(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904-910 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Direct Cut – நேர் வெட்டு
    ஒரு சாட்டு மாறி அடுத்த சாட்டு வருவதற்கு இங்கிலிசில் (Direct Cut) என்கிறார்கள். இதற்கு நேர் வெட்டு முறை என்று சொல்லலாம். இந்த நேர் வெட்டு முறையினால் திரை(சினிமா)க் கதையில் வேகம் காட்ட முடியும்.
    சித்ரவாணி
    இதழ் : சினிமா உலகம் (16.11. 1941)
    ⁠படம் 7; காட்சி 32 பக்கம் 12
  2. Railway Station – நீராவிப் பொறித்தொடர் நிலையம்
    திருநாங்கூர் – இவ்வூர் தஞ்சாவூர் சில்லா சீகாழித் தாலுகாவில் உள்ளது. தென்னிந்திய இருப்புப் பாதையில் சீகாழி என்கிற நீராவிப் பொறித் தொடர் நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாய்த் தென்கிழக்கே ஏழெட்டுக் கற்கள் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீசுவரன் கோவில் எனும் நிலையத்தில் இறங்கிக் கிழக்கே ஐந்தாறு கற்கள் சென்றாலும், இதனை அடையலாகும். இவ்வூர் நாங்கை எனவும் மருவி வழங்கும்.
    இதழ் : செந்தமிழ் (1941), தொகுதி – 38, பகுதி – 3
    கட்டுரையாளர் : ச. சிரீநிவாசையங்கார்
  3. பிருகதீசுரர் – பெருவுடையார்
    பராந்தகனது கொட்பேரனான இராசகேசரி முதலாம் இராசராசன் என்பவன், சிறு விளக்கில் ஏற்றிய பெரும் பந்தம் போல விளங்கினான். இவனே, பாண்டிய சேர ஈழ நாடுகளை வென்று அவற்றைச் சோழ நாட்டின் பிரிவுகளாக்கிச் சோழ சாம்ராச்சியத்தை அமைத்தவன் இவன் சிவபக்தி மிக்கவன் திருவாபரணம் முதலியவற்றைப் பெருவாரியாகக் கோயில்களுக்கு வழங்கினவன். தஞ்சை மாநகர் இவன் காலத்தில் அரசர் இருப்பாகப் பொலிவு பெற்று விளங்கியது. அந்நகரில் இவன் எடுப்பித்த இராசராசேசுவரம் என்னும் பிருகதீசுரர் (பெருவுடையார்) கோயிலொன்றே இவன் பெருமையை இன்றுவரை உலகில் விளக்கியுள்ளது.
    நூல் : மூன்றாம் குலோத்துங்க சோழன்(1941), பக்கம் : 14
    நூலாசிரியர் : வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஏ.
    ⁠(வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகம்)
  4. புத்தனேரி இரா. சுப்பிரமணியன் – முருகு
    திருமணம்
    ஆசிரியப்பா
    மணத்தலென் சொல்லே கூடுதற் பொருளிலும்,
    நறுமணங் கமழ்தல் நற்பொருள் தனிலும்,
    மங்கல மொழியாய் வருவது காண்க.
    இதழ் : திருமண அழைப்பிதழ் (1942), பக்கம் 1
    ஆக்கியோன் : புத்தனேரி இரா. சுப்பிரமணியன்
    ⁠தமிழ் நற் பெருந் தொண்டன்
    ⁠(மணநாள் தொடர்பாய் மணமகன் முருகு ஆக்கியது)
  5. Lord – பெருந்தரத்தார்
    பதினெட்டாம் நூற்றாண்டில் ஒர் ஆங்கிலப் புலமையாளர் சீன நாட்டிற் சென்று அம்மாநாட்டு மக்களுடன் கூட்டுறவுற்று அவர் மொழிக்கண் சிறந்து விளங்கிய ஒர் அரும்பெரும் பொருணூலைத் தம்மொழியிற் பெயர்த்தமைத்துப் போற்றிய வரலாற்றை அவர் எழுத்தானே, ஈண்டு எடுத்துக்காட்டித் தமிழகத்தார் யாவரும் அறிந்து அப்பெரும் பொருணூற் பொருள்கள் நம் தமிழ் மொழிக் கண்ணும் பொதிந்து நிலையுறுதல் நன்றும் போற்றற் பாலதாமெனக் காட்டுதற்கு இக்கட்டுரையை வரைகின்றேன். அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்களாக. அவ்வாங்கில வறிஞர் தம் பெயர் விரும்பாது தந்நாட்டகத்துக் கலை நலஞ் சாலச் சிறந்தோங்க உழைத்த பெருந்தரத்தார் (Lord) ஒருவர்க்கு எழுதிவிடுத்த முடங்கல் ஒன்று ஏறத்தாழ இருநூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது.
    நூல் : கோபாலகிருட்டிண மாச்சாரியார்
    ⁠அறுபதாண்டு நிறைவு விழா மாலை (1942)
    கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்ப பிள்ளை, பக்கம் : 381

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்