உயர்நீதிமன்றப் பெயர் மாற்ற முடிவில்  தமிழ் நாட்டிற்கு அநீதி!

 

தமிழ்நாட்டிலுள்ள உயர்நீதி மன்றத்திற்குத் தமிழ் நாட்டின் பெயரைச் சூட்டவேண்டும் என்னும் தமிழக மக்களின் அடிப்படை உணர்விற்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதற்காக அவர்கள் சொல்லும் காரணம்  எளிய மனிதனால்கூட ஏற்கப்பட முடியாதது. அவ்வாறிருக்க அரசியல் தெரிந்தவர்கள், சட்டம் தெரிந்தவர்கள், நீதியை உணர்ந்தவர்கள் எங்ஙனம் ஏற்கமுடியும்?

அனைத்து நீதிபதிகள் குழுக் கூட்டத்தில், “சென்னை உயா்நீதி மன்றத்தின் அதிகார எல்லைக்குள்தான் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. எனவே, தமிழ்நாடு உயா்நீதிமன்றம் எனப் பெயா் மாற்றம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளனர். ஒரு பாமரனும் இக்கருத்தைக் கேட்கும் பொழுது சிரிக்கத்தான் செய்வான். இப்பொழுது மதராசு என்று சொல்கிறார்களே, நாம் சென்னை என்று சொல்கிறோமே அதில் என்ன தமிழ்நாடு முழுமையுமா அடங்குகிறது?  தமிழ்நாட்டின் பெயரைத் தமிழ்நாடு என்னும் பழம் பெயருக்கு மாற்றிய பின்னர், சென்னை என்பது தமிழ்நாட்டில் உள்ள  ஒரு நகரம் அல்லது மாவட்டம்தான். வாதத்திற்காகச் சென்னை என்பது தமிழ்நாட்டைக் குறிப்பதாக எடுத்துக் கொள்வோம். இதில் எங்கே புதுச்சேரி வந்தது. மதராசு அல்லது சென்னையில் எப்படி புதுச்சேரி அடங்கும்?  எனவே, எந்தச் சிந்தனையும் செலுத்தாமல் ஏதோ அழுத்தத்தின் பெயரில் தெரிவிக்கப்பட்ட முடிவை அறிவிக்கிறார்களோ என்ற ஐயம்தானே அனைவருக்கும் ஏற்படும்?

சரி. இதற்கு முன்னர் வேறு எதுவும் இவ்வாறு இல்லையா? என்று பார்த்தால் நீதித்துறையினரின் அறியாமை வியப்பைத் தருகிறது. ஏனெனில், பஞ்சாபு அரியாணா ஆகிய இரு மாநிலங்களுக்குமான ஒற்றை உயர்நீதி மன்றம், பஞ்சாபு அரியாணா உயர்நீதி மன்றம் என்ற பெயரில் இயங்குகிறது.  அவ்வாறிருக்கத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம என்று பெயர் சூட்டத் தடை என்ன உள்ளது?

இது குறித்து, ‘மதராசு உயர்நீதிமன்றம்’ என்பதைத் ‘தமிழ்நாடு – புதுவை உயர்நீதி மன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். என ஏற்கெனவே தமிழ் அமைப்புகள் குரல் கொடுத்துள்ளன. தமிழ் ஆர்வலர்களும் பல்வேறு கட்டங்களில் தங்களது கோரிக்கையினை வைத்துள்ளனர்.  இவ்வாறான சிந்தனை கற்றறிந்த மாண்பமை நீதிபதிகளுக்கு இல்லாமல் இருக்காது. அப்படியானால் பொருந்தாக் கருத்தைக் கூற என்ன அழுத்தம் வந்தது  என்று தெரியவில்லை

புதுச்சேரி போன்று ஒன்றியப் பகுதியாக உள்ளவை அந்தமான்-நிக்கோபர் தீவுகள். இதற்கான உயர்நீதி மன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம்தான். அப்பொழுது அந்தமான் நிக்கோபார் பெயர் இல்லையே! எவ்வாறு கல்கத்தா உயர்நீதிமன்றப் பணி வரம்பில் வரும் என்று யாரும் கேட்கவில்லையே!  இப்பொழுது மட்டும் ஏன் இந்தச் சிந்தனை?

பம்பாய் உயர்நீதிமன்ற வரம்பில்தான் மகாராட்டிரா மாநிலத்தடன், கோவா, தாத்திரா -நாகர் அவேலி, தமன்-தியூ ஒன்றியப்பகுதிகள் வருகின்றன.

 கெளகாத்தி உயர்நீதி மன்ற வரம்பில்தான் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா, மிசோரம் மாநிலங்கள் உள்ளன. இதனை முறையற்றது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருதவில்லை.     

கேரளா உயர்நீதி மன்ற வரம்பில்தான் இலட்சதீபம் ஒன்றியப்பகுதி வருகிறது. பஞ்சாபு அரியானா உயர்நீதி மன்றவரம்பில்தான் சண்டிகார் ஒன்றியப் பகுதி வருகிறது.

பிற ஒன்றியப்பகுதிகள் ஏதேனும் அருகிலுள்ள மாநில உயர்நீதி மன்றத்தின் வரம்பில் இருந்தாலும் வராத முறையின்மை, புதுச்சேரி ஒன்றியம் அருகிலுள்ள தமிழ்நாட்டில் சேரந்து இருப்பதால் தமிழ்நாடு என்ற பெயர் எப்படி முறையற்றதாக மாறும்?

‘தமிழ்நாடு உயர் நீதிமன்றம்’ எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமெனத் தமிழகச் சட்டப்பேரவையில் மத்திய அரசை வலியுறுத்தி 31.07.2016 இல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு என்ன மதிப்பு? அப்போதைய முதல்வர் செயலலிதாதான் இதனை  நிறைவேற்றினார். அவரது ஆட்சியைத் தொடரும் இப்போதைய அதிமுக அரசு அமைதி காக்காமல் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதராசு உயர்நீதிமன்றம் என்ற பெயரைச் சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்ற   2016 ஆம் ஆண்டு சூலை மாதம் அமைச்சரவை  ஒப்புதல் வழங்கியது. இப்போதைய பா.ச.க. அரசுதான் அப்போதும் ஆட்சியில் இருந்தது. “இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும். இனி ஆங்கிலத்திலும் சென்னை என்றே அழைக்கப்படும்” என்று மத்திய அமைச்சர் சதானந்த (கவுடா) தெரிவித்துள்ளார். ஆனால், முழு மனத்துடன் ஒப்புதல்  வழங்கவில்லை போலும். ஏனெனில், திசம்பர் 2016,இல் சட்டத் துணை யமைச்சர் பி.பி.செளத்திரி, “சென்னை, மும்பை, கொல்கத்தா உயர்நீதி மன்றங்களுக்கான பெயர் மாற்றச்சட்டத் திருத்தம் குறித்து உரிய மாநில அரசுகள், உரிய உயர்நீதிமன்றங்கள் கருத்துகளைக் கேட்டு முடிவெடுக்கப்படும். ஆனால், இதற்கான காலக் கெடு எதுவும் விதிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.  இதிலேயே இது கிடப்பில் போடப்படும் எனச்சொல்லாமல் சொல்லியது மத்திய அரசு.

இருப்பினும் அதே ஆட்சியில், 2016 இல், சட்டம் – நீதிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவர் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன்(காங்கிரசு), அறிக்கை அளித்திருந்தார். அதில் 85 ஆவது பரிந்துரையாக அவர், தமிழ்நாடு உயர் நீதிமன்றம் எனப் பெயர் மாற்றம் செய்யுமாறு  குறிப்பிட்டுள்ளார். பா.ச.க. அரசிற்கு இதில் உடன்பாடு இல்லை என்பதால், இப்பரிந்துரைக்கு எந்தப்பயனும் இல்லை.

2016இல் மத்திய அரசு உயர்நீதி மன்றத்தின் கருத்து கேட்கப்படும் எனத் தெரிவித்தது அல்லவா? அந்தக் கருத்தைத்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூட்டத்தில் இப்போது தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசின் சட்டமன்றத்தீர்மானம் இருக்கும் பொழுது மீண்டும் தமிழக அரசின் கருத்து தேவையில்லை.  எனினும் அவ்வாறு கேட்டிருந்தாலும் கேட்காவிட்டாலும், தமிழக அரசு முந்தைய தீர்மானத்தை வலியுறுத்தி உடனடியாக மதராசு உயர்நீதி மன்றத்தின் பெரைத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம் என மாற்ற வலியுறுத்திப் பெயர் மாற்ற ஆணையைப் பிறப்பிக்கச் செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் இவ்வாறு மடல் அனுப்பச் செய்ய வேண்டும்.

மிழக மக்கள் அல்லது தமிழ் அமைப்புகள் மட்டுமல்ல, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களும்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழக்கறிஞர்களும் பன்முறை வலியுறுத்தியுள்ளனர்.

உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றம், அது சார்ந்த மண்ணைப் போற்றும் வகையில் மாநிலத்தின் பெயரில் தமிழ்நாடு என்று அழைக்கப்படுவதுதானே பொருத்தமாக இருக்கும்.

அதற்கேற்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் கூடித் தமிழ்நாட்டின்பெயர் அதற்கான உயர்நீதி மன்றத்தில் இருப்பதே நீதியானது என்பதை உணர்த்தும் வகையில் இதனை ஏற்று அறிக்கை அளிக்க வேண்டும்.

ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றம், சத்தீசுகர் உயர் நீதிமன்றம், குசராத்து உயர் நீதிமன்றம், சியார்க்கண்டு உயர் நீதிமன்றம், கருநாடகா உயர் நீதிமன்றம், கேரளா உயர் நீதிமன்றம், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், ஒரிசா உயர் நீதிமன்றம், இராசசுதான் உயர் நீதிமன்றம், சிக்கிம் உயர் நீதிமன்றம், உத்தர்காண்டு உயர் நீதிமன்றம் எனப் பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலப் பெயர்களே உயர்நீதி மன்றப் பெயராக இருக்கும்பொழுது தமிழக மக்களும் இதே நீதியை எதிர் பார்ப்பது தவறா?

வாய்ப்புள்ள நேர்வுகளில் – தமிழ்நாடாக இருந்தாலும் வெளி நாடாக இருந்தாலும் தமிழின் பெருமையைத் தலைமை அமைச்சர்கள் முதலானவர்கள் கூறி வருகின்றனர். அவை உள்ளத்தில் இருந்துதான் வருகின்றன என அறியும் வகையில் இவ்வாண்டு முடிவதற்குள்ளாகவே மதராசு உயர்நீதி மன்றத்தின் பெயரை மாற்றியமைத்துத் தமிழ்நாடு-புதுவை உயர்நீதி மன்றம் என அறிவிக்க வேண்டும்.

ஒட்டு மொத்தத் தமிழர்களின் இந்த எதிர்பார்ப்பை அரசுகள் நிறைவேற்றித் தருமா?

இலக்குவனார் திருவள்ளுவன்
தினச்செய்தி, 25.12.2019