(பூங்கொடி 14 – கவிஞர் முடியரசன்: பூங்கொடி அழுகை – தொடர்ச்சி)

பூங்கொடி அழுகையை அருண்மொழி மாற்றுதல்

பூங்கொடி கண்ணிர் புத்தகம் நனைத்திட

ஆங்கது கண்ட அருண்மொழி வெதும்பிக்

கண்ணிர் மாற்றிக் கவலையை ஆற்ற

எண்ணினள் குறுகி, ஏனோ கலங்கினை?

மக்கள் கலக்கம் மாற்றிடல் ஒன்றே  25

தக்கதென் றெண்ணிச் சார்ந்தனம் ஈண்டு ;

நாமே கலங்குதல் நன்றாே ? நம்பணி

ஆமோ பூங்கொடி! அவலம் விட்டொழி

மலர்வனம் சென்று மாற்றுக் கவலை

அலர்பூங் காவுள் ஆறுதல் கிட்டும் ; 30

பூம்பொழில் தந்திடும் ஐம்புல இன்பம்

பலர்முகம் கண்டும், பாட்டொலி கேட்டும்,

சிறுவர் ஆடிடும் சிரிப்பொலி கேட்டும்,

நறுநீர் அருந்தி நளிகனி உண்டும்,

மலர்மணம் நுகர்ந்தும், வருசிறு தென்றல்

தளிருடல் வருடித் தருநலம் பெற்றும்   35

களிமிகு மனத்தொடு திரும் பெனக் கழறினள்,

    பூங்கொடியின் அழகு

உடனுறை தோழி அல்லி உரைப்போள்

பூங்கொடி நல்லாள் பொற்பின் செல்வி,

தேங்கெழில் இளமை செறிதரு சிற்பம்,

சிற்றிடை கொடியைச் சிரிக்கும், பிறையெனும்  40

நெற்றியிற் புருவம் வில்லினை நிகர்க்கும்,

அவ்வில் லடியில் அம்பென இருவிழி

செவ்விதின் நிற்கும், செவ்வா யிதழில்

புன்னகை மின்னும், பொலிவுறச் சுருள்படு

பின்னலில் இணையாப் பிரிந்துள கருங்குழல்   45

துகலிடைக் கிடந்து நுடங்கும்.அக் காட்சி

கவிஞன் ஒவியன் கற்பனை தாண்டும்,

நடைக்கோர் உவமை நவிலவும் ஒல்லுமோ ?

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி