தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙு) தொடர்ச்சி]
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙூ)
பேரறிஞர் அண்ணாவின் மறைவிற்குப்பின், ஆட்சியாளரின் பதவியை நிலைப்படுத்திக் கொள்வதற்கான விட்டுக் கொடுத்தல்களும் ஒத்துப்போதல்களும் எதிர்பார்த்த தமிழ்ப் பயன்களைத் தரவில்லை. இதனால் பேராசிரியர் இலக்குவனார் வேதனை உற்றார். உசுமானியாப் பல்கலைக்கழகத்திலோ, தமிழில் இருந்து பிறந்தனவே தெலுங்கு முதலான தமிழ்க்குடும்ப மொழிகள் என்னும் உண்மையை ஏற்காத தெலுங்குத் துறையினர் தெலுங்கின் மகள் தமிழ் என்றும் தெலுங்கின் தங்கை தமிழ் என்றும் உண்மைக்கு மாறான கருத்துகளைப் பரப்பி வந்தனர். அவர்களிடம் தமிழின் தொன்மையையும் தாய்மையையும் விளக்கினார். உள்ளம் ஒருபுறம் தமிழ்த் தொண்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் மறுபுறம் நாடுகடத்தப்பட்டதாக எண்ணி வருந்தியது. தமிழ்க்கனவுகளை நிறைவேற்றும் ஆட்சி வந்த பின்பு தாம் இருக்க வேண்டிய இடம் தமிழ்நாடுதானே. ஆனால், அயலவர் நாட்டில் வாழும் சூழல் வந்து விட்டதே என வேதனை உற்றார். தமிழன்பர்களும் தமிழ்த்துறையினரும் இதே போன்ற எண்ணம்கொண்டு எழுதியும் பேசியும் வந்தனர். பேராசிரியர் இலக்குவனாருக்குத் தாய்மண் நாட்டம் மிகுந்ததால், தாம்முன்பு பணியாற்றிய தெ.தி.இந்துக்கல்லூரியினர் அழைப்பை ஏற்று அங்கே 1.6.70 இல் முதல்வராகப் பணியில் சேர்ந்தார்.
நாகர்கோயில் தெ.தி.இந்துக்கல்லூரியில் முதல்வராகப் பணியில் சேர்ந்ததும் பேராசிரியர் இலக்குவனாரால் கல்லூரி பொலிவு பெற்றது குறித்தும் அவரது பண்புநலன் குறித்தும் அங்குப் பணியாற்றிய முனைவர் ச.சுப்பிரமணியன் பின்வருமாறு தெரிவித்துள்ளார் (வீ.முத்துச்சாமி: இலக்குவனாரின் ஆய்வுப்பண்பு):
“பேராசிரியர் இலக்குவனார். முன்னறிவிப்பில்லாதபடிப் பேசச் சொல்லினும் நன்கு பேசும் நல்லாற்றல் படைத்தவர்கள். பகுத்தறிவோடு எதிர்நீத்தம் செய்யவல்ல புலமையாளர்.
வகுப்பில் சென்று ஓய்வெடுக்கும் பழக்கம் பேராசிரியர் இலக்குவனார் அவர்களிடம் யான் கண்டதில்லை. அஞ்சாது சென்று, எப்பாடத்தையும் கற்பிக்கும் இயல்பினர். பலவாண்டுப் பயிற்சியால் முன் தயாரிப்புக்கூட வேண்டாதபடிக் கற்பிப்பார். சிலபோது புதிய சிந்தனைகளையும் புகுத்துவார். நாநலம், பரந்த செய்தியினை அவர் வகுப்பில் காணலாம்.
பேராசிரியர் இலக்குவனார் அவர்களைப் போல் ஆசிரியர் குலத்தில் அஞ்சா நெஞ்சத் தலைவரை நான் பார்த்ததில்லை. பிற நிலையிலும் அவர்கள் அவ்வாறே. அன்புக்கு மிக்க அன்பாவார். பண்புக்குப் பண்பாவார். பகைக்குப் பகையாவதற்குத் தயங்கார். பொருளால் அவர்களுக்குச் செலவு மிகவுண்டு. வரவு அதற்குத் தக்கவாறில்லை. ஆயினும் கொடைக்கும், ஏழைக்கிரங்கிப் பொருளுதவி புரிவதற்கும் தயங்கார். தந்நிலை தெரிந்தும் செலவிற்கஞ்சிச் சிறியராகார். ஏழை என்று தெரிந்தால் எவ்வகையினும் உதவ முயல்வார். முற்போக்கு எண்ணமுடையவர். தவறு என்று கண்டால் யாரையும் எதிர்க்கத் தயங்கார். அவர் ஆற்றல் அளவிடற்கரியதாகும்.
தமிழ் அவர்க்குயிர். திருக்குறள் அவர்க்குத் தேன். இவ்விரண்டையும் யாரும் குறைகூறக் கேட்டால் அவர் முகம் அவர் நாவிலிருந்து பின்வரும் சொல்லுக்கு முன்னோடியாகும்.
…குடும்பப் பாரத்தால் பொருள்தேவை மிகவிருந்தும் தம் தரத்தில் குறையவில்லை பலநிலையில்.”
சிறப்பான கல்வியையும் தமிழுணர்வையும் ஊட்டி வழக்கம்போல் சிறப்பாகப் பேராசிரியர் இலக்குவனார் பணியாற்றுகையில் அடுத்த உலகத்தமிழ்மாநாடு பற்றிய அறிவிப்பு வந்தது. இதற்கிணங்கப் பிரான்சில் நடைபெற்ற (சூலை 15-18,1970) மூன்றாவது உலகத்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் இலக்குவனார் பங்கேற்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையை அப்போதைய முதல்வர் விதைத்திருந்தாலும் மாநாட்டுப் பேராளர்கள் அறிவிப்பில் பேராசிரியர் பெயர் இல்லை. உலகத் தமிழ் மாநாட்டில் ஏன் பங்கேற்கவில்லை எனப் பேராசிரியரிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது, தமிழறிஞர்களைப் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்னும் திட்டம் இருப்பின் என்னையும் அனுப்பியிருப்பர். ஆனால், கட்சிகளின் சார்பாளர்களாக அனுப்பப்பட்டிருப்பதால் எக்கட்சியையும் சாராத தான் அனுப்பிவைக்கப்படவில்லை என்றார். இது குறித்து அப்போதைய முதல்வரிடம் செய்தியாளர்கள் வினவிய பொழுது, அக்கால மன்னர்கள் புலவர்களாகவும் இருந்துள்ளனர். அதுபோல் இப்போதைய ஆட்சியாளர்கள் புலவர்களாகவும் திகழ்வதால் பங்கேற் கின்றனர் என மழுப்பினார். எனினும் (உலகத் தமிழ் மாநாடு முடிந்த பின்னர்) பேராசிரியர் வராமையால் வருந்திய அறிஞர்களால், பிரான்சு நாட்டிற்கு வருமாறு அழைப்பு வந்தது. அவர்களின் செலவேற்பாட்டில் அழைப்பதாகவும் ஆனால், பிரெஞ்சு அல்லது தமிழ் தவிர ஆங்கிலம் போன்ற வேறுமொழியில்பேசுவதாக இருப்பின் பேராசிரியர் தம் சொந்தச் செலவில் மொழிபெயர்ப்பாளரை அழைத்து வர வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தனர். பிரான்சு நாட்டினரின் மொழிப்பற்றைப் பேராசிரியர் வியந்து போற்றினார். எனினும் தாம் பின்னர் வருவதாகத் தெரிவித்தார். ஆனால், அத்தகைய வாய்ப்பு அமையவில்லை.
பேராசிரியர் சி.இலக்குவனார் நிறுவிய குறள்நெறி இதழை அவர் இரண்டாம் மகன் பேரா.மறைமலை(அப்பொழுது மாணாக்கராக இருந்தார்) நடத்தி வந்தார். எனினும் எதிர்பாரா நேர்ச்சிக்கு ஆளானமையால் 1969 இல் இதழை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகம் திரும்பிய பேராசிரியர் தமிழால் அமைந்த அரசால் தமிழ்ப்பகைவர்கள் பயன்பெற்றுத் தமிழுக்கு எதிர்பார்த்த நன்மை விளையாதது கண்டு உள்ளம் வெதும்பினார்.
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்பது தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருள் நெறி அல்லவா? எனவே, மீண்டும் இதழ்ப்பணியில் ஈடுபட விழைந்தார். தமிழ் முனை, தமிழ் உலகம், என்பனபோல் தமிழ் எனத் தொடங்கும் பெயர்களைக் கொடுத்து அவற்றில் ஒன்றிற்கு இதழ்இசைவு தர வேண்டினார். ஆனால் இசைவு கிடைக்கவில்லை. ஒருமைப்பாடு, ஒற்றுமை என்ற பெயர்களை அளித்தார். இவை யாவும் இந்திய ஒருமைப்பாடு அல்லது ஒற்றுமைக்கு எதிரான தமிழக ஒருமைப்பாடு அல்லது தமிழர் ஒற்றுமையைக் குறிப்பன என அதற்கும் மறுப்பே விடையாக வந்தது. தூய்மை என்ற பெயரை வேண்டியதற்குத் தனித்தமிழ் என்ற போர்வையில் தனித் தமிழ் நாடு கேட்பதற்கான இதழ் என மறுத்தனர்.
மாநிலத் தன்னாட்சி என்றெல்லாம் பேசுகின்றோம். இன்றைக்கும் இதழ்களின் பெயரை முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது. ‘தமிழ்த்தென்றல்’ எனப் பதிவு வேண்டியவர்க்கு மாருதம் என்றால் யாவருக்கும் தெரியும்; ‘தமிழ் மாருதம்’ என வையுங்கள் எனக் கூறி அதை ஒப்புக் கொண்ட பின்பே இசைவு தந்தனர். ‘செந்தமிழ்’ இதழிற்கான அஞ்சல் இசைவாணை விவரம் கிடைக்காததால் புதியதாகப் பதிவு முயற்சி மேற்கொண்ட பொழுது ‘செந்தமிழ்’ என்னும் பெயரை மாற்றுமாறு தெரிவித்தனர். மாறி மாறி ஆட்சியில் இருப்பவர்களும் இருந்தவர்களும் ஏதேனும் ஒரு சமயம் மத்தியில் பங்கு வகிப்பதால் அதைப் பயன்படுத்தி மாநில உரிமைகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வேறு நோக்கில் செயல்படுவதால் நம் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்நிலை என்று மாறும் எனத் தெரியவில்லை.
இறுதியில் முன்பு நடத்திய குறள்நெறிப் பெயரையே தருவதாகக் கூறினர். அதனையே ஏற்றுப் பேராசிரியர் இலக்குவனார் குறள்நெறி இதழைத் தொடங்கினார். அதன் தேவை குறித்துப் பின்வருமாறு ஆசிரியருரையில் தெரிவித்தார்:
“இப்பொழுது தூய தமிழ்ப் பற்று மக்களிடையே குறைந்து வருகின்றது. வண்டமிழ்க் காப்புக்குரிய மாணவர் அணியும் திசைமாறிச் செல்லத் தொடங்கியுள்ளது. தமிழ்ப் பகைவர்கள் ஆங்காங்குத் தலை காட்டத் தொடங்கியுள்ளனர். தமிழ்ப் பற்றாளர் போல் நடித்து தமிழக அரசால் பயனும் பெறத் தொடங்கியுள்ளனர். இந்தி வல்லாண்மை இன்னும் ஒழிந்த பாடும் இல்லை. ஆகவே, குறள்நெறியின் தொண்டு மீண்டும் வேண்டப்படுகின்றது. இதழ் ஒன்றை வெளியிடுவதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை நன்கறிவேன். பல முறை எண்ணி எண்ணி மீண்டும் வேண்டாம் இந்தத் தொல்லை என்று வாளாமை பூண்டதும் உண்டு. ஆயினும் தமிழ் நாட்டுச் சூழ்நிலை குறள்நெறியின் தொண்டை வேண்டி நிற்கின்றது என்ற உணர்வு என் உள்ளத்தில் மேலோங்கி எழுந்துள்ளது. ஆங்காங்குள்ள அன்பர்கள், குறள்நெறியை மீண்டும் தொடங்குங்கள் என்று அன்பாணை பிறப்பிக்கின்றனர். தமிழ்ப் பணி புரிவோர்க்கு ஒரு கருவியும் வேண்டப்படுகின்றது. ஆதலின் குறள்நெறியை மீண்டும் தொடங்குகின்றேன்.”
குறள்நெறி (மலர் 4 : இதழ் 1) : புரட்டாசி 25, 1995 : 11.10.70
(தொடரும்)
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply