தலைப்பு- தொல்லைக்காட்சிகள் வேண்டா02 : thalaippu_thollaikaathcikalvendaa_maraimalai02

தொல்லைக்காட்சிகள் வேண்டா!

 

  ஊடகம் என்பது மிகவும் ஆற்றல் வாய்ந்தது.  மனித மனங்களை ஊடுருவித் தாக்கும் மின்சாரம் போன்றது.  தனி மனித மனங்களை மட்டுமன்று ஒரு சமுதாயத்தின் போக்கையே மாற்றிக் காட்டும் பேராற்றல் வாய்ந்தது என்பதனை வியத்துநாம் போர் முதல் சிரியாத்து தாக்குதல் வரை நிகழ்ந்த நிகழ்வுகள் மெய்ப்பித்துள்ளன. இதனால் ஊடகங்கள் பெரும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டியுள்ளது.பெரும்பான்மையும் அத்தகைய பொறுப்புணர்வை நம் நாட்டு ஊடகங்களிடம் நன்கு காணமுடிகிறது.

  சில சமயங்களில் பரபரப்புக்காக சிறிய செய்திகள்தானே என்று ஒளி/ஒலிபரப்பிவிட்டால் அவற்றின் தாக்கம் பேரளவில் ஏற்பட்டு எதிர்பாராத தீய விளைவுகள் ஏற்பட்டுவிடலாம்.

ஆசியசோதி நேரு பெருமான் தமது இளம் வயதிலேயே இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சிக்குத் தலைவராகத்(1929) தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தச் சூழலில் அவர் இலண்டன் மாநகருக்குச் சென்றிருந்த வேளையில் அவரை நேர்காணல் நிகழ்த்தச் சென்ற ஒரு செய்தியாளருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நேருவை ஓர் அரிய சூழலில் ஒளிப்படம் பிடிக்கும் வாய்ப்பு அந்தச் செய்தியாளருக்கு வாய்த்தது. அது என்ன அரிய சூழல்? நேருவுக்குத் தனிமையிலே வெண்சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் பெரும்பாலோருக்கு நேருவுக்குப் புகைப்பழக்கம் இருப்பது தெரியாது. அந்தச் செய்தியாளர் சென்ற வேளையில் நேரு தனிமையில் புகை பிடித்துக் கொண்டிருப்பதனைப் பார்த்துவிட்டார். உடனே நேருவை அந்தக் கோலத்தில் படம்பிடிக்க முற்பட்டார்.’வெடுக்’கென எழுந்த நேரு அத்தகைய படம் பிடிக்கத் தன்னால் இசைவளிக்க இயலாது எனத் திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.”நான் ஓர் இளம் செய்தியாளன்; இத்தகைய படம் பிடித்து என் இதழுக்கு அனுப்பினால் என் பணியில் பெரிய உயர்வும் விளம்பரமும் எனக்குக் கிட்டும். இதற்காக நீங்கள் இசைவு அளிக்கக் கூடாதா?” என ஏக்கத்துடன் கேட்டார் அந்தச் செய்தியாளர்.

  “உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துகள். ஆனால் இத்தகைய படம் வெளிவந்தால் என் நாட்டில் இளைய சமுதாயத்தின் பெரும்பகுதி பாழாய்ப் போய்விடும். ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ என்னைப் பெரும்பாலான இளைஞர்கள் தங்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டுள்ளனர். ஒரு வெண்சுருட்டுடன் என் படத்தைக் கண்டால் அவர்கள் இந்தப் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடலாம். எனக்கிருக்கும் கெட்ட பழக்கம் அவர்களுக்கும் தொற்றிவிடக் கூடாதல்லவா?அதனால்தான் இவ்வாறு படம்பிடிக்கவேண்டா எனக் கேட்டுக்கொண்டேன்.” என்றார் நேரு பெருமான்.

 அந்த இளந்தலைவரின் பொறுப்புணர்வையும் இளைய தலைமுறையை வழிநடத்திச் செல்வதில் உள்ள அக்கறையையும் கண்டு இலண்டன் மாநகர்ச் செய்தியாளர் வியப்பில் வாயடைத்துப் போனார்.

  இப்போது பரபரப்புக்காக அரசியல் கட்சிகளுக்கிடையே நிகழும் சொற்போர்களையும் அரசியல் மேடைகளில் தலைவர்கள் மீதான  வார்த்தைத் தாகுதல்களையும் தெரிந்தோ தெரியாமலோ தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிவிடுகின்றன.

இ.அ.பு.(T.R.P.) கணக்கீட்டில் முதன்மையும் முன்னணியும் பெற்றுவிட இத்தகைய ஒளிபரப்புகள் உதவலாம்.

  ஆனால் கட்சித் தொண்டர்களிடையே காழ்ப்பும் கசப்புணர்வும் மேலோங்கி அதனால் பூசலும் பிணக்கும் பெருகுவதற்கு இத்தகைய “பரபரப்புக் காட்சிகள்” வழிவகுத்துவிடுமல்லவா?

  நான்கு கட்சித்தலைவர்களையழைத்து உரையாடல் நிகழ்ச்சி நடத்தும்போதே பெருத்த சண்டைகளும் வெளிநடப்புக்காட்சிகளும் இடம் பெறுவதைக் காண்கிறோம்.

  இந்தியாவிலேயே அதிகக் கட்சிகளை உடைய மாநிலம் தமிழ்நாடுதான். கட்சிகளைத் தம் தெய்வங்களாகப் போற்றித் தீக்குளித்துக் கொள்வோர் மிகுந்திருப்பதும் தமிழ்நாட்டில்தான்.

  எனவே நம் மாநிலத் தொலைக்காட்சி அலைவரிசைகள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.

வாய்ச்சண்டைகளையும் கருத்துமோதல்களையும் கூட்டணிப் பூசல்களையும் பரபரப்புச் ‘சுவை’கருதி வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியில் காட்சி ஊடகங்கள் ஈடுபட்டுவிடவே கூடாது.

  நேரலை நிகழ்வுகளில் எந்தத் தவறான சொல்லாட்சியோ அவதூறு வாய்ந்த உரையாடல்களோ இடம் பெற்றுவிடாமல் பார்த்துக் கொள்வது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அரசியல் தலைவர்கள் ஆகியோரின் முதன்மையான பொறுப்பாகும்.

இத்தகைய கருத்தும் கவனமும் போற்றப்படாவிடின் தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளாகிவிடலாம். அத்தகைய சூழல் எழாமல் காப்போம். 

தினமணி, தொல்லைக்காட்சிகள் : maraimalaiannnankatturai_dinamani

முனைவர் மறைமலை இலக்குவனார்

Dinamani-logo-main