கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா? – இலக்குவனார் திருவள்ளுவன்
கிரண்(பேடி) – மாநிலக் காவலரா? மத்திய ஏவலரா?
துணைக்கண்டமாகத் திகழும் இந்தியா என்பது அரசியல் யாப்பின்படி இந்திய ஒன்றியம் என்றுதான் அழைக்கப்பெற வேண்டும். பல்வேறு அரசுகளையும் தேசிய இனங்களையும் சேர்த்து உருவாக்கப்பட்ட அரசியல் நிலப்பகுதி என்பதால் இந்திய ஒன்றியம் எனப் பொருத்தமாக அமைத்து அழைத்துள்ளனர்.
மத்திய ஆட்சியில் உள்ளவர்களின் அதிகாரப் பசியாலும் தேசிய இனங்களைப் புறக்கணித்து ஒற்றை இனமாகக் காட்ட முயலும் போக்காலும், இந்தியா நடைமுறையில் ஒன்றிய அரசாகச் செயல்படவில்லை. இது குறித்துத் தேசிய இனங்களும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தியா மக்களாட்சியை நடைமுறைப்படுத்தும் பல்வேறு மாநிலங்களை உருவாக்கினாலும் பண்பாட்டு மரபுகளைப் பேணவேண்டி சிறிய நிலப்பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொண்டது. அவையே இந்திய ஒன்றியப் பகுதிகளாகும். அவைதாம், அந்தமான் நிக்கோபார் தீவுகள்(Andaman and Nicobar Islands),இலட்சத்தீவுகள்(Lakshadweep), சண்டிகார்(Chandigarh), தமன்-தையூ(Daman and Diu), தத்திரா – நகர் அவேலி(Dadra and Nagar Haveli), புதுச்சேரி(Puducherry), தில்லி(Delhi) ஆகியனவாகும்.
இவற்றுள் புதுச்சேரியிலும் புதுதில்லியிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் சார்பாளர்களின் ஆட்சி நடைபெறுகிறது. எனவே, செயற்பாட்டாளர்(Administrator) மூலம் ஆட்சி நடைபெறும் பிற ஒன்றியப்பகுதி்களையும் துணைநிலை ஆளுநர் மூலம் செயற்படுத்தப்படும் இவ்விரு மாநிலங்களின் ஆட்சிகளையும் வெவ்வேறு பார்வையில்தான் காண வேண்டும்.
மாநிலத்திற்கு இணையான புதுச்சேரி, தில்லிப் பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் சார்பாளர்களுக்கு – முதல்வருக்கும் அமைச்சரவைக்கும் – முதன்மை அளித்து இவற்றின் துணைநிலை ஆளுநர்கள் செயல்பட வேண்டும். தேசியத்தலைநகர் பகுதி(National Capital Territory of Delhi) என அழைக்கப்பெறும் தில்லியின் துணைநிலை ஆளுநர் மாநில அரசிற்கு எதிராக அடித்த கூத்துகளைக் கண்டித்து அதன் முதல்வர் அரவிந்து கெசுரிவால் (Arvind Kejriwal)பெரும் போராட்டம் நடத்தினார். மத்திய அரசின் எடுபிடியாகத் தொடர்ந்து இருக்க விரும்பாத அதன் ஆளுநர் நசீபு(சங்கு) (Najeeb Jung) மனச்சான்றிற்கு இடம் கொடுத்து விலகிவிட்டார்.
ஆனால், புதுச்சேரியில் கிரண்(பேடி) துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றது முதல், மக்களாட்சி நெறிமுறைகளைக் குழிதோண்டிப் புதைத்து வருகிறார்.
மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் பாலமாக இருக்க வேண்டியவர் உருவாக்குவதோ அலங்கோலம்!
இவர் இ.கா.ப. அலுவலராக இருந்தமையால் அதிகார ஆசை விடாமல் இருக்கி்ன்றார் போலும்!
தத்திரா ஆட்சிச் செயற்பாட்டாளரும் இ.ஆ.ப.தான் ( மதுப்பு வியாசு / Madhup Vyas, I.A.S.)
இலட்சத்தீவு ஆட்சிச்செயற்பாட்டாளரும் ஓய்வுபெற்ற இ.கா.ப. அலுவலர்தான்.(பரூக்கு கான் / Farooq Khan, I.P.S.) அவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
தில்லியில் இப்பொழுதும் இதுவரையும் இருந்த 25 துணைநிலை ஆளுநர்களில் நால்வர் இ.கு.ப. (I.C.S.), இருபதின்மர் இ.ஆ.ப. (I.A.S.) அலுவலர்களாக இருந்தவர்கள்தாம். மீதி ஒருவரும் படைத்துறைஅதிகாரி. பொதுவாக மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பொழுது சிக்கல் வராமல் இருந்திருக்கலாம் இ.ப்பொழுது புதுச்சேரியில் (தில்லியிலும்தான்) வெவ்வேறு கட்சி ஆட்சி இருப்பதால் இந்நிலை என்றால் ஆளுநர்கள் மத்தியஅரசின் ஏவலர்களாகச் செயல்படுகின்றனர் என்றுதானே பொருள்.
மாநிலப்பேராயக் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் தில்லி சென்று வந்த கிரண்(பேடி) முன்னிலும் தீரமாகத் தனது அதிகாரத்தைச் செயற்படுத்த முனைகிறார் என்றால், பா.ச.க.வின் ஏவுகணையாகச் செயல்படுகிறார் என்றுதானே பொருள்.
அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த பின்பும் அரசு ஊழியர்களிடம் நேரடித் தொடர்பு, மக்களிடம் நேரிடையான தொடர்பு கொண்டு, தானே எல்லாம், தனக்கே எல்லா அதிகாரமும் என்று செயல்பட்டால், தன்னுடைய அதிகாரப் பசிக்கு நாட்டை வேட்டையாடுகிறார் என நாட்டு நலனில் கருத்து கொண்டோர் கூறத்தானே செய்வர்!
திறமையாலும் ஊடக வெளிச்சத்தினாலும் புகழுருபெற்ற கிரண்(பேடி), அதற்குக் களங்கம் நேரும் வகையில் நடந்து கொள்வதை உணரவில்லையா?
ஊழலுக்கு எதிரான இயக்கம் நடத்தியவர் கட்சி சார்பின்றி நடந்து கொண்ருந்தால் மக்கள் உள்ளங்களில் இடம் பெற்றிருப்பார். மதவெறிபிடித்த கட்சியில் சேர்ந்த பொழுதே இவரது பிம்பம் உடைந்தது. இப்பொழுது தனக்கும் மக்களாட்சி நெறிக்கும் கேடு விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது முறைதானா?
சிறை அதிகாரியாக இருந்து சிறைவாசிகளை நடத்தியதுபோல் மக்கள் சார்பாளர்களை நடத்தலாமா?
சிறைவாசிகளிடம் சீர்திருத்தச் செயற்பாடுகளை மேற்கொண்டதாகப் பேர் பெற்றவர் அமைச்சரவையை அடிமைபோல் நடத்தலாமா?
நாட்டுநலன் தொடர்பான உயரிய எண்ணம் எழுந்தது எனில், சிறந்த திட்டம் இருந்ததெனில், அவற்றை முதல்வர் மூலம் அமைச்சரவையைத் தொடர்புகொண்டு செயற்படுத்துவதுதானே முறை!
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இருமுறை மத்திய அமைச்சராக இருந்தும் மும்முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் ஒரு முறை மக்களவை உறுப்பினராகவும் இருந்தும் பட்டறிவு பெற்றவர். கிரண்பேடியோ அதிகாரியாக இருந்து ஆள்வோர் கட்டளைக்கிணங்கச் செயற்பட்டவர். கட்சிச்சார்பிலான பதவியில் அமர்ந்துவிட்டாலே அவரைவிட வல்லவர் என்று பொருளல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதிகாரப் போட்டியை மறந்துவிட்டு இணைந்து செயல்பட்டால்தான் அவருக்கும் புதுச்சேரிக்கும் நல்லது என்பதை உணர வேண்டும்.
கிரண்(பேடி) கூறுவதுபோல் மாநில அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம்தான் மையம் கொண்டுள்ளது. அவரது விருப்புரிமைப்படி நடந்துகொள்வதுற்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால், விருப்புரிமை என்பது எப்பொழுது வரும்? அதுவா? இதுவா? என மாறுபட்ட கருத்து வரும்பொழுது எது என முடிவெடுக்கும் உரிமைதானே! தானாகவே “தடிஎடுத்தவன்தண்டல்காரன்” என்பதுபோல் தான் எண்ணுவதே அதிகாரம் என்று பொருள்கொண்டு செயல்பட்டால் இந்திய அரசியல் யாப்பையே இழிவுபடுத்துவதாகத்தானே பொருள்!
உண்மையிலேயே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்(பேடி)க்கு மக்களாட்சி நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு இருந்ததெனில்,
உண்மையிலேயே நேர்மையாகச் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் எனில்
உண்மையிலேயே தன் பொறுப்பிலுள்ள புதுச்சேரி மாநிலத்தை முதலிடத்திற்குக் கொண்டுவரவேண்டும் என்ற ஆர்வம் இருந்தது எனில்,
உண்மையிலேயே புதுச்சேரி மக்களை உயர்ந்த இடத்தில் அமர வைக்க வேண்டும் எனற துடிப்பு இருந்தது எனில்,
இவற்றுக்கான காலம் இனியும் இருக்கின்றது. “மத்திய ஆட்சியின் ஏவலராகச் செயல்படாமல், புதுச்சேரி மாநிலக் காவரலாகச் செயல்படுவேன்” என்ற உறுதி கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பதவியில் அமர்ந்துள்ள அமைச்சரவையுடன் ஒத்துழைத்து வழிகாட்டியும் வழி நடத்தியும் சிறப்பாகச் செயல்படட்டும்!
புதுச்சேரி மக்கள் உணர்வுகளுடன் மோதி, அங்கிருந்து விரட்டப்படாமல் நிலைத்து நிற்க அதிகாரிகளுடனும் மக்களுடனுமான தொடர்புகளைத் துண்டித்துக் கொள்ளட்டும்!
புதுச்சேரியும் தில்லியும் தம் மாநில நலனுக்காகப் போராடிப் பிற மாநிலங்களும் இணைந்தால், மத்திய ஆட்சியும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்பதைப் பா.ச.க.வும் உணர வேண்டும்.
அரசின் பணிகளால் சிறப்புற்ற கிரண்(பேடி) அம்மையாரே!
ஆளுநர் பதவியிலும் சிறப்புற்று விளங்க உம்மை மாற்றிக் கொள்வீர்களாக!
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். (திருவள்ளுவர், திருக்குறள் 346)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 168, மார்கழி 24, 2047 / சனவரி 08, 2017
புதுச்சேரி, தமிழ்நாடு என வேறு கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலெல்லாம் இப்படி ஏதாவது ஒரு புற வழியில் அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது பா.ச.க. இது கீழ்த்தர அரசியல்!
தமிழர்களை ஆளும் விருப்பம் இருந்தால் பா.ச.க-வினரே, முதலில் தமிழருக்காக ஏதேனும் செய்யுங்கள்! ஈழம், காவிரி, எழுவர் விடுதலை, ஏறு தழுவல், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடை, முகாம்களில் வாழும் ஈழத் தமிழர் புனர்வாழ்வு எனத் தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றில் ஏதாவது சிலவற்றையாவது தமிழர்களுக்குச் சார்பாக முடித்துத் தந்தால் எங்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை பிறக்கும். தமிழ்நாட்டில் நீங்கள் ஆட்சியமைக்க ஒரு வாய்ப்பும் பிறக்கும். அதை விட்டுவிட்டு எதற்கெடுத்தாலும் தமிழர்களுக்கு எதிராகவே எல்லாவற்றிலும் செயல்பட்டுக் கொண்டு, பின்னர் இப்படிக் கொல்லைப்புற வழிகளில் எங்களை ஆள முயல்கிறீர்களே, வெட்கமாக இல்லை? அரசியலுக்கு வர விரும்பும் நடிகர்கள் கூட நாலு பேருக்குத் தையல் பொறி, இரண்டு பேருக்கு சலவைப் பெட்டி, பத்துப் பேருக்குத் தங்கத் தாலி, நூறு பேருக்கு அன்னத்தானம் என ஏதாவது செய்து மக்கள் மனதில் இடம் பிடித்த பிறகுதான் அரசியலுக்கு வருகிறார்கள். நீங்களும் நாடு விடுதலையடைவதற்கு முன்பிருந்து கட்சி நடத்துகிறீர்கள். ஆனால், அரசியலின் இந்த அரிச்சுவடி கூட இன்னும் உங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் என்ன செய்ய?
எல்லாம் காலத்தின் கோலம்;;; இவர்கள் படுத்தும்பாட்டில் நேர்மை திணறுகிறது மக்கள் அல்லல் படுகின்றனர். – களப்பால் குமரன்