சிங்கள அரசின் ஏமாற்று வேலை – பழ. நெடுமாறன்
சிங்கள அரசின் ஏமாற்று வேலை
இலங்கையில் 2009-ஆம் ஆண்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் உசாவல் நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையைப் பரிந்துரைத்தது.
2010 சனவரியில் தபிளின்(Dublin) மக்கள் தீர்ப்பாயம் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்துப் பன்னாட்டு உசாவல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரியது.
செருமன் மக்கள் தீர்ப்பாயமும் இதே கோரிக்கையை வலியுறுத்தியது. ஆனால், இலங்கை அரசு எத்தகைய உசாவலையும் தொடங்காத காரணத்தினால் ஐ.நா. உசாவல் குழுவைப் பான்-கீ-மூன் அமைத்தார். ஆனால், இக்குழு இலங்கைக்குள் நுழைவதற்கே இராசபக்குசே இசைவளிக்கவில்லை.
பன்னாடுகளின் அழுத்தம் காரணமாக “நல்லிணக்க ஆணைக்குழு‘ என்ற பெயரில் போர்க் குற்றவாளியான இராசபக்குசே தன்னை உசாவ தனக்குத்தானே ஒரு குழுவை நியமித்துக்கொண்டார். 2012-ஆம் ஆண்டில் இக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதுபற்றிய தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியது. ஆனால், அதையும் இராசபக்குசே மதிக்க மறுத்தார்.
2013-ஆம் ஆண்டில் பன்னா்டு உசாவலை ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம்(பிள்ளை) வலியுறுத்தினார். இதை ஏற்று அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானம், மனித உரிமை ஆணையத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், இராசபக்குசே அவற்றைச் சிறிதும் சட்டை செய்யவில்லை.
2013-ஆம் ஆண்டில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரித்தன் முதலான 24 நாடுகள் கொண்டுவந்து நிறைவேற்றிய நீர்த்துப்போன தீர்மானத்தையும் இலங்கை ஏற்கவில்லை. இத்தீர்மானத்தின் போது இந்தியா வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
2014-ஆம் ஆண்டில் மனித உரிமைக் குழுவே இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஓர் உசாவல் மேற்கொண்டு ஓர் ஆண்டுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கிணங்க 2015 மார்ச்சு மாதத்தில் அந்த அறிக்கை அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் 2015}ஆம் ஆண்டு சனவரியில் இலங்கையில் மைத்திரி பால சிறீசேனா தலைமையில் புதிய அரசு பதவியேற்றதால், புதிய அரசிற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இந்திய அரசுடன் மேற்கு நாடுகளும் இணைந்து வற்புறுத்தி ஆறு மாத கால நீட்டிப்பு அளித்தன.
ஆறு மாதம் கழித்து அறிக்கை வெளியிடப்பட்டபோது “இலங்கை அரசே அனைத்துலக மேற்பார்வையோடு உள்ளக உசாவல் நடத்தலாம்’ எனப் பரிந்துரைக்கப்பட்டது. இந்த உசாவற்குழுவின் அறிக்கை 2017 மார்ச்சு மாதம் அளிக்கப்பட வேண்டும். ஆனால், இலங்கை அரசு இன்னும் 18 மாத கால வாய்ப்பு கேட்கிறது.
இந்த நிலைமையில் 6.3.17 அன்று கொழும்பு நகரில் நடைபெற்ற சட்ட மாநாட்டில் இலங்கைத் தலைமையர்(தலைமையமைச்சர்) இரணில் விக்கிரமசிங்கே பேசுகையில் “போர்க் குற்றங்கள் குறித்து உசாவல் நடத்த வெளிநாட்டு நீதிபதிகளை ஏற்க முடியாது. இலங்கையின் நீதித்துறையின் மீது நம்பிக்கை இல்லாமல் போர்க் குற்றங்கள் குறித்து உசாவல் நடத்த வெளிநாட்டு நீதிபதிகள் – இலங்கை நீதிபதிகள் அடங்கிய நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத கருத்துரையாகும்’ எனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அதற்கு இரு நாட்களுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் படை வீரர்கள் நடுவில் பேசிய இலங்கைக் குடியரசுத் தலைவர் சிறீசேனா, இராணுவ வீரர்களைப் பாதுகாப்பது தனது கடமை என்றும் அவர்கள் மீதான புகார்களை உசாவ வெளிநாட்டு நீதிபதிகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.
2009-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை – எட்டு ஆண்டுகளுக்கு மேலாக – ஈழத் தமிழர்கள் வாழ்வில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை. இலங்கை அரசு, பன்னாட்டுக் குமுகாயத்திற்கு அளித்த உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது.
சிங்களப் படையினர் இழைத்ததாக ஆதாரப்பூர்வமாகச் சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்பு ஏற்காமல் இதுவரை தட்டிக்கழித்துக் கொண்டே வருகிறது.
இத்தகைய போர்க் குற்றங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் ஆளான பிற நாடுகளைச் சேர்ந்த அரசுகள் எவ்வித நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தால் சிங்கள அரசு எத்தகைய ஏமாற்றுவேலைகளில் ஈடுபட்டிருக்கிறது என்பது புரியும்.
1971-ஆம் ஆண்டில் வங்க தேச மக்கள் பாகித்தானின் இன ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாகித்தான் படையினரால் திட்டமிட்ட இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டார்கள்.
இது குறித்து உசாவல் நடத்த 2009-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட பன்னாட்டுக் குற்ற உசாவல் மன்றம் வங்கத் தேசத்தின் எதிர்க்கட்சித் தலைவரான இரகுமான் நிசாமி, மீர்வாசம்அலி, ஆர்சு ஆரூல் இசுலாம் போன்ற முதன்மைத் தலைவர்கள் முதலான பலருக்கு மரணத் தண்டனை விதித்தது. மேலும் பலருக்கு நீண்டகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
1971-ஆம் ஆண்டு வங்கத் தேசத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளுக்குக் காரணமானவர்களைப் பன்னாட்டுக் குமுகாயம் மன்னிக்கவில்லை. 38 ஆண்டுகள் ஆனபிறகுகூட விடாப்பிடியாக போர்க்குற்றவாளிகள் கண்டறியப்பட்டுத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்.
இரண்டாம் உலகப்போரின்போது பல நாடுகளைச் சேர்ந்த மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய செருமனி, சப்பான் ஆகிய நாடுகள் உலக மன்பதையிடம் மன்னிப்பு கேட்டன.
நூரம்பர்கு பன்னாட்டு நீதிமன்றம் நாசிப் போர்க்குற்றவாளிகளுக்கு மரண தண்டனை முதலான பல கடுமையான தண்டனைகளை விதித்தது. இதைப்போல தோக்கியோவில் அமைக்கப்பட்ட பன்னாட்டு நீதிமன்றம் சப்பானியப் போர்க் குற்றவாளிகளைத் தண்டித்தது.
பல்லாயிரக்கணக்கான சீனப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக நடத்தியதாக சப்பான் மீது சீனா பகிரங்கமாகக் குற்றம்சாட்டியது. இதன் காரணமாகச் சீன-சப்பானிய உறவு சீர்கெட்டது.
அதைப்போல இரண்டாம் உலகப்போரின்போது தென்கொரியாவைக் கைப்பற்றிய சப்பான் படைத்துறை ஆயிரக்கணக்கான கொரியப் பெண்களை பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தியது என்று அப்போது தென்கொரிய அரசு குற்றம் சாட்டியது.
தனது படைத்துறை இழைத்த கொடும் குற்றங்களுக்காகச் சப்பானிய அரசு மன்னிப்புக் கோரியதோடு பாதிக்கப்பட்ட கொரியப் பெண்களுக்கு மறுவாழ்வு இழப்பீடு அளிக்கவும் முன்வந்தது.
இலங்கையிலும் சிங்களப்படைத்துறை ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்களை அடைத்துவைத்து பாலியல் கொடுமை செய்தது குறித்த குற்றச்சாட்டுகள் ஐ.நா. மனித உரிமைகுழுவிடம் பதிவு செய்யப்பட்டுள்ளன.
செருமனி, சப்பான் போன்ற வல்லரசுகளே தங்களது படைவீரர்கள் ஆற்றிய போர்க் குற்றங்கள், இனப்படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றிற்கு மன்னிப்புக் கேட்டுள்ளன.
ஆனால், சின்னஞ்சிறிய நாடான இலங்கை அரசு தனது படைவீரர்கள் இழைத்த குற்றங்களை மூடி மறைத்து அவர்களைக் காப்பாற்ற முயல்கிறது. அதற்கு இந்திய அரசும் மேற்கு நாடுகளின் அரசுகளும் துணைபோகின்றன என்பது மானுட மன்பதைக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
2009-ஆம் ஆண்டில் அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுச் சட்டப் பேராசிரியர் பிரான்சிசு பாயில் பின்வருமாறு கூறினார்: “1948-ஆம் ஆண்டில் ஐ.நா. ஆதரவில் கூட்டப்பட்ட இனப்படுகொலைத் தடுப்பு உடன்பாட்டில் 140 நாடுகள் கையெழுத்திட்டன. இவற்றில் ஏதேனும் ஒரு நாடு அல்லது நாடுகள் இலங்கை அரசு மீது ஏக்கு(Hague) பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவேண்டும். அந்நீதிமன்றம் அவசர உசாவல் நடத்த முன்வரவேண்டும்” என வற்புறுத்தினார். அவர் இவ்வாறு கூறி 8 ஆண்டுகள் கடந்து ஓடிவிட்டன. புத்தர், மகாவீரர், காந்தியடிகள் ஆகியோரைப் பெற்றெடுத்த இந்தியா உள்பட உலகில் எந்த ஒரு நாடும் இவ்வாறு முறைப்பாடு கொடுக்க முன்வரவில்லை.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என கூறி உலக மக்களைத் தமது உறவினர்களாகக் கருதி உரிமைக் கொண்டாடிய தமிழர்கள் நாதியற்றுப் போனார்கள். உலகில் எந்த ஒரு நாடும் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவுவதற்கு முன்வரவில்லை.
– பழ. நெடுமாறன்
தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு
தினமணி, நாள் 11.03.2017
இந்தச் சிக்கல் தொடர்பாக நடந்த எல்லாவற்றையும் பட்டியலிட்டு, இதே போல் உலகின் பிற பகுதிகளில் நடந்தவற்றுக்கு உலக நாடுகளின் எதிர்வினையையும் பட்டியலிட்டு எழுதப்பட்டுள்ள இக்கட்டுரை சிறந்த வரலாற்று ஆவணம்! நன்றி!