தாமரை மன்னிப்பு கேட்க வேண்டும்!
குடும்பச்சிக்கலைத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திரிக்கலாமா?
இல்லறம் என்பது அன்பும் அறனும் இணைந்த நல்லறமாகும். நம்பிக்கை, புரிதல், விட்டுக் கொடுத்தல் ஆகியவை இருந்தால்தான் அமைதியான வாழ்க்கை காணமுடியும். ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது எல்லாக் குடும்பங்களிலும் சண்டையும் பிணக்கும் உள்ளமையை உணர்த்துவதே! எனவே, குடும்பத்தலைவன், தலைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மன வேறுபாடாக மாறும் முன்னரே இணங்கிப்போய் இணைந்து வாழ்வதுதான் அவர்களுக்கு மட்டுமல்லாமல் அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் ஏற்றதாய் அமையும்.
கருத்து வேறுபாடுகளையும் கருத்து மோதல்களையும் இயல்பாக எடுத்துக் கொள்ளாமல் பகையாக நோக்குவதால்தான் குடும்பத்தில் பிளவு உண்டாகிறது. இக்காலத் தலைமுறையினர் வேகமாகக் காதலிக்கின்றனர். அதைவிட வேகமாக மண விலக்கும் பெற்று விடுகின்றனர். ஒருவரிடம் விட்டுக் கொடுத்து வாழாதவர் அடுத்தவரிடம்மட்டும் எப்படிஇணங்கி வாழ்வார்? எனக் கேட்கும்வண்ணம் மறுவாழ்க்கையிலும் புரிதலுணர்வின்றி அல்லல்படுகின்றனர். அதே நேரம், மணக்கொடை (வரதட்சணை) கேட்டுத் துன்புறுத்தல் போன்ற மனித நேயமற்றக் கொடுமைகளால் ஏற்படும் பிளவு வேறுவகை. ஆனாலும் அதிலும் பொறுத்துக் கொண்டு வாழ்வோர் உள்ளனர்.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. (திருக்குறள் 152)
என்னும் தெய்வப்புலவர் நெறியைப் பின்பற்றினால் குடும்ப வாழ்க்கை நல்ல பல்கலைக்கழகமாகத் திகழும்.
ஆனால், இவற்றையெல்லாம் பிறருக்கு எடுத்துரைத்து ஆற்றுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே குடும்ப உறவில் சிதைவை உருவாக்கி மகிழ்கிறார்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது.
நடிகர்-நடிகையர் குடும்பச் சண்டை போன்று கடந்த வாரம் கவிஞர் தாமரை-தோழர் தியாகு குடும்பச் சண்டை வீதிக்கு வந்து பலரையும் வேதனைப்படுத்தியது. இருவரிடையே நிகழ்ந்த பிணக்குகளை அறியாமல் நாம் ஒன்றும் கூற இயலாது. அதே நேரம், ஊடகங்களின் வாயிலாக வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் இருவரும் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் கருத்து தெரிவிப்பதில் தவறில்லை.
தாமரையின் பேச்சு, உரை, முகநூல் பதிவு போன்றவற்றைப் பார்க்கும் பொழுது தாமரையிடம் நேர்மையில்லை என்றே சொல்ல வேண்டி யுள்ளது. அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலேயே இது நன்கு தெளிவாகிறது.
முதலில் ஒன்றை நாம் உணர வேண்டும். இது ஒரு குடும்பச்சிக்கல். யார்பக்கம் நயன்மை அல்லது நியாயம் இருக்கிறது என்பதை உணரும் வகையில் கருத்தினை வெளிப்படுத்தாமல் தாமரை, ‘தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன்!’ எனப் பதாகை எழுதிவைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவ்வாறே கருத்தும் தெரிவித்துமுள்ளார். இருவரிடையே உள்ள குடும்பச்சிக்கலில் எங்கே வந்தது தமிழ்த்தேசியம்? இவ்வாறுசொல்வதன் மூலம் அவர் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகச் சொல்லும் தகுதியையும் இழந்துவிட்டார்.
“தமிழை நேசித்தேன், தமிழுக்காக உழைத்தேன், தமிழுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டேன், இன்று தெருவுக்கு வந்துவிட்டேன்.” என்றும் “தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்” என்றும் தாமரை கூறியுள்ளார்.
தாமரை படித்த பொறியாளர் படிப்பு அவரை உலகிற்கு அடையாளம் காட்டவில்லை! செல்வம் சேர்க்க வழிகாட்டவில்லை! அப்பொழுது பாடல் வாய்ப்பு கேட்டு எத்தனையோ படிகளில் ஏறி இறங்கியும் திரைத்துறையில் மணக்க இயலவில்லை. தாமரை என்னும் மலருக்கு மணம் கிடைத்ததே அவர் தமிழால் அடையாளப்படுத்தப்பட்டதுதான். தமிழ் அடையாளமே அவரை உலக நாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகளையும் செல்வம் சேர்க்கும் வாய்ப்புகளையும் தந்தது. அவ்வாறிருக்க அவர் “தமிழுக்காக உழைத்தேன் தெருவுக்கு வந்துவிட்டேன்” என்று எப்படி மனமறிந்து சொல்கிறார்.
“தியாகுவை நம்பினேன்! தெருவிற்கு வந்துவிட்டேன்” எனச் சொல்வதற்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால், திரைப்படப் பெண்பாடலாசிரியர் என்பதால் தன் மீது ஊடக வெளிச்சம்படும் என்று திசை திருப்பும் கருத்தைச் சொல்லலாமா? இவ்வளவு நேர்மையற்றவரா? தமிழை விரும்புவதாகக்கூறும் தமிழ்க்கவிஞர்!
இதற்குக்கடுமையாக எதிர்ப்பு வந்ததும் தமிழ்த்தேசிய உணர்வால்தானே தியாகுவை மணந்தேன் என்பதுபோல் மழுப்புகிறார். கலைத்துறையைச்சேர்ந்த இருவர் அல்லது கல்வித் துறையைச் சேர்ந்த இருவர் அல்லது மருத்துவத் துறையைச் சேர்ந்த இருவர், அல்லது சட்டத் துறையைச் சேர்நத இருவர், என்பன போன்று ஒத்த தொழில் அடிப்படையில் இருவர் மணம் புரிவது இயற்கையே. அவர்களிடையே சிக்கல் வந்தது என்றால் அது தனிப்பட்ட சிக்கல்தானே! அவர்களின் தொழில் சிக்கலாகுமா? “கலையை நேசித்தேன் கைவிடப்பட்டேன்” என்பதுபோல் யாரும் கூறுவார்களா? மாட்டார்கள் அல்லவா ? அதுபோல்தான் தமிழ்த்தேசிய உணர்வு மற்றொருவர்பால் ஈடுபாடு ஏற்படக் காரணமாக இருந்திருக்கலாம். அதற்காக அவர்களின் தனிப்பட்ட சிக்கலைத் தமிழ்த்தேசியத்துடன் முடிச்சு போட்டு அவ்வுணர்வைக் கொச்சைப்படுத்தலாமா? எனவே, தாமரை இதற்காக வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவர் கூறும் பிற கருத்துகளிலும் உள்நோக்கம் ஒன்றை வைத்துக் கொண்டு தவறான செய்தியைப் பரப்புகிறார் என்றேபடுகிறது. “கணவர் தியாகு என்கிற தியாகராசன்கடந்த 23.11.2014- இல் வீட்டை விட்டு வெளியேறித் தலைமறைவாகி விட்டார்” எனப் பொய்யான தகவலுடன்தான் அறிக்கையே விட்டுள்ளார். அன்று “வீட்டை விட்டு வெளியேறியவர் வீட்டிற்குத் திரும்பவில்லை” என்றுதான் உண்மையைக் கூறியிருக்க வேண்டும். தொலைக்காட்சிகளில், இதழ்களில் போராட்ட அறிவிப்புகளில், மின்மடல் குழுக்களில் தியாகு தலைமறைவாகவில்லை என்னும் வகையில் செய்திகள், நிகழ்வுகள் வந்துள்ளன. அவ்வாறிருக்க தலைமறைவாகிவிட்டார் எனச் சொல்வதிலிருந்தே பொய்யான செய்தியைக் கூறி இரக்கம் பெற எண்ணுகிறார் என்பது தெரிகிறது. அவரது நோக்கம் இரக்கம் பெறுவது அல்ல! தான் நேசித்த கணவரை இழிவுபடுத்தவேண்டும்என்பதாகத்தான் தெரிகின்றது.
“எங்கேயோ இருக்கும் ஈழத்துத்தமிழ்ப் பெண்களுக்கு நீதி கேட்டுப் போராடுகிறீர்கள்” என்று சொல்லித் தாய்மண்காக்கும் போராட்டங்களிலும் போர்க்களங்களிலும் அறமற்ற முறைகளால் கொல்லப்படும் வதைக்கப்படும் அல்லல்படும் கொடுமைகளைக் கணவனுடன் ஒத்துப்போய் வாழத்தெரியாத ஒரு பெண்ணுடன் ஒப்பிட எப்படி மனம் வந்தது? இதிலிருந்தே இதுவரை இவர் பேசிய பேச்செல்லாம் போலியானவை என்பது தெரியவருகின்றது.
சமரன் தந்தைக்காக ஏங்குவதாக அறிக்கை விடுகிறார். ஆனால் தந்தை அருகே வருமாறு கூப்பிட்ட பொழுது “வீட்டிற்கு வாருங்கள் பேசுகிறேன்” என்கிறான் அச்சிறுவன். இவற்றில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும். தந்தை வருகைக்காக ஏங்குபவனாக இருந்தால் அப்பா அழைக்காமலே பார்த்ததும் ஓடிப்போய்க்கட்டிப்பிடித்திருப்பான். எனவே, வெளிப்படையாகச் சிறுவன் இவ்வாறு கூறுகிறான் என்றால் தாய் அவனைத் தன் விருப்பிற்கு ஆட்டி வைக்கிறார் என்றும் தெரிகிறது. தந்தை அன்பிற்காக ஏங்கும் சிறுவனைத் தவிக்க விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்ற பழிச்சொல் வரவேண்டும் என்பதற்காக இவ்வாறு நாடகமாடுகிறார் போலும்! எனினும், தன் கணவர் மீது இருக்கும் சினத்தையும் எதிர்ப்பு உணர்வையும் மகன் உள்ளத்திலும் திணிக்கும் அடாத வேலையைச் செய்கிறார் என்பது தெளிவாகிறது. அறிந்தும் அறியாமலோ சிறுவன் சமரனின் எதிர்காலத்தை அழித்துக் கொண்டுள்ளார் தாமரை!
இவர் கூறும் பிற கருத்துகளிலும் உள்நோக்கம் ஒன்றை வைத்துக் கொண்டு தவறான செய்தியைப் பரப்புகிறார் என்றே படுகிறது.
கவிஞர் தாமரை 500 திரைப்படப்பாடல்கள் எழுதியுள்ளார் என்பது பாராட்டிற்குரியதுதான். அதே நேரம் திரைப்படப்புகழ் மாயையானது. நிலைக்கும் என்று சொல்ல இயலாது. ஆனால், தோழர் தியாகுவின் மொழிபெயர்ப்புப் பணிகள் என்றும் புகழ்தருவன. அதுவும் சிறையில் இருந்தபடி அவர் காரல் மார்க்சின் ‘மூலதனம்’ நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அளித்துள்ளார் அல்லவா? அது காலம் உள்ளளவும் அவருக்குப் புகழைச் சேர்க்கும். “இல்லானை இல்லாளும் வேண்டாள்” என்னும் நிலையில் இருக்க வேண்டா! உங்கள் கணவரிடம் பொருளில்லாது இருக்கலாம். அறிவுச் செல்வம் இருக்கிறது. எனவே, குறைத்து மதிப்பிட்டு உயர்வு மனப்பான்மை கொள்ள வேண்டா.
இல்லறத்தைவிட்டு ஓடித் துறவறம் காண்பது ஆரிய முறை. தமிழர்கள் இல்லறத்தில் இருந்தபடியே துறவு நிலையில் பொது அறம் மேற்கொள்ளலாம். எனவேதான்,
அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன். (திருக்குறள் 46)
என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். எனவே, தியாகுவும் இணைந்து வாழ்வது குறித்துக் கருதிப் பார்க்க வேண்டும்.
தாமரை பெண்ணியவாதி அல்லர். பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘குமுத’த்தில் தியாகுவின் முதல் மனைவி குடும்பத்தினரின்பேட்டி வந்திருந்தது. அப்பொழுது தாமரை தன் கணவர் தியாகுவிடம் அவரின் மகளுக்கு உதவுமாறு கூறலாமே என்றுதான் படித்தவர்கள் எண்ணினர். சில ஆண்டுகளுக்கு தாமரை தியாகுவிடம் மோதல் கொண்டதற்கும் அவரது மகளுக்கு அவர் அளித்த முதன்மை என்றுதான் செய்திகள் வந்தன. ஒரு தந்தை தன் மகளுக்கு உதவுவதற்குக் குறுக்கே நிற்பவர் எங்ஙனம் பெண்ணியவாதியாக இருக்க முடியும்? எனவே, அவர் தன்னை ஒரு பெண்ணியவாதியாகவோ தமிழ்த்தேசிய உணர்வாளராகவோ சொல்லிக் கொண்டால் அது நகைப்பைத்தான் ஏற்படுத்தும்.
அவரது நோக்கம் சேர்ந்துவாழ்வதுதான் என்றால் “சேர்த்து வையுங்கள்” என்றுதான் வேண்டியிருப்பார். 20 ஆண்டுகள் தியாகு ஆற்றிய தமிழ்த்தேசியப் பணிகள் குறித்து விசாரணை வேண்டும் என்கின்றார். தியாகு சார்ந்த அமைப்பு சார்பான வினா என்றால் அவர் அதில் இருந்தால் கேட்கலாம். அல்லது அவ்வமைப்பினரிடம் இது குறித்துப் பேசலாம். ஆனால், குடும்பத்திற்கு அவர் என்ன செய்தார் என்று கேட்காமல் தமிழ்த்தேசியத்திற்கு என்ன செய்தார் என்று கேட்கிறார் என்றால் அவரின் நோக்கம் இணைவதல்ல! இணைவதை விரும்புவதுபோல் சொல்லிக்கொண்டு களங்கம் கற்பிக்க விரும்புவதுதான் நோக்கம் எனப் புரிகின்றது. தியாகு இதற்கு உடன்படத் தேவையில்லை. அப்படி நண்பர்கள் வந்து கேட்டாலும் குடும்பச்சிக்கல் என்றால் குடும்பம்பற்றிக் கேளுங்கள். இதைக்கேட்டால் நான் எதுவும் சொல்ல வேண்டிய தேவையில்லை என்று சொல்லலாம். இதற்கு முன்பு இவ்விசாரணைக்கு உடன்படுவதாகச் சொன்னவர்தான் தியாகு. எனினும் தாமரை நாடமாடுவது தெளிவாகப் புரிவதால் அவர் இதற்கு இணங்கத் தேவையில்லை!
“தியாகு கடந்த நான்காண்டுகளாகவே வீட்டைவிட்டு வெளியேற முயன்று வந்தார்” என்றும் தாமரை தெரிவிக்கிறார். அப்படியாயின் அவர் மனப்போராட்டங்களுக்குப் பின்புதான் வெளியேறி இருக்க வேண்டும். நாளொரு ஏச்சும் பொழுதொரு சண்டையுமாக ஒரே வீட்டிற்குள் இருப்பதைவிட விலகலாம் என்ற முடிவிற்கு வந்திருக்கலாம். எப்படியாயினும் மனக்கசப்பு என்பது பல ஆண்டுகளாகவே இருக்கின்றது என்றால் அதனை இத்தகைய போராட்டம் போக்காமல் வளர்க்கவே செய்யும். எனவே, குடும்பச் சிக்கலைக் குடும்பச்சிக்கலாகவும் தம் இருவரிடையே எழுந்த பிணக்காகவும் நோக்க வேண்டும். மாறாகத் தமிழ்த்தேசியச் சிக்கலாகத் திசை திருப்புவது என்பது தியாகுவைத் தாக்குவது ஆகாது. தமிழ்த்தேசிய உணர்வாளர்களை இழிவுபடுத்துவது ஆகும். எனவே, கவிஞர் தாமரை தன் தவறான அறிவிப்பிற்கும் பேச்சுக்கும் மன்னிப்பு கேட்டுத் தன் குடும்பச் சிக்கலை இயல்பான முறையிலோ குடும்ப நீதிமன்றம் மூலமோ தீர்க்கட்டும்! அவருடைய போராட்டத்திற்கு இப்போது பாதுகா்பபு தரும் காவல்துறை எப்போதுமே பாதுகாப்பு தந்து கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. சட்டப்படியான நடவடிக்கையைக் காவல்துறை எடுப்பதன்மூலம் தனித்துவிடப்படும் சிறுவன் சமரன் எதிர்காலம் பாதிப்புறலாம். எனவே, மகன் சமரன் நலம் கருதியாவது அமைதியாக இரு தரப்பு உண்மைகளையும் எண்ணிப் பார்த்து இணக்கமான முடிவு காண அவருக்கு வாழ்த்துகள்!
தமிழ் மக்கள் ஒருவரைப் பாராட்டும் பொழுது அவரின் திறமை, அறிவு, ஆற்றல், தொண்டு அடிப்படையில்தான் பாராட்டுவர். அதே நேரம் குற்றம் கண்டால் மொழி, இனம், முதலானவற்றின் கண்ணோட்டத்தில் கூறுவர். இதுவரை தமிழ் உணர்வாளராக எண்ணி வந்த தாமரையைக் “கன்னடப்பெண், எனவேதான் தாய்த்தமிழ்ப்பள்ளி பிறருக்கு நடத்திக்கொண்டு கருநாடகப் பள்ளியில் தன் மகனைச் சேர்த்துள்ளார். தமிழ்த்தேசியத்தைக் கொச்சைப் படுத்துகிறார்” எனக் கூறத் தொடங்கிவிட்டனர். எனவே யானை தன் தலையில் தானே மண்ணை வாரிக் கொட்டிக்கொள்வதுபோல் அல்லாமல் கவிஞர் தாமரை, தனக்குக் களங்கம் வராமலும் தன் மகன் எதிர்காலம் சிதைவுறாமலும் இருக்கும் வகையில் தான் நேசித்த கணவருடன் ஒற்றுமையாக வாழ வழி காணட்டும்! அம் முயற்சியில் நேர்மை இருப்பின் தோழர் தியாகுவும் தன் மகளைவிட்டுப் பிரியாமல் அவருடன் சேர்ந்து வாழ வழி காணட்டும்! இருவரும் இணைந்தாலும் பிரிந்தாலும் ஒருவரை ஒருவர் கடியாமல் அமைதிகாத்துத் தத்தம் வழியில் நாட்டு மக்களுக்கான தொண்டினை ஆற்றட்டும்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.(திருவள்ளுவர் – திருக்குறள் 45)
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை
அகரமுதல 69 நாள் மாசி 24,2046 / மார்ச்சு 08, 2015
Leave a Reply