(பொருள் அறிவியலிலும் சிறந்திருந்தனர், அன்றே சொன்னார்கள்,தொடர்ச்சி)

நலம்சார் பொருளியல் (Normative Economics) குறித்து ஆடம் சுமித், ஆல்பிரட்டு மார்சல் முதலானவர் கருத்துகளை முன்னரே தமிழ் இலக்கியங்கள் தெளிவாக்கியுள்ளதை  நாம் பார்த்தோம். இவர்களுக்குப் பின்னர் வந்த அறிஞர்கள் பொருளியல் இயல்புரை அறிவியலா? நெறியுரை அறிவியலா? (Positive Science or Normative Sciene)எனக் கேள்வி கேட்டனர். பொருளியல் ஒரு புறம் உள்ளதை உள்ளவாறு ஒழுங்குபடுத்தப்பட்டு விளக்கும் அறிவியல் என்றனர். மறு புறம் , ஆசிமாகாபுளசு (Asimakopulos) என்னும் அறிஞர்   பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற நெறியுரைக் கோட்பாட்டை வகுக்கும் இயல் என்றார். முன்னது நிகழ்வனவற்றை விளக்கும் என்றால் பின்னது பொருளியலானது நீதி நெறி, ஒழுக்க நெறிக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என வலியுறுத்தும் அறம் சார் கருத்துகளை வலியுறுத்துவது.

செல்வம் என்பது அதன் அளவைப் பொறுத்து அமையாமல் எவ்வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது? எவ்வாறு பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும் என்பதும் நலம்சார் பொருளியலின் அடிப்படைக் கருத்தாகும்.

தமிழர் நெறி என்பதும் அறவாழ்வு வாழ்வதற்காகப் பொருள் ஈட்ட வேண்டும் என்பதே. தன் முயற்சியில் நேர்மையாக உழைத்துப் பொருள் ஈட்டிப் பிறர் துன்பம் போக்க அதனைப் பயன்படுத்த வேண்டும் என்பதே தமிழர் நெறி. இதனை விளக்கும் பல பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. தெய்வப்புலவர் திருவள்ளுவர் பொருள்செயல் வகை என்றும் நன்றியில் செல்வம் என்றும் இரண்டு அதிகாரங்களைத் திருக்குறளில் வைத்திருப்பதே நலம்சார் பொருளியல் என்று சொல்லலாம்.

வினைத்தூய்மையிலும்கூடத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் குறுக்கு வழியில் பொருள் ஈட்டக்கூடாது எனத் தனி மனிதனுக்கு அறிவுறுத்துகிறார். பச்சை மண் பாத்திரத்தில் நீரைப் பாதுகாத்தால் பாத்திரமும் அழிந்து அதில் சேமிக்கப்பட்ட நீரும் வீணாகும் என உணர்த்தும் வகையில் அவர்,

 
               சலத்தால் பொருள்செய்துஏ மார்த்தல் பசுமண்

 கலத்துள்நீர் பெய்து இரீஇ யற்று                             (திருக்குறள் 660)

என்கிறார். (சலத்தால் – தீய வழிகளால்; ஏமார்த்தல் – பாதுகாத்தல் )

            நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
            நச்சு மரம்பழுத் தற்று                                                     (திருக்குறள் 1008)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பிறருக்குப் பயனின்றிப் பிறரால் விரும்பப்படாமல் போகும் செல்வம் ஊர் நடுவே நஞ்சுமரம் பழுத்ததுற்கு ஒப்பாகும் எனக் கூறிச் செல்வத்தின் பகிர்வு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.

(நச்சப்படாதவன் – விரும்பப்படாதவன்; நச்சு மரம் – நஞ்சு மரம்; )

இதற்கு எதிரிடையாக உள்ளூரில் பழுக்கும் பயன்மரம் பிறருக்குப் பயன்படுவதுபோல் செல்வம் பிறருக்குப் பயன்படவேண்டும் என்பதை வலியுறுத்த
                  பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
                நயனுடை யான்கண் படின்                                          (திருக்குறள் 216)
எனத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

மேலும் அவர், ஊருணி ஊரார்க்குப்பயன்படுவதுபோல் செல்வம் உலகோர்க்குப் பயன்பட வேண்டும் என வலியுறுத்தி,
              

       ஊருணி நீர்நிறைந் தற்றே உலகுஅவாம்
              பேரறி வாளன் திரு (திருக்குறள் 215)
என்றும்
மருந்து மரம் எல்லா வகையிலும் பிறருக்குப் பயன்படுவதுபோல் பெருந்தகைமை உடையவர் செல்வம் பிறருக்குப் பயன்படும் என விளக்குதற்காக
                 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
                 பெருந்தகை யான்கண் படின்                                        (திருக்குறள் 217)
என்றும் கூறிச் செல்வம் பிறர் பயன்பெற பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.

அற வழியில் பொருள் ஈட்டி அனைவரும் பயன்பெற பகிர்ந்து வாழ வேண்டும் என்பதை அறக்கருத்தாக மட்டும் பார்க்காமல் மேனாட்டார் கூறும்  நெறியுரைப் பொருளியலை அன்றே வெளிப்படுத்தி உள்ள பாங்காகவும் பார்ப்பதுதானே முறை!