ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34 – வல்லிக்கண்ணன்
(ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 33)
ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 34
பாலல்ல வெளுத்த தெல்லாம்! உண்டுடுத்திப்
பவனிவரு வோரெல்லாம் மனிதரல்ல
ஆலல்ல மரங்களெல்லாம்! அதனைப்போல
அருங்கல்வி கற்றபுகழ் மாந்த ரெல்லாம்
சாலபெரும் நல்லோரும் அல்ல! பல்லோர்
சரியான முழுமூடக் கயவராகி
ஏலமிடு பொருள்போலே ஆனார் இன்று!
என்னென்பேன்! இது பெரிய வெட்கக்கேடு!
வானகமே மழை நீரைப் பருகிவிட்டு
வையத்தை வெறுப்பதுபோல், அறம் செய்கின்ற
தானத்தான் பொருளையெலாம் ஏப்பம்விட்டுத்
தன்கையை விரிப்பது போல், நேர்மை நெஞ்ச
மானத்தை மாவீரன் துறப்பதைப் போல்,
மாகல்வி படித்தபலர் இன்று தீய
ஈனர்க்குத் துதிபாடிக் கால் பிடித்தே
எத்தர்களாய் மாறிவிட்டார் மானக்கேடு!
வயிற்றுக்காய் எவனேனும் பிச்சைகேட்டால்
வாய்பொத்திக் கைகட்டித் தன்கழுத்தில்
கயிற்றினால் சுருக்கினையே போட்டுக் கொள்ளும்
கண்மூடிக் குருடரெனக் கற்றோர் ஆனார்!
உயிர்போன்ற தம் மொழியை, தம்மினத்தை
ஒருபோதும் எண்ணார்கள்!”
தற்கால நிலைமை கவிஞரைச் சீற்றத்தால் கொதிக்கச் செய்கிறது. அதனால் காட்டமாகவே கவிதை பாடியிருக்கிறார். பல இடங்களில் காந்தி பேரைச் சொல்லி நாட்டில் நடைபெறுகின்ற கயமைத்தனங்களை அவர் சாடுகிறார். ஓரிடத்தில் –
கொதிக்கின்றேன் தோழர்களே உள்ளம்! காலம்
கொடுமையிலும் கொடுமையாகப் போனதேடா!
மிதிக்கின்றார் உண்மை நெறி அவர்கள் இன்று
மிக்கெழுந்தார் தலைவரெனும் பேரால்! அன்னார்
விதிக்கின்ற செயல்களுக்காய்த் தம்மை ஈந்து
வீணடிமை யானார்கள் நல்லோ ரெல்லாம்
சதிச்செயல்கள் வாழ்கிறது ஐயோ! இன்று
தர்மந்தான் சாகலாமோ கொடுமை என்னே!
கதர்ச்சட்டை போடுகின்ற பலபேர் இன்று
காதகராய் இருக்கின்றார் அச்சட் டையாம்
புதர் நடுவில், கொடும் பாம்புக் கூட்டத்தார்கள்
கோயிலான நம்நாட்டைப் பணயம் வைத்தே
அதர்மத்தில் நடக்கின்றார்! உண்மைக் கோமான்
அண்ணலினை, அயோக்கியத்தை மறைப்பதற்கு
விதவிதமாய்ப் பயன்படுத்தி ஆள்கின்றார்கள்
வேசியைப்போல் ஆனார்கள் வெட்கம்! வெட்கம்!
(தொடரும்)
படைப்பு: வல்லிக்கண்ணன்
தரவு: இ.பு.ஞானப்பிரகாசன்
Leave a Reply