(வானுயர் கட்டடங்களால் வான்புகழுக்கு உரியோர் 2/3 – தொடர்ச்சி)

               2000 ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்கான பல மாடிவீடுகள் வரிசையாக அமைந்திருந்தமை குறித்து மேலும் சில விவரம் பார்ப்போம்.

மதுரை மாநகர் மாடிக்கட்டடங்களால் புகழ் பெற்றது என்பதைப் புலவர் மாங்குடி மருதனார் பல இடங்களில் விளக்குகிறார்.

மாடிக்கட்டடங்களால் சிறப்புமிகு புகழை உடைய நான்மாடக்கூடலாகிய மதுரை என,
      மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் (மதுரைக்காஞ்சி : 429)
என்றும், முகில் உலாவும் மலைபோல உயர்ந்த மாடிக்கட்டடங்களோடு உடைய மதுரை என
     மழையாடு மலையி னிவந்த மாடமொடு (மதுரைக்காஞ்சி : 355)
என்றும் மலையைப் போன்ற அகலமும் உயரமும் உடைய மாடிக்கட்டடங்கள்
என,
     மலைபுரை மாடத்து(மதுரைக்காஞ்சி : 406)
என்றும் மாடிக்கட்டடங்கள் வரிசையாக அமைந்திருந்தன என்பதை,
     நிரைநிலை மாடத்து அரமியந் தோறும் (மதுரைக்காஞ்சி : 451)
என்றும் கூறுகிறார். இந்த அடி மூலம் நாம் மொட்டை மாடி எனக் கூறும் மேல்மாடியில், நிலா முற்றம் இருந்தது என்பதையும் தெரிவிக்கின்றார்.

மலையைப் போன்றும் முகில் அமைந்துள்ளது போன்றும் உயரமான மாடிக்கட்டடங்கள் இருந்தன என்பதைப் புலவர் (இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப்) பெருங்கௌசிகனார்
     மலையென மழையென மாட மோங்கி (மலைபடுகடாம் : 484)
நகரங்கள் அமைந்துள்ளன எனத் தெரிவிக்கிறார்.

புலவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மாடிக்கட்டடங்களால் மாண்புற்ற நகர் என்னும் சிறப்பை,
     மாடமாண்நகர் (அகநானூறு : 124.6)
என்னும் தொடரில் தெரிவிக்கிறார். (அறுவை வாணிகன் – துணி வணிகர்)

புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார், வானைத் தொடும்அளவிற்கு நீண்டு உயர்ந்த வீடுகள் இருந்தமையை,
     விண்பொரு நெடுநகர் (அகநானூறு : 167.4)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார். (நெடுநகர்- உயரமான மாளிகைகள்)

உயர்ந்த மாளிகைகள் காவலுடன் இருந்தன என்றும் புவலர் மதுரை மருதன் இளம்நாகனார்,
     கடிமனை மாடம் (அகநானூறு : 255.16)
என்னும் தொடரில் குறிப்பிடுகிறார்.

மாடிக்கட்டடங்களை உடைய முதிய ஊராகிய மதுரை எனப் புலவர் மதுரைத் தத்தங்கண்ணனார்,
மாட மூதூர் (அகநானூறு :   335.11)
என்னும் தொடரில் விளக்குகிறார்.
புலவர் நக்கீரர், மாடிக்கட்டடங்கள் மிகுந்த தெருக்களை உடைய கூடல்மாநகர் என மதுரையை,
     மாடமலி மறுகின் கூடல் (அகநானூறு :   346.20)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மாடங்கள் சுண்ணாம்புச் சாந்து பூசப்பட்டு வெண்மைகயாக இருந்தன; உச்சியில் நிலா முற்றங்கள் இருந்தன என்பதைப் புலவர் மருதன் இளநாகனார்,
     ஆய் சுதை மாடத்து, அணி நிலா முற்றத்துள்

  (கலித்தொகை : 96.19)

என்னும் அடியில் விளக்குகிறார்.

சங்கப்புலவர்கள் கூடி உலக மக்கள் நாவில் நடமாடும் தமிழை ஆயும் மதுரையைக் குறிப்பிடும் பொழுது நீண்ட மாடங்களை உடைய மாநகர் எனப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ,
      நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாட கூடலார்

(கலித்தொகை : 35.17)

என்கிறார். இவ்வரி மூலம் உலகோர் பேசும் மொழியாகத் தமிழ் இருந்துள்ளதையும் தொன்றுதொட்டே சங்கம் வைத்துத் தமிழ் ஆய்ந்த புகழுக்கு உரியது மதுரை என்பதும் தெளிவாகின்றது.

நீண்டு உயர்ந்த தூண்களை உடைய மாடங்கள் உடைய மாளிகைகளைப் புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
     நெடுங்கால் மாடத்து (பட்டினப்பாலை : 111)
என்னும் தொடரில் விளக்குகிறார். மழைமுகில்கள் மோதும்அளவிற்கு வளமனைகள் உயர்ந்து இருந்தன என்று அவரே,
     மழைதோயும் உயர்மாடத்து (பட்டினப்பாலை : 145)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

வளைந்து உருண்ட தூண்களையும்  உயராமான வாயில்களையும் உடைய வளமனைகள் எனக் குறிப்பதன் மூலம் உயரமான வளமனைகள் இருந்தமையை,
      கொடுங்கால் மாடத்து நெடுங்கடை (பட்டினப்பாலை :  261)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

பெரிய நிலைகளை உடைய மாடங்கள் நிறைந்த உறந்தை நகரை அவரே,
     பிறங்குநிலை மாடத் துறந்தை (பட்டினப்பாலை : 285)
என்னும் தொடரில் விளக்குகிறார்.

மலையின் மேலிருந்து வீழ்கின்ற அருவியைப்போல, வளமனைகளின் உச்சியில்  காற்றால் வீசும் கொடிகள் அசைகின்ற தெரு, எனக் குறிப்பதன் மூலம், மலைபோல் உயரமாக, முகில் செல்லும் அளவிற்கு உயர்ந்த மாடங்கள்
உள்ள வளமனைகள் இருந்தன எனப் புலவர் பரணர்,
     வரைமிசை இழிதரும் அருவியின் மாடத்து
     வளிமுனை அவிர்வரும் கொடிநுடங்கு தெருவில்

(பதிற்றுப்பத்து : 47.3)