(புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)

15.சீனாவில் “ஊடகங்கள்”

47cropped-magazines

  சாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெரும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே! அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு ஆதரவாளர்கள் நடத்தும் ஏடுகள்!

  அன்றையநாள் அலுவலகம் செல்ல முற்படுகையில், காலை கடுமையான போக்குவரத்து நெரிசல். நான் சென்ற மகிழுந்து நகர முடியாமல் நின்றது. சாலையின் முன்புறம், ஒரு காவலர் அந்த வழியில் செல்ல வேண்டாம் என வாகனங்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். ஏதோ நேர்ச்சி(விபத்து) நடந்திருக்கும், அதனால்தான் பாதையை மாற்றுகிறார்கள் என நினைத்து, உடன்வந்த நண்பர்களிடம் கேட்டேன்.

 47Chinese-National-Geography

  காரணம் அதுவல்ல, அங்கே உழவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர்.  அதைத்தான் அந்தக்காவலர் ஒலிவாங்கியில் சொல்லிக்கொண்டுள்ளார், நாம் வேறுபாதையில் பயணிக்கலாம் என வண்டியைத் திருப்பினர். வாகனத்தைத் திருப்பும்போது எட்டிப் பார்த்தேன். கையில் ஒலிவாங்கியுடன் சிலர் குழுவாக நின்று முழக்கமெழுப்பிக்கொண்டிருந்தனர்.  அவர்களைக் காவலர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர்.

  நண்பர்களிடம், ஏன் இந்தப் போராட்டம் எனக் கேட்டேன். இன்றைக்கு நகரமாக உள்ள சியான் நகரம், ஒருகாலத்தில் வேளாண்மை செழித்து விளங்கிய பகுதி. இப்பகுதியில் பல வேளாண்நிலங்கள் அழிக்கப்பட்டு, அதே இடங்களில்தான் இன்று உயர்ந்துநிற்கிற பல வானாளாவிய கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நிலத்தைக் கொடுத்த உழவர்களுக்குச்  சரியான ஈட்டுத்தொகை அளிக்கவில்லை என்றே உழவர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என விளக்கினார் நம் நண்பர்.

  அன்றைய போராட்டச்செய்தி குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்வதற்காக, சியான் செய்திஇணையங்களில் தேடினேன். ஆனால், எந்த விதப் போராட்டச்செய்திகளும் சீன ஆங்கில இணையத்தளங்களில் காணக்கிடைக்கவில்லை.

 47landesa

  சீனாவில் ஓர் ஆண்டுக்குச் சற்றொப்ப 90,000 போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும், அதில் மூன்றில்இரண்டு போராட்டங்கள் நிலஉரிமைக் கோரிக்கைகளுக்காக நடத்தப்படுபவை என்றும் (இ)லாண்டீசா(Landesa – Rural Development Institute) என்கிற ஊர்ப்புறவளர்ச்சி சார்ந்து செயல்படும் தன்னார்வத் தொண்டுநிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிறுவனம், சற்றொப்ப 40 நாடுகளில், ஊர்ப்புறமக்களின் நிலஉரிமைகளுக்காகப் பணியாற்றிவரும், பன்னாட்டுத் தன்னார்வத்தொண்டு நிறுவனமாகும்.

  47landesa_in_china02

  முற்றாளுமை நாடுகள், தாம் நேரடியாக நுழையமுடியாத நாடுகளிலும், நுழையமுடிந்த நாடுகளிலும், ‘என்.சி..’ எனப்படுகின்ற தன்னார்வத் தொண்டுநிறுவனங்களை ஊட்டி வளர்க்கின்றன. இத்தொண்டுநிறுவனங்கள் பெரும்பாலானவை, மக்களைச் சில ஞாயமான கோரிக்கைகளுக்காகத் திரட்டினாலும், அதன் இறுதி இலக்கு முற்றாளுமை நலன்கள் சார்ந்தே இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. அவ்வகையில் சீனாவில் செயல்படுகின்ற தொண்டுநிறுவனமே இது! இதுபோன்ற சில தொண்டு நிறுவனங்களின் மூலம்தான் மேற்குலக நாடுகள் சீனாவைப் புரிந்து கொள்ள முடிகின்றது.

 47weibo-logo

முகநூல், சுட்டுரை (ட்விட்டர்), வலைத்தளம், முதலான பல சமூக வலைத்தளங்களைச் சீனாவில் நாம் பயன்படுத்த முடியாது. ஆனால், தனிமனிதர்கள் அவர்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கணியன்களை / மென்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறான ஒன்றே ‘சின வெய்போ’.

சீன வலைத்தளம்

சீன வலைத்தளம்

சீனநுண்வலை (சீனவெய்போ/ Sina Weibo) என்ற இந்த இணையத்தளத்தைத் தான் சீனத்தின்சுட்டுரை(ட்விட்டர்)என்று உலகமே அழைக்கிறது. பெரும்பாலும்சீனமொழியிலேயேஇங்குகருத்துப்பரிமாற்றம்நடைபெறுகின்றது. இதில்தான் அவ்வப்போது, சீனஅரசுக்கு எதிரான கருத்துகள் பதிவாகும். அதைஅவ்வப்போது, சீனஅரசுமட்டுப்படுத்தியும்வருகின்றது. சில நேரங்களில் அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. மற்றவகையிலான எல்லா ஊடகங்களுக்கும் சீனாவில் “தடா”தான்!

 47sina-weibo02

சீன அரசின் தொலைக்காட்சியில் விவாத நிகழ்வுகள் உண்டு! அதில் பலர் சீன மொழியில் விவாதிக்கின்றனர். அரசுக்கு எதிராக விவாதங்கள் மட்டும் அதில் நடைபெறாது. இவ்வாறு, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் மக்களுக்குப் பொய்ச் செய்திகள் போய் சேராது எனச் சீன அரசு நம்புகிறது. ஆனால், பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்வதுபோல்தான் இது!