அண்டர்கிரவுண்ட் ட்ரெயினேஜ்’ என்பதற்குத் தமிழில் எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை. நினைத்துக் கொண்டேயிருந்தேன்; சரியான சொல் கிடைக்கவில்லை. சில திங்கள் சென்றபின் ஒரு சிற்றூருக்குச் சென்றிருந்தேன்; அங்குள்ள ஒருவரிடம் என்னய்யா உங்களூரில் வளர்ச்சித் திட்டங்களெல்லாம் எப்படி? என்று கேட்டேன். அவர் விளக்குகள், சாலைகள் போடுவது போன்றவற்றைக் கூறிவிட்டுப் ‘புதை சாக்கடையும்’ அமைக்கப் போகிறார்கள் என்றார்.
    எனக்குப் புதையல் கிடைத்தது போலத் தனித்தமிழ்ச் சொல் கிடைத்தது. Under Ground Drainageகுப் புதை சாக்கடை என்ற சொல் எவ்வளவு பொருத்தம். இது போன்ற வளமான சொற்களைக் கொண்டவர்கள் நாம்.
    இதழ் : தமிழ்ப் பாவை 7, 11. 1967, மலர் -7 இதழ் – 11
    சொற்பொழிவாளர் : கி. ஆ. பெ. விசுவநாதன்
  2. கடிகாரம் – காலக் கருவி
    அறிவுடையவர்களாகத் தங்களைத் தாங்களே மதித்துக் கொண்டிருக்கும் செல்வர் சிலருக்கு முன்னுண்டது நன்கு செரித்துவிட்டது எனத் தாமறிந்து கொள்ளாமல், அறிவற்ற பொருளாகிய காலக் கருவி (கடிகாரம்) அதனையுணர்த்த, மேலும் மேலும் பஞ்சுப் பொதியடைப்பது போல வயிற்றை அடைத்துத் தமது அருமை உடலைக் கெடுத்துக் கொள்கிறார்களே! இஃதென்ன அறியாமை!
    நூல் : கட்டுரைப் பொழில் (1958), பக்கம் 15
    நூலாசிரியர் : பெருஞ்சொல் விளக்கனார். முதுபெரும் புலவர்
    அ. மு. சரவண முதலியார்
    (1936ல் நிகழ்த்திய பெரிய புராணச் சொற்பொழிவிலிருந்து எடுக்கப் பெற்றது.)
  3. மன்னார் கோயில் – மன்னார்குடி
    நூல் : மன்னார்கோயிற் புராணம் (1855)
    நூலாசிரியர் : திரிசிரபுரம் மகாவித்வான் கோவிந்த பிள்ளை, கோயில் குடி
  4. சொற்பொழிவு
    உபந்யாசம், பிரசங்கம் என்ற சொற்களுக்குப் பதிலாகத் தற்போது தமிழ் மக்களிடையே சொற்பொழிவு எனும் அழகான சொல்லை உருவாக்கியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த பால்வண்ண முதலியார் என்பவராவார். எப்படி மேடையில் பேசுவது என்பது பற்றிச் சொற்பொழிவாற்றுப்படை என்ற பெயரில் ஒரு சிறந்த நூல் இயற்றினார். உபந்நியாசம் என்பதற்குப் பதிலாகச் சொற்பொழிவு என்ற புதிய தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக அவரை அக்காலத்தில் பலர், ‘அதோ சொற்பொழிவு போகிறது’ என்று கேலி செய்தனராம்!
    இதழ் : (கலைவாணன் (25, 9, 1961), மலர் – 2. இதழ் – 21.

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்