(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 35 : 7. கடல்நகர் புக்க காதை –  தொடர்ச்சி)

பூங்கொடி

கோமகன் மறுமொழி

வேம்பென வெறுப்பவள், வியனுல கதனில்

மேம்படு தமிழே மேவிய மூச்சாய்

வாழும் குறிக்கோள் வாழ்வினள்; அம்மகள்

சூழும் தொழிற்குத் துணைசெயல் இன்றி  

          ஊறுகள் இயற்றல் ஒவ்வுமோ?’ என்றனள்; 25

கோமகன் மறுமொழி

          `ஊறுகள் இயற்ற ஒருப்படேன் தாயே!

துணைசெய நினைந்தே தோகை அவட்குத்

துணைவன் ஆகத் துணிந்தேன்’ எனலும்,    

மீண்டும் இடித்துரை

          `செல்வ! நன்றுரை செப்பினை! அறிவைக் 

          கொல்வது ஒக்கும்நின் கூற்று! நின்னை

நயவாப் பெண்டிரை நாடுதல் சிறுமதிச்

செயலாய் முடியும், சிந்தித் துணர்மதி!

பொருள்வலி ஒன்றால் புந்தியை இகழேல்!

அருளும் அன்பும் அமைதியை நாட்டும்!    30

          மற்றோர் தமக்கும் மனமென ஒரு பொருள்

உற்றதை உணர்க! நின்மனம் ஒன்றே

விழைந்து பெறஎனின் விளையாட் டுப்பொருள்

அல்லர் மகளிர்! அறியாய் கொல்லோ?’

என்றறி வுறுத்தி ஏகும்அவ் வன்னை, 35

பூங்கொடி கடல்நகர் அடைதல்

          பூங்கொடி தன்பாற் போஒய்க் `கடல்நகர்த்

தேங்கிருள் நீக்கும் கடப்பா டுடையேம்

எழுகெனச் செப்ப, ஏந்திழை அவளொடும் 40

—————————————————————

          வியன் – அகன்ற, சூழும் – மேற்கொள்ளும், ஒருப்படேன் – உடன்படமாட்டேன், நயவா – விரும்பாத, போஒய் – சென்று, கடப்பாடு – கடமை, ஏந்திழை – பூங்கொடி.

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி