திருத்துறைக்கிழார் கட்டுரைகள் : எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை – 3. குமுகாய அமைப்பு, 4.பொருளியல் நிலை, 5.மக்கள் வாழ்க்கை நிலை

திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தமிழ்நாடு
எ. இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் நிலைமை
3.குமுகாய அமைப்பு
ஐந்தாயிரம் ஆண்டுகட்குமுன், அஃதாவது முக்கழகக் காலங்களில் இன்றுபோல குலப்பிரிவுகள் (சாதி) இல்லை. ஆரியர் இந்நாட்டில் குடியேறிய பின்னரே பிர்ம, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இந்துமதத்தில் சேர விரும்பாத மக்கள் ஐந்தாம் குலம் (சாதி), “பஞ்சமர்”, “தீண்டப்படாதவர்” என அழைக்கபப்ட்டனர். இவர்களுக்கு முன்கூறிய நான்கு பிரிவினர்களுடன் எவ்வகைத் தொடர்பும் இல்லை. அவர்கள் வாழும் இடங்களில் வாழக்கூட உரிமையில்லை. ஆங்கிலத்தில் “untouchables, outcastes” என்றழைக்கப்பட்டனர். மேல்காட்டிய நாற்குலத்தினர் வாழும் தெருக்களில் நடந்து செல்லக் கூட உரிமையில்லை. சூத்திரர் என்பார் மேல்மூவர்க்கும் அடிமைப்பணிபுரிபவர்களே. நான்கு பிரிவினர்க்குள் கொள்வினை, கொடுப்பு வினையும் இல்லை. தீண்டப்படாதவர் மிகக் கொடுமையாக நடத்தப்பட்டனர். இதனால் ஐந்தாம் பிரிவினர் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிறித்தவம், இசுலாம் முதலிய மதங்களில் சேர்ந்தனர்.
தமிழ்நாட்டில் தோன்றிய நயன்மைக்கட்சி (Justice Party) முயற்சியால் தீண்டப்படாதோர் பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்த்தல் வேண்டுமென்றும், அங்ஙனம் சேர்க்காத பள்ளிகளின் ஒப்புதல் (அங்கீகாரம்) திரும்பப் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அத்தகைய பெருகவாழ்ந்தான் சித்தமல்லி மாவட்டக்கழகத் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியனாக 1941 ஆம் ஆண்டு பணியமர்த்தம் செய்யப் பெற்றேன் என்பது குறிப்பிடத்தக்கது.
1948 – ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியை வடவரிடம் விட்டுச் சென்ற பின்னர் 44 ஆண்டுகள் கடந்தும் குலப்பிரிவுகள் போயினவா? இல்லையே! குலத்தின் பெயரால் கழகங்கள் அமைத்துச் செயல்படுகின்றனர். தீண்டப்படாதோர்க்குச் சமவுரிமை வழங்கப் பெறவில்லை. அவர்களுக்குக் கோழிக்கூடுகள் தனியாகக் காடு, மேடுகளில் கட்டிக் கொடுக்கப்படுகின்றன.
கோயில்களில் பூசை செய்யும் பணி அவர்களுக்கு அளிக்கக் கூடாதென்று இந்திய மீயுயர் முறைமன்றம் (Supreme court) தீர்ப்பளித்துவிட்டது. நாடுவிடுதலை (சுதந்திரம்) பெற்றும் தாழ்த்தப்பட்டவர்கட்கு (தீண்டப்படாதவர்) இந்துமதக் கட்டுப்பாட்டில் சிறிதும் விடுதலையில்லை.
பொதுவாக நோக்கின், இந்தியாவில் மதவெறி, சாதிவெறி, கொடுந் தாண்டவமாடுகின்றன என்றால் மிகையன்று. பண்டைத் தமிழ்நாட்டில் குலவேறுபாடின்றி மணவினை நடந்தது. தாலி கட்டும் பழக்கமும் இல்லை. இவற்றிற்குத் தமிழ் இலக்கியங்களில் சான்றுகள் பலவுள. ஆரியமதத்தில்தான் பெண்களை அடிமைகளாக்கும் பழக்கம் உண்டு. அதற்கு அறிகுறியாகப் பெண்களுக்குத் திருமணத்தின் போது தாலிகட்டும் பழக்கம் உண்டு.
இன்று திருமணத்தில் ஆரியர் முறையைப் பின்பற்றித் தாலி கட்டுகிறார்கள். ஒருவளுக்கு ஒருவன் என்பது தமிழ்ப்பண்பாடு. ஒருத்திக்குப் பல கணவர் என்பது ஆரியப்பண்பாடு.
4.பொருளியல் நிலை
பொதுவாக, இந்தியாவின் பொருள் நிலை மிகவும் சீர்கெட்டுவிட்டது. உருபாவின் மதிப்பைக் குறைத்தும், செம்பொன் கட்டுப்பாட்டைத் தளர்த்தியும், அயலார் இந்தியாவில் தொழில் நடத்த உரிமையளித்தும், அயல்நாடுகளில் கடன் பெற்றும், உள்நாட்டில் கடன்முறிகள் வழங்கியும், சிறுபொருள் சேர்ப்பை ஊக்கப்படுத்தியும் அல்லலுழக்கிறது இந்திய அரசு.
தமிழ்நாட்டின் பொருளியல் நிலை படுமோசமாகிவிட்டது. பணக்காரர்கள் மேலும் மேலும் பணம் பெருக்குகின்றனர்; ஏழைகள் மேலும் மேலும் ஏழைகளாகின்றனர்; உணவின்றி, உடையின்றி, உறையுளின்றித் தொல்லைப்படும் நல்லவர்கள் பலராவர்; பட்டினிச் சாவுகள் பலவாகும்.
பொருள்களின் விலைகள் நாளுக்குநாள் ஏறிக்கொண்டே இருக்கின்றமையின், நடுத்தரமான வருவாயுள்ளவர்கள்கூட மிகவும் நெருக்கடிக்குள்ளாகின்றனர். நாட்டின் பெருஞ்செல்வம் கோயில்களில் முடக்கப்பட்டுள்ளது. கள்ளப்பணம், கள்ளக்கடத்தல், பதுக்கல், கலப்படம் மலிந்துவிட்டன. பணப் பெருக்கத் தொல்லை!
கள்ளச் சாறாயம் காய்ச்சல், கள்ளக் கள்ளிறக்கல், எங்கும் ஏற்பட்டுவிட்டன. உயர் மதுவகைகள் அரசு உரிமம் பெற்று விற்கப்படுகின்றன. ஏழைகட்கு அவை எட்டாதவை.எனவே, மலிவு விலையில் மது காய்ச்சுகின்றனர். கள்ளச்சாறாயம் குடித்துப் பலர் சாகின்றனர்.
சமயச் சார்பின்மையென்று சொல்லிக் கொண்டு இந்திய அரசு சமயம் பரப்பும் பணிபுரிவது போல், மதுவிலக்கு என்று சொல்லிக்கொண்டு இந்தியா முழுவதும் மதுக்கடைகள் வைத்து நடத்துகின்றது. கொள்கையற்ற கோமாளிகள் அரசு!
ஏழைகள் துயர் துடைக்க, இந்திய அரசால் இயலவில்லை. இல்லாததும், பொல்லாததும் பேசிப் பொழுதைப் போக்குகின்றது. தமிழக அரசு கோயில்கள் கட்டப் பொருள் திரட்டுகிறது. ஆங்கிலர் ஆட்சி ஆரியர் ஆட்சியைவிடச் சிறந்தது என்பது மெய். தமிழ்நாட்டில் கிடைக்கும் கனிமப்பொருள்கள், பிற இயற்கை வளங்கள் யாவும் நடுவணரசுக்கே சொந்தமாம். ஆகையால், அவற்றை வடவர் கவர்ந்து செல்கின்றனர். தமிழக அரசுக்கு மன்னுரிமைத் (Royalty) தொகை கூட வழங்குவதில்லை. வருவாய் மிகுதியாகக் கிடைக்கும் அஞ்சல்துறை, இருப்புப்பாதைத் துறை, வருமான வரித்துறை, சுங்கத்துறை முதலியன நடுவணரசின் ஆளுமைக்குட்பட்டவை.
தமிழ்நாட்டிற்கு இயற்கைச் சீற்றங்களால் இடர்விளையின், வறங்கூரின், வடவர்பால் தூதனுப்ப வேண்டும். அவர்கள் வந்து பார்வையிட்டு, ஒன்றுக்கு முக்கால் கொடுப்பர். மண்டியிட்டு மடிப்பிச்சைக் கேட்கவேண்டிய நிலை. இஃது ஆண்டான் அடிமை முறையே ஆகும். தமிழ்நாட்டில் மக்கள் பலர் வறுமையில் வாடுகின்றனர்.
5.மக்கள் வாழ்க்கை நிலை
பொதுப்பட நோக்கின் இந்திய நடுவணரசின் ஆட்சியில் மக்கள் பலவகையிலும் இன்னல் படுகின்றனர்; பலர் பிழைப்புக்கு வழியின்றி வறுமையால் வாடுகின்றனர்; பலர் உடுத்திக் கொள்ள உடையின்றி அல்லல்படுகின்றனர்; பலர் குந்தக் குடிசையின்றித் திண்டாடுகின்றனர்.
இந்தியர் ஆட்சியில் ஊழல்கள் மலிந்து விட்டன. அரசுத்துறை நிறுவனங்களில் எதன் பொருட்டு மக்கள் சென்றாலும், கையூட்டு கொடாமல் எதுவும் நடப்பதில்லை. சிலர் கையூட்டு, கேட்டே வாங்குகின்றனர். சிலர் பணம் கொடுத்தால்தான், செவிசாய்க்கின்றனர். பணம் கொடாதவர்களைச் சாக்கு போக்கு சொல்லித் தட்டிக் கழிக்கின்றனர். ஏழை மக்கள் படும்பாடு ஏராளம்.
அரசுப்பணிகளில் இருப்பவர்கட்கு உயர்ந்த ஊதியம் அளிக்கப்படுகிறது. இடையிடை அருமைப்படி (D.A) அளிக்கப்படுகிறன்றது. சிலசமயம் ஊதிய உயர்வும் அளிக்கப்படுகிறது. உழைக்கும் ஏழைகட்கு எந்த உயர்வும் இல்லை. சில காலங்களில் வேலையில்லாமலும் இருக்க வேண்டியுள்ளது. வேளாண் தொழிலாளர்களுக்கு ஆறு மாதம் வேலை கிடைப்பதில்லை.
உணவுப் பொருள்களின் விலைகளோ நாழிக்கு நாழி ஏறுகின்றன. பலர் பட்டினிக் கிடக்க நேர்கிறது. அரசுப்பணிகளில் இருப்பவர்கட்கு ஓய்வுபெறும் அகவை ருஅ (58). அரசியல் பதவிகளில் இருப்பவர்கட்கு அகவை வரம்பு இருப்பதாகத் தெரியவில்லை. எண்பத்திரண்டு அகவை கடந்த இராம.வேங்கடராமன் இன்று (2.6.1992) குடியரசுத் தலைவராக இருக்கிறார் என்பது அறிக.
சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்கட்கு ஓராண்டுக்காலம் பதவியில் இருந்தாலும், ஊதியத்தில் பாதி ஓய்வூதியமாக அளிக்கப்படுகிறது. அமைச்சர்கட்கும், குடியரசுத்தலைவர்கட்கும் ஓய்வூதியம் உண்டு.
அரசு ஏழைகளுக்காக ஏதாவது திட்டங்கள் வகுத்தால், அவற்றைச் செயல்படுத்த பணம் படைத்தவரே முன்வருகின்றனர். பெரும் பயனைப் பணக்காரர்களே அடைகின்றனர்.
சில திட்டங்களை அரசே மேற்கொண்டால், அரசு அலுவலர்கள் பங்கு கேட்கின்றனர். கொடாவிடின், அத் திட்டப்பணம் ஏழைகட்குக் கிட்டாமல், பணம் கொடுக்கும் பிறர்க்குக் கொடுக்கப்படுகிறது.
இவையே இன்றைய தமிழ்நாட்டு மக்கள் வாழ்க்கை நிலைகள்.
மேற்காட்டிய குறைபாடுகள் நீங்கி, மக்கள்யாவரும் நலமாகவும், வளமாகவும், அமைதியாகவும் வாழவேண்டுமாயின் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும், தனியாட்சியுரிமை வழங்கப்பெறல் வேண்டும்.
ஒற்றுமை, ஒருமைப்பாடு, ஒன்று நம் சிந்தனை, நாட்டுக்காக, நாமெல்லாம் இந்தியர், இந்தியப்பண்பாடு ஒன்றுபட்டது என்றெல்லாம் வெற்றுரைகள் பேசிப்பொழுது போக்குவதால் பயனில்லை. இந்நிலை நீடிக்காது.
(தொடரும்)
திருத்துறைக்கிழார் கட்டுரைகள்
தொகுப்பு – முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை



Leave a Reply