(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 23 இன் தொடர்ச்சி)

தலைப்பு-இலக்குவனார்கவிதைகள் : ilakkuvanar kavithaikal_or_aayvu_thalaippu

24


இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 24

தமிழகக் குடியரசு

  அமெரிக்க நாட்டின் ஆட்சித் தலைவராக விளங்கும் குடியரசுத் தலைவர் நம் அண்ணாவைக் காண வரவில்லை. அவர்தம் அன்புச் செயல்களில் கலந்து கொள்ளவில்லை. காரணம் தமிழகம் தனிக்குடியரசாய் விளங்கி தனது அறிவு நிரம்பிய தலைவரை அனுப்பி வைக்கவில்லையே. அந்நாள் விரைவில் தேடிவருமாக என்கிறார் கவிஞர்.

சப்பானியச் செலவு

  உழைப்பால் உயர்ந்த நாடு சப்பான், ஓங்கிய பெருமை உடைய நாடு சப்பான். அண்ணா அவர்களை அன்புடன் அழைத்திட சப்பான் நாடு சென்றார். சப்பான் நாட்டு மக்கள் உழவுத்துறையிலும், தொழிற்துறையிலும் சிறந்து விளங்கியமை கண்டார். தம் தாய் மொழிப் பற்றிலும் அறிவியல் கண்டு பிடிப்புகளிலும் இடைவிடா முயற்சியிலும் மேலோங்கி நிற்கும் சிறப்பைக் கண்டார். அவற்றை எல்லாம் தன்னுடைய சிந்தையில் இருத்தினார். இனிய தமிழ் நாட்டை எல்லாத் துறையிலும் முன்னேற்றம் அடையச் செய்ய உயர்ந்த திட்டங்களை உளத்தில் கொண்டார். தாம் சென்ற இடங்களில் எல்லாம் சிறப்பினைப் பெற்றார். நாட்டுக்கு நலம் பயக்கும் வழிபல அறிந்தார். தாயைச் சேரும் தலைமகன் போல தமிழ்த்திரு நாட்டை அடைந்தார் அண்ணா. சந்திரணைக் கண்ட கடலைப் போல அண்ணாவைக் கண்ட மக்ள் ஒருங்கு கூடி ஆரவாரித்தனர். பொறாமைக்குணம் கொண்ட தீய நெஞ்சினர் உள்ளம் புழுங்கினர்.

‘           தாயைக் கூடும் தலைமகன் போல்

            . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .

            பொறாமைத் தீயினர் புழுங்கினர் அகத்தே’ 58

அண்ணா வாழ்க

  மக்களுக்குச் செய்யும்  தொண்டே மகேசனுக்குச் செய்யும் தொண்டு எனக் கருதினர் அண்ணா. மக்கள் நலத்தைத் தம் மதியில் சேர்த்தார். மக்களுக்குத் தேவையானவற்றைச் செய்தார். பெருமையல்லாத செயல்களை நீக்கினார். எப்பொழுதும் இனியவராய் விளங்கினார். ஏழைகளின் தோழராய் விளங்கினார். ஆட்சி என்னும் சக்கரத்தை அழகுற நடத்திச் சென்றார். “உலக மக்கள் புகழுமாறு உயர்நிலை உடைய சிறப்புக்கள் அனைத்தையும் பெற்ற விளங்குவாராக! அறுபதாம் ஆண்டை அடையும் அண்ணா இளைஞர்க்கு இளைஞராக என்றும் வாழ்வாராக! மகளிர் தலைவி என்று மதிக்கப்பெறும் வாழ்க்கைத் துணைவியாம் இராணி அம்மையாரின் இனிய பாதுகாப்புடன் நிலைத்து வாழ்வாராக! நீண்ட பெரிய தமிழ்ப்பகையை வென்று வாழ்வாராக!” இதனை,

‘           அறுபதாம் ஆண்டை அடையும் அண்ணா

            இளைஞர்க்கு இளைஞராய் என்றும் வாழ்க!

            வாழ்க்கைத் துணைவியாம் மகளிர் தலைவியாம்

            இராணி அம்மையார் இனிய புரப்புடன்

            நின்று வாழ்க! நீள் தமிழ்ப் பகையை

            வென்று வாழ்கவே! வெல்க தமிழ்.’ 59

என்று வாய்மணக்க நெஞ்சம் இனிக்க வாழ்த்துகிறார் கவிஞர்.

எனினும் அண்ணா ஒருசில திங்களில் மறைந்தார். தமிழ்த்

தாய் தன் தலைமகனை இழந்தாள். தமிழுக்குத் தொண்டு செய்வார் நூறு ஆண்டு வாழ்வதில்லை போலும்!

‘           செந்தமிழுக்குப் பணிபுரிந்தோர் எவரேனும் செல்நூ றும்

            வாழ்த்த துண்டோ” 60

என்று கவிஞர் அவர்கள் வேறொரு கவிதையில் குறிப்பிடுகிறார்.

குறிப்புகள்:

  1. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 166-169.
  2. சி. இலக்குவனார், அறிஞர் அண்ணாவிற்குப் பாவியல் வாழ்த்து அ-ள் 175-180.
  3. சி. இலக்குவனார், துன்பமாலை, பாடல் எண்-4.

 

ம. இராமச்சந்திரன்