(மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  59 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர்

22

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தேன்
வீடுதோ றிரந்து பசியறாது அயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோரென்
நேருறக் கண்டுளந் துடித்தேன்
ஈடில் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.

      — திருவருட்பா


தந்தியில் தெரிவித்திருந்தபடி அரவிந்தன் கோடைக்கானலுக்கு வரமுடியாமல் சொந்தக் கிராமத்துக்குப் போக நேர்ந்த காரணத்தை முதலில் பூரணிக்கு விவரித்தார் மீனாட்சிசுந்தரம். அவன் வராதது அவளுக்கு ஏமாற்றம் அளித்திருப்பதை மிக நுணுக்கமாக அவர் புரிந்து கொண்டார். அந்த ஏமாற்றம் வெளியே தெரிந்து விடாமல் அவளும் எவ்வளவோ திறமையாகத்தான் மறைக்க முயன்றாலும் மீனாட்சிசுந்தரம் அதைத் தம் கூர்மையான பார்வையிலிருந்து அவ்வளவு எளிதாகத் தப்ப விட்டுவிடவில்லை. பெண், இரசம் பூசிய கண்ணாடியைப் போன்றவள். தன்னில் படிகிற அல்லது படுகிற எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்க முடிவதில்லை. மறக்கவோ மறுக்கவோ கூட முடிவதில்லை.

“மதுரையில் மங்களேசுவரி அம்மாள், செல்லம், என் தங்கை எல்லோரும் சுகந்தானே? மூத்த தம்பி திருநாவுக்கரசு அச்சகத்தில் ஒழுங்காக வேலை செய்கிறானா? அவரும் ஊரில் இல்லாத சமயத்தில் அச்சகத்தைத் தனியே போட்டு விட்டு வந்திருக்கிறீர்கள்? அப்படி என்ன அவசரம்?” என்று தன் ஏமாற்றத்தை மறைக்க முயன்றவாறே விசாரித்தாள், பூரணி.

“அவசரம்தான்! இல்லாவிட்டால் இப்படி உடனே புறப்பட்டு வருவேனா?” என்று தொடங்கி நீளமான அடிப்படை போட்டுத் தாம் வந்த நோக்கத்தை அவளிடம் தெரிவித்தார் அவர்.

பூரணியின் முகபாவம் மாறியது. நெற்றியில் சிந்தனை நிழல் கவிழ்ந்தது. அவருக்கு ஒரு பதிலும் கூறாமல் நெடுநேரம் சிந்தித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தாள் அவள். பொறுப்புணர்ச்சியோடு சிந்திக்கிற காலத்தில் இவள் முகத்தில் வருகிற அழகு அப்போது வந்திருந்தது. முருகானந்தமும் மீனாட்சிசுந்தரமும் அவளிடமிருந்து என்ன மறுமொழி வரப்போகிறதோ என்று ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்கள்.

“ஏதோ தெய்வமே பார்த்து ‘இதை நீ செய்’ என்று தூண்டின மாதிரித் தற்செயலாக என் மனத்தில் இந்தச் சிந்தனை உண்டாயிற்று அம்மா! அரவிந்தனிடமும் இதோ இந்தப் பையன் முருகானந்தத்திடமும் சொன்னேன். அரவிந்தன் முதலில் ஏதோ தடை சொன்னாலும் பின்பு ஒருவாறு சம்மதித்து விட்டான். முருகானந்தத்துக்கும் முற்றிலும் பிடித்திருக்கிறது என் முடிவு. நீ வேறு விதமாகப் பதில் சொல்லி விடாதே. சாதகமான பதிலைத்தான் உன்னிடமிருந்து நான் எதிர்பார்த்தேன்” என்று அவளுடைய சிந்தனை தம் கருத்துக்கு எதிர் வழியில் மாறி விடாதபடி அரண் செய்து கொள்ள முயன்றார் மீனாட்சிசுந்தரம்.

பூரணி அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்ல நகைத்தாள். நகையில் வினாப் பொருள் நிறைந்திருந்தது. “என்னை இந்த மாதிரி வம்பில் மாட்டி வைக்க வேண்டுமென்ற எண்ணம் உங்களுக்கு எப்போது தோன்றியது? எப்படித் தோன்றியது?”

“இதில் வம்பு என்னம்மா இருக்கிறது? உனக்குத்தான் அரசியலில் ஈடுபடத் தகுதியில்லையா? அல்லது அரசியல்தான் உன்னை ஏற்றுக் கொள்ளத் தகுதியற்றதா? இதன் மூலம் புகழும், முன்னேற்றமும் அடைய வேண்டியவள் தானே நீ!”

இதைக் கேட்டு மீண்டும் பூரணியின் இதழ் ஓரத்தில் நகை பூத்தது. உள்ளே கனிவு உண்டாகிற காலத்தில் பழங்களின் மேற்புறத்தில் மின்னுமே ஒருவகை வனப்பு, அதைப் போல சிந்தனைக் கனிவு அவள் முகத்தை அற்புதமாக்கியிருந்தது. எந்நேரமும் எங்கோ எதையோ, யாரிடமிருந்தோ தேடிக் கொண்டே இருப்பது போன்ற அவளுடைய அழகிய கண்களிலும் உள்ளத்தின் சிந்தனைக் கனிவு ஊடுருவித் தெரிந்தது. புதிய புதிய அனுபவங்கள் ஏற்படும் போது வாழ்க்கையில் ஒன்றை விட ஒன்று பெரிதாகிக் கொண்டு வருகிறது. ‘இன்னும் மேலே போக வேண்டும், இன்னும் மேலே போகவேண்டும்’ என்பது போல் மேலே போகிற வெறி பேய்த்தனமாகப் பற்றிக் கொள்கிறது. அந்த வெறிக்கு ஆளாகிவிடாமல் விலகித் தப்பித்துக் கொள்ள வேண்டிய இடத்தில்தான் அப்போது நிற்பதாகத் தோன்றுகிறது பூரணிக்கு. ‘நீ தப்பித்துக் கொள்ள வேண்டா. அதில் ஈடுபட்டு விடு’ என்று மாட்டிவிடப் பார்க்கிறார் மீனாட்சிசுந்தரம். ‘மாட்டிக் கொண்டு விடாதே! தப்பித்துக் கொள்’ என்றது அவள் உள்ளுணர்வு. இரண்டில் எதைச் செய்வது? எதைச் செய்யாமல் இருப்பது?

“அக்கா! இதில் சிந்திப்பதற்கும் தயங்குவதற்கும் என்ன இருக்கிறது? நீங்கள் இந்த வழியில் வெற்றி பெற்று முன்னேறினால் ஏழைகளும் அனாதைகளும் நிறைந்துள்ள இந்த நாட்டுக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்யலாம்” என்று மீனாட்சிசுந்தரத்துக்கு ஆதரவு தரும் முறையில் அவளை நோக்கிக் கூறினான் முருகானந்தம்.

அவனுக்கு அவள் பதில் சொல்லவில்லை. மேலும் சிந்தித்தாள். அப்பா இறந்து போவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இப்போது அவளுக்கு நினைவு வந்தது. எவ்வளவு பெரிய வாய்ப்பாயிருந்தாலும் அது தன் மனத்துக்கு ஏற்காவிட்டால் அதைத் துணிந்து இழந்துவிடும் தன்மை அப்பாவுக்கு உண்டு. நெஞ்சின் உரம்தான் அவருடைய வாழ்க்கையில் அவர் சேர்த்திருந்த பெரிய செல்வம். எந்த வியாபாரியின் பண உதவியை அப்பாவின் மரணத்திற்குப் பின்பும் அவள் ஏற்றுக் கொள்வதற்குக் கூசி ‘செக்‘கைத் திருப்பி அனுப்பினாளோ, அந்த வியாபாரியைத் தம் வாழ்நாளிலேயே துச்சமாக மதித்து வந்தார் அப்பா. ‘அப்பாதான் செத்துப் போய்விட்டார், அப்பாவின் தன்மானம் இன்னும் இங்கே சாகவில்லை’ என்று இறுமாப்போடு எழுதி அந்தப் பண உதவியை மறுத்துத் திருப்பி அனுப்பி வைத்தாள் அவள். இறந்து போவதற்கு இரண்டாண்டுகளுக்கு முன் அப்பாவை அரசியல் துறையில் ஈடுபடுமாறு வேண்டிக் கொண்டு தாமே பணம் உதவி செய்ய முன்வந்தார் அந்த வியாபாரி. அப்போது அவருக்கு அப்பா கூறியனுப்பிய மறுமொழி பூரணிக்கு இன்னும் நினைவிலிருந்தது.

நான் உங்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கிறேன் என்பதற்காக நீங்கள் எனக்குப் பிழைக்க வழி சொல்லிக் கொடுக்கிறீர்களா? நாளை முதல் தமிழ்ப் படிப்பதற்கு மட்டும் நீங்கள் இங்கு வந்தால் போதும், எனக்கு வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்க வேண்டா” என்று சொற்களில் கடுமையும் முகத்தில் சிரிப்புமாகப் பதில் சொல்லிவிட்டார் அப்பா. அதைக் கேட்டு அந்த வியாபாரி மேலும் கூறினார். “நான் சொல்வதைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். இவ்வளவு படித்திருக்கிற நீங்கள் வாழ்க்கையிலும் அதற்கேற்ற வசதிகளையும், சௌகரியங்களையும் அடைய வேண்டுமென்றுதான் இந்த வழியைக் கூறினேன்.”

“ஒரு சௌகரியமும் ஒரு வசதியும் இல்லாதவர்களுக்கு எல்லாமே சௌகரியமாகவும் வசதியாகவும் தான் இருக்கும். ‘யாவை யாதும் இல்லார்க்கு இயையாதவே‘ என்று என்னைப் போன்றவர்களுக்காகச் சொன்னது போல் கம்பன் சொல்லி வைத்திருக்கிறான். ஐயா நான் ஒதுங்கி வாழ ஆசைப்படுகிறவன். நல்லவனாகவே வாழ்ந்து விட நினைக்கிறவன். நீங்கள் சொல்லுகிறது போல் முன்னேற்றம் பெற வல்லவனாக இருக்க வேண்டும். என்னைப் போல் நல்லவனாக மட்டும் இருந்தால் போதாது. இனி என்னிடம் இந்தப் பேச்சை எடுக்காதீர்கள்” என்று வன்மையாகச் சொல்லி மறுத்தார் அப்பா. சிறுசிறு கிளைகளையும், சுவடுகளையும் உதிர்த்துவிட்டு மேல்நோக்கி நெடிதாய் வளரும் சாதித் தேக்கு மரம் போல் சில்லறை ஆசைகளை உதிர்த்து விட்டு உயர்ந்த குறிக்கோள்களினால் உயர்ந்து நின்றவர் அப்பா. அவரைப் பற்றி நினைக்கிறபோதே தன் உள்ளம் சுத்தமாகி விட்டதைப் பூரணி உணர்ந்தாள். கல்லூரி வகுப்பறையில் சொற்பொழிவுகளுக்கான பொதுமேடையில், வீட்டில், படிப்பறையில், எங்கே நின்றாலும், எங்கே இருந்தாலும், தம்மைச் சூழ்ந்து கொண்டு தூய்மையும் ஒழுக்கமும் கொலுவிருப்பது போலத் தோற்றமளித்தார் அப்பா. மனோரஞ்சிதம் தான் பூத்திருக்கிற இடத்தில் நாற்புறமும் நெடுந்தொலைவுக்கு மணப்பது போல் தம்மையும் தம்முடைய சூழ்நிலையையும் காண்கிறவர்கள் மனத்தில் கூட மணப்பவர் அவர்.

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்