இனம் … ஈனம் : ‘தின இதழின்’ சரியான கணிப்பு
இட்லரால் யூதர்கள் அநியாயமாக அழிக்கப்பட்ட காலக்கட்டத்தின் அடிப்படையில் அந்த யூத மக்களை வைத்தே மூளை வளர்ச்சி இல்லாத ஒரு யூத இனக் கதாபாத்திரம், ஆட்டம் பாட்டம் கூத்து, மற்றும் போர்க் காலத்திலும் கூட அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள் என்று இன்று கூட யாராவது நகைச்சுவையாக ஒரு படம் எடுக்க முடியுமா? சும்மா விடமாட்டார்கள் யூதர்கள். ஆனால் ஈழத்தமிழர்களை வைத்து அப்படி ஒரு படம் எடுத்து, இதிலிருக்கும் உள்வஞ்சகம் தெரியாத நம்மில் சிலரையே, அதைப் பார்த்துச் சிரிக்கவும் வைக்கும் தந்திரத்தை செய்கிறது இந்தப் படம்.
முதல் தாக்குதலே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது வைப்பதில் இருந்தே இந்தப் படம் உருவாக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருந்திருப்பார்கள் என்பது புரிகிறது. ஒரு பள்ளிக் கூடத்தில் மிக அமைதியான சூழலில் தமிழ் மாணவர்கள் படித்துக் கொண்டு இருக்கும்போது அங்கு வரும் விடுதலைப் புலிகள், கரும்பலகையில் வேட்டியைக் கட்டி அதில் படம் போட்டுக் காட்டி மாணவர்களை இயக்கத்துக்கு கொண்டு போக மூளைச் சலவை செய்யும் ஒரு காட்சி வருகிறது. இலங்கையில் தமிழ் மாணவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை கொடுக்கப்பட்டு இருந்தால், அங்கு விடுதலைப் போராட்டமே உருவாகி இருக்காது என்ற உண்மையை மறைப்பது நியாயமா? போரினால் ஆதரவற்ற பிள்ளைகளுக்காகச் சுனாமியக்கா என்பவர் நடத்தும் ஆசிரமத்தில் வாழும் ஏதிலிகளான தமிழ்ச் சிறுவர் சிறுமியரை பற்றிய கதைதான் இந்தப் படம். சுனாமியக்கா என்ற பெயரின் மூலமும் அது பற்றிய வசனத்தின் மூலமும், போரினால் மட்டுமா ஈழத் தமிழர்கள் அழிந்தார்கள்? கடல்கோளாலும்(சுனாமியாலும்) கூடத்தான் தமிழர்கள் அழிந்தார்கள் என்று வலியுறுத்தி, சிங்களர்கள் செய்த இன அழிப்பின் வீரியத்தை மறைக்க முயல்கிறது படம். அங்கே இருக்கும் தமிழ்ப் பெண்கள் மிக கவர்ச்சியாக உடை உடுத்துகிறார்கள். போர்ச் சூழலிலும் ஆண்கள் பெண்களின் உடலழகைத் திருட்டுத் தனமாகக் கண்டு களிக்கிறார்கள் என்று காட்டுவதன் மூலம், தமிழர்களைக் கொச்சைப் படுத்துகிறார்கள்.
ஒரு நடுத்தர அகவைத் தமிழர், தெரியாமல் கண்ணிவெடியில் உட்கார்ந்து விடுவாராம். எழுந்தால் உயிர் போய்விடுமாம். எனவே அவர் பல ஆண்டுகளாக அங்கேயே அதன் மேல் உட்கார்ந்தபடியே வாழ்கிறாராம். அவருக்குத் தொலைவில் நின்று யாராவது சாப்பாடு கொடுத்து விடுவார்களாம்.. ‘என்ன முட்டாள்தனமான கற்பனை… அவர் இயற்கை உபாதைகளை எப்படிக் கழிப்பார்? எப்படிக் குளிப்பார்?’ என்றெல்லாம் கேட்பதோடு நின்றுவிடுகிற செய்தியில்லை இது. கண்ணிவெடி என்பது ஈழப் போர்க்களத்தில் போராளிகள் பயன்படுத்திய ஆயுதம். ஆக இந்தக் காட்சிகள் மூலம், அதை வைத்து தமிழர்களை இப்படிக் கிண்டல் செய்யும் சந்தோசு சிவன், அப்படியே எரி குண்டுகள் வீசும் சிங்களவன், பசியில் எரி குண்டைத் தின்று வயிறு வெந்து செத்துப் போனான் என்றும் ஒரு காட்சி வைத்து இருந்தால் சந்தோசு சிவனை நாமும் கூடப் பாராட்டி இருக்கலாம். இலங்கையில் தமிழர்கள் பட்ட இழப்புகளை கடமைக்காவது கொஞ்சம் சொல்லும் ஒவ்வொரு முறையும் உடனே அந்த மன நோயாளிக் கதாபாத்திரம் நகைச்சுவையாக ஏதோ பேசும்படிக் காட்சி வைத்து, அந்த இன அழிப்பின் பாதிப்பு படம் பார்ப்பவர்கள் மனத்தில் நிற்காத வண்ணம் செய்து இருப்பதில், சந்தோசு சிவனின் வஞ்சகத் தந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது. தொட்டிலை ஆட்டிய மாதிரியும் ஆச்சு. அப்புறமாகப் பிள்ளையைக் கிள்ளிய மாதிரியும் ஆச்சு.
மரணப்படுக்கையில் இருக்கும் வயதான ஈழத் தமிழ்ப் பெரியவர் தனக்குச் சொந்தமான ஒரு படத்தொகுப்பை எடுத்துப் புரட்டும்படிச் சொல்கிறார். அந்தப் படத்தொகுப்பில் முதல் பக்கம் அவரது ஒளிப்படம் கம்பீரமாக இருக்கிறது. அடுத்த பக்கங்களில் எல்லாம் கவர்ச்சி நடிகைகளின் படங்கள் இருக்கின்றன. அஃதாவது அவர் இளம் அகவையில் கவர்ச்சி நடிகைகள் பற்றிக் கற்பனை செய்தே வாழ்ந்தார் என்று சொல்கிறார்கள். போர்க் களக் கதையில் வைக்க வேண்டிய கதாபாத்திரமா இது? இதன் மூலம் ஒட்டுமொத்த ஈழத் தமிழர்களையே கேவலப்படுத்துகிறார்கள். அங்கே போராளியாக இருந்த பலரும் பெண்களைக் காதலித்து ஏமாற்றி விட்டுவிட்டுச் சண்டைக்குப் போய்விடுவார்கள் என்ற ஒரு தொனி வருகிறது படத்தில். தவிர இலங்கைத் தமிழகர்கள் பலரும் சொந்த மண்ணை நேசிக்காதவர்கள், வெளிநாடுகளுக்குப் போய் இன்பமாக வாழும் மோகத்தில் இருப்பவர்கள், ஆங்கில மோகம் கொண்டவர்கள் என்ற தொனியும் பார்த்தீனிய நச்சுச் செடியாய்ப் பரவிக் கிடக்கிறது. இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த நார்வே மற்றும் வெளிநாட்டு மனிதநேயர்களை கேவலப்படுத்தும்படியாகச் சில உரையாடல்கள், காட்சி அமைப்புகள், படப்பொறிக் கோணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போர் நடந்த பகுதியில் இருந்து கிளம்பும் செஞ்சிலுவைச் சங்க அலுவலர் ஒருவர் அந்த மனநோயாளிச் சிறுவனின் கையில் நூறு டாலர் கொடுக்கிறார்.
அவன் சிரிக்கிறான். “காசு கொடுத்தேன். அவன் மகிழ்ச்சியாகத்தான் சிரித்தான்” என்று அவர் கூறுகிறார். அஃதாவது ‘என்னதான் தமிழர்களை அசிங்கப்படுத்தினாலும், காசு கொடுத்து விட்டால் போச்சு’ என்று சொல்லாமல் சொல்கிறது இந்தக் காட்சி. விடுதலைப் போரில் ஈடுபட்ட ஒரு போராளி ஊருக்கு வந்து சாப்பிடும்போது “அப்பாடா.. நல்ல சாப்பாடு சாப்பிட்டுப் பல நாள் ஆச்சு. அங்கு எல்லாம் கிடைக்காது. நிம்மதியாகத் தூங்கி வெகு நாள் ஆச்சு“ என்று கூறுகிறான். அஃதாவது போராளிகளைச் சாப்பாட்டு இராமன்கள், விருப்பமில்லாமல் போராளிகளாக இருந்தவர்கள் என்று சித்தரிக்கும் நோக்கம் இதில் வஞ்சகமாக இருக்கிறது. உலக வரலாற்றிலேயே உண்ணா நோன்பில் உட்கார்ந்து கடைசிவரை ஒரு துளி தண்ணீர்கூட அருந்தாமல் செத்துப் போன போராளி திலீபன் ஆன்மா இவர்களை மன்னிக்குமா? போராளி இயக்கத்துக்காகப் பணியாற்றியது பற்றி கூறும் ஒருவனிடம் திடீரென்று சரிதா “குனியக் குனிய குட்டுகிறவனும் முட்டாள். குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்” என்று சொல்வார். மேலோட்டமாகப் பார்த்தால் அது ஏதோ தொடர்பில்லாமல் பேசப்பட்டது போலத் தோன்றும். ஆனால் ஆழ்ந்து நோக்கினால்தான் அஃது போராளி இயக்க உறுப்பினர்களையும் தலைவர்களையும் கிண்டல் செய்யும் பேச்சு என்று புரியும். ஆசிரமத்தில் உள்ள பிள்ளைகள் யாரும் போராளி இயக்கங்களில் சேர்ந்து விடக் கூடாது என்பதற்காக அவர்களுக்குச் சின்ன அகவையிலேயே (பால்ய) திருமணம் செய்து வைக்கிறார்கள் என்ற ஒரு அரைவேக்காட்டுத்தனமான காட்சி. ஒரு சிங்களப் புத்த சாமியார் ஆற்று நீரைப் பாத்திரத்தில் மொண்டு பானையில் ஊற்றும்போது சில மீன்கள் பானையின் வடிகட்டியில் சிக்கிக் கொள்ளும். உடனே அந்தச் சிங்களச் சாமியார் அந்த மீன்களை பத்திரமாக எடுத்து ஆற்றில் விடுவார். அவ்வளவு நல்லவர்களாம் அவர்கள். அதுமட்டுமல்ல, குழந்தைநிலையில் மணம் செய்து கொண்டு வாழப் போகும் இரண்டு இணையருக்கு அவர் அன்போடு ஒரு மாதுளம்பழம் கொடுப்பாராம். அந்த இணையர் இரவில் அந்த மாதுளம் பழத்தைச் சாப்பிட்டு, பால் அருந்திவிட்டு-அஃதாவது பாலும் பழமும் சாப்பிட்டுவிட்டு – படுத்துக் கொள்வார்களாம்.
மிச்சமுள்ள பழத்தை அந்த வீட்டுக்குள் நுழையும் ஒரு போராளி வீரன் சாப்பிட்டுவிட்டு பசியாறுவானாம். பாவிகளா! இலங்கையில் புத்தப் பிட்சுகள் இப்படியா இருந்தார்கள்? இருந்திருந்தால் ஒரு தமிழன் உயிராவது போயிருக்குமா? ஒரு தமிழ்ப் பெண்ணாவது கற்பழிக்கப்பட்டு இருப்பாளா? தவிர தமிழர் பகுதியில் சிங்கள புத்தப் பிட்சு இருந்ததே இல்லை எனும் நிலையில் இப்படிக் காட்டுவதன் மூலம் சிங்களர்கள் இலங்கை முழுக்க வாழ்ந்ததாகப் பொய் வரலாறு புனைகிறார்கள்.
‘தமிழர் பகுதியில் நுழையும் இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை மட்டும்தான் வேட்டையாடும். மாறாக, தமிழ் மக்களை ஒன்றும் செய்யாது. அப்படி இலங்கை இராணுவத்தான்கள் விடுதலைப்புலி ஆட்களைச் சுடும்போது இடையில் சிக்கித் தமிழ் ஆட்களும் செத்திருக்கலாம்’ என்று பல காட்சிகளின் மூலம் பச்சைப் பொய்யைச் சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளைச் சுடும் இலங்கை இராணுவத்தினர், தங்கள் அருகில் நிற்கும் அப்பாவித் தமிழர்கள் மீது குண்டு படக் கூடாது என்று பதறும் அளவுக்கு நல்லவர்களாம். அதுவும் அந்த மன நோயாளி சிறுவனிடம் இலங்கை இராணுவத்தான் மிகுதியாய்ப் பரிவு காட்டுவதாக ஒரு நீலிக்கண்ணீர் காட்சி. ‘பெண்களை இலங்கை இராணுவம் கொல்லாது. போராளி இயக்கங்களால்தான் ஈழத் தமிழர்கள் அழிந்தார்கள்’ என்ற கருத்தை விதைக்கும் வகையில் பல காட்சிகள். போரில் இறந்து கிடக்கும் ஒரு சிங்கள இராணுவத்தானின் கையில் அவனது குழந்தையின் ஒளிப்படம் இருக்கும். அஃதாவது மகள் மீது பாசமுள்ள தந்தையான அந்தச் சிங்கள இராணுவத்தானைப் போராளிகள் அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டார்களாம். கடைசியில் அழிந்து கிடக்கும் ஒரு பகுதியில் உடைந்து போன விநாயகர் சிலை, இயேசு படம் இவற்றோடு புத்தர் சிலையும் இருக்கிறது . அஃதாவது “யோவ் தமிழன்களா! இலங்கையில் கோயிலும் தேவாலயமும் பள்ளிவாசலும் மட்டுமா இடிக்கப்பட்டன? புத்தர் சிலைகளும்தான் அநியாயமாக இடிக்கப்பட்டன. பாவம் சிங்களர்கள்” என்று நம் நாக்கை வைத்தே சிங்களனுக்கு ஆதரவாக உச்சுக் கொட்ட வைக்கப் பார்க்கிறார்கள்.
இன்னொன்று…. ஒரு காட்சியில் ஓர் ஆமையின் மீது அமெரிக்கப்பணம் (டாலர் நோட்டு) ஒட்டிக் கொண்டு இருக்க, அது அப்படியே கடலுக்குள் இறங்கித் தப்பிப் போய்விடும் அஃதாவது இலங்கையில் தமிழர்கள் அழிக்கப்படக் காரணம் அமெரிக்காதான். அதற்குச் சிங்களர்களைக் குறைசொல்வது தப்பு” என்று மறைமுகமாக நம்மை மழுங்கடிக்கப் பார்க்கிறார்கள் இந்த ‘இனம்’ படத்தில்! ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகப் படத்தில் சில காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அதன் தொடர்ச்சியாகவோ அதற்கு முன்னரோ அதற்கு நேர்மாறான காட்சிகளை வைத்து அந்த ஆதரவுக் காட்சிகளை வலுவிழக்கச் செய்திருக்கும் கபட நாடகத்தைத்தான் தாங்க முடியவில்லை. “தலைவர் (லீடர்) சாகும்போது நான் பக்கத்தில்தான் இருந்தேன். சாகும்போது அவர் கண் திறந்து இருந்தது” என்று ஒரு சிறுவன் கூறுவான். சிங்களர்களை மகிழ்ச்சிப் படுத்துவதற்காக, இதன் மூலம் பிரபாகரன் இறந்து விட்டார் என்றும் பிரபாகரன் உடன் இருந்தது எல்லாம் சிறுவர்கள்தான் என்றும் உண்மைக்கு மாறாகச் சொல்லி, போராளிகளை இழிவு படுத்துகிறார்கள்.) உடனே பக்கத்தில் இருக்கும் அந்த மன நோயாளிக் கதாபாத்திரம் “கண் திறந்து கிட்டே செத்துப் போனவங்க திரும்ப வருவாங்க” என்று சொல்கிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஏதோ பிரபாகரனுக்கு புகழ் மாலை சூட்டும் காட்சி போல தெரியும்.
ஆனால் அதற்குச் சில காட்சிகள் முன்பு வேறு இரண்டு நபர்கள் சாகும்போதும் இதே வசனம் சில பெண்களால் சொல்லப்படுகிறது ஆனால் கவனிக்க வேண்டிய பிரபாகரன் தொடர்புடைய காட்சியில் இவ்வாறு சொல்பவர் மூளை வளர்ச்சி இல்லாதவர் என்று காட்டுவதன்மூலம், பிரபாகரன் திரும்ப வருவார் என்று நம்புபவர்களும் அப்படியே என்று நக்கலடிக்கிறது இந்தப் படம். இராணுவ விமானங்கள் குண்டு போட, பதுங்கு குழிக்குள் பதுங்கி, தமிழ் மக்கள் கதறுவது காட்டப்படுகிறது. ஆனால் அதை திரைப்படத்தனமாக படமாக்கி-எல்லாரும் தாக்குதலில் தப்பித்துக் கொள்கிறார்கள். ஒரே ஒரு சிறுவன் மட்டுமே கொல்லப்படுகிறான் என்று காட்டி- மாய்மாலம் செய்கிறார்கள். இரசினி என்ற இந்துப் பெண்ணையும் ஆயிசா என்ற இசுலாமியப் பெண்ணையும் சிங்கள இராணுவ வெறியர்கள் கற்பழிப்பதும் அதை இன்னொரு இராணுவ வீரன் படப்பொறியில் பதிவு செய்வதையும் காட்டுகிறார்கள். உடனே அந்தப் படையின் தளபதியான சிங்களன் “இதெல்லாம் தப்பு இல்லையா? இப்படி எல்லாம் செய்யக் கூடாது” என்று கூறி நடக்கும் தவறுக்கு வருத்தப்படுவது போல பசப்பலான ஒரு காட்சி.
இதன் மூலம் சிங்கள இராணுவத்தால் பெண்கள் கற்பழிக்கப்பட்டது எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும் நடந்த நிகழ்வு. மற்றபடி சிங்கள இராணுவத்தான்கள் ஒழுக்கச் சீலர்கள் என்று பொய்புனைவுச் சான்றிதழ் தருகிறார் சந்தோசு சிவன். ஆனால் அதே நேரம் அதற்கு முந்தைய காட்சிவரை இரசினி, ஆயிசா ஆகியோருடன் இருந்த போராளிகள், குண்டு விழுந்ததும் அந்த இருவரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டதாக மறைமுகமாகச் சொல்வதன் மூலம், போராளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். தமிழினம்தான் என்று இல்லை . பொதுவில் ஒரு பாதிக்கப்பட்ட இனத்தை ஆதரித்துப் படம் எடுப்பதுதான் படைப்பாண்மை. முடியாவிட்டால் (வாயைப்) பொத்திக் கொண்டு இருக்க வேண்டும். அதை விடுத்து, யாரிடமோ எதையோ வாங்கிக் கொண்டு, குற்றவாளிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து, அறமற்று அழிக்கப்பட்ட ஓர் இனத்தைக் கிண்டல் செய்து படம் எடுத்து, அதற்கு இனம் என்று பெயர் வைத்து வெளியிடுவது என்பது, செத்து அழுகிப் போன பிணத்தை புணர நினைக்கும் ஒரு பித்துவெறியனின் மன நிலையையே வெளிப்படுத்துகிறது. இது போன்ற படங்கள் வெளியாவதும் அதைப் பார்ப்பதும் தமிழ் இனத்தின் தலையெழுத்து.
இனம் … ஈனம்!
Leave a Reply