(ஊரும் பேரும் 50 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அகத்தீச்சுரம் தொடர்ச்சி)

ஊரும் பேரும்

தேவீச்சுரம்

     தேவீச்சுரம் என்னும் திருக்கோயில் தென்னாட்டில் உள்ளதென்பது “திரிபுராந்தகம் தென்னார் தேவீச்சுரம்” என்ற திரு வாக்கால் விளங்கும். தென்னாடாகிய நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரிக்கு அணித்தாகத் தேவி ஈசனை வழிபட்டுப் பேறு பெற்ற தலம் ஒன்றுண்டு. தேவீஸ்வரர் என்பது அங்குள்ள ஈசன் திரு நாமமாக இன்றும் வழங்கி வருகின்றது. அழகிய நாயகி என்று பெயர் பெற்றுள்ள வடிவுடையம்மையின் பெருமையால் முன்னாளில் தேவீச்சுரம் என்று அழைக்கப்பெற்ற திருக்கோயில் இந்நாளில் வடிவீச்சுரம் என வழங்குகின்ற தென்பர். கோயிற் பெயர் ஊர்ப் பெயராயிற்று.

வீமீச்சுரம்

முன்னாளில் இடர்க் கரம்பை என்னும் பெயர் பெற்றிருந்த ஊரில் வீமீச்சுரம் என்ற சிவாலயம் விளங்கிற்றென்பது ஒரு சாசனப் பாட்டால் தெரிகின்றது. முதற் குலோத்துங்க சோழன் காலத்ததாகக் கருதப்படும் அச்சாசனத்தில்,

      “இம்பர் நிகழவிளக் கிட்டான் இடர்க்கரம்பைச்

      செம்பொன்ணி வீமீச் சரந்தன்னில்-உம்பர்தொழ

      விண்ணுய்ய நின்றாடு வானுக்கு வேலைசூழ்

      மண்ணுய்ய நின்றாடு வான்”

 என்ற பாட்டு உள்ளது. இடர்க்கரம்பையில் செம்பொற் கோயிலாய் இலங்கிய வீமீச்சுரத்தில் அழகிய நடம் புரியும் இறைவனுக்குக் குலோத்துங்கன் திருவிளக்கு வைத்த செய்தி அதனால் அறியப்படும்.19 அம் மன்னன் ஆணை தாங்கிக் கலிங்க நாட்டின் மீது படையெடுத்து, வெற்றி மாலை புனைந்த கருணாகரத் தொண்டைமான் இடர்க் கரம்பைத் திருக் கோயிலுக்கு நன்கொடை வழங்கினான் என்று மற்றொரு சாசனம் தெரிவிக்கின்றது.20

இங்ஙனம் சோழ மன்னராலும், தண்டத் தலைவராலும் கொண்டாடப்பட்ட கோயில் இப்பொழுது கோதாவரி நாட்டில் திராட்ச்ராமம் என்ற பெயர் கொண்டுள்ள ஊரில் பீமேச்சுரர் ஆலயமாக மிளிர்கின்றது.

கேதீச்சுரம்

    ஈழ நாடு எனப்படும் இலங்கையில் சிறந்த சிவாலயங்கள் சில உண்டு. அவற்றுள் மாதோட்டம் என்னும் பதியில் அமைந்த திருக்கோயில் திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றதாகும். “இருங் கடற்கரையில் எழில் திகழ் மாதோட்டம்” என்று அவர் கூறுமாற்றால் அஃது ஓர் அழகிய கானலஞ் சோலை என்பது விளங்கும். அச்சோலையில் நின்ற கோவில் கேதீச்சுரம் என்று குறிக்கப்படுகின்றது.

         “மாவும் பூகமும் கதலியும் நெருங்குமா

         தோட்ட நன்னகர் மன்னித்

         தேவி தன்னொடும் திருந்துகே தீச்சரத்

         திருந்த எம்பெரு மானே”

என்பது திருஞான சம்பந்தர் திருவாக்கு. இராசராச சோழன் ஈழ மண்டலத்தை வென்று அதற்கு மும்முடிச் சோழமண்டலம் என்று பெயரிட்டபொழுது, மாதோட்டம் என்னும் ஊர் இராசராசபுரம் என்றும், திருக்கேதீச்சரம் இராசராசேச்சரம் என்றும் பெயர் பெற்றது.21

தாடகேச்சுரம்

     திருப்பனந்தாள் என்னும் பதியிலுள்ள சிவாலயம் தாடகேச்சுரம் ஆகும். “தண்பொழி சூழ் பனந்தாள் திருத் தாடகை யீச்சரமே” என்று தேவாரம் அதனைப் போற்றுகின்றது. தாடகை யென்னும் மாது செய்த பூசைக்கிரங்கி ஈசன் தண்ணளி புரிந்தமையால் அத்திருக்கோயில் தாடகேச்சுரம் என்னும் பெயர் பெற்ற தென்று புராணம் கூறும்.22

வர்த்தமானீச்சுரம்

     சோழநாட்டுச் சிறந்த பதிகளுள் ஒன்றாகிய திருப்புகலூர் மூவர் தேவாரமும் பெற்றதோடு, திருநாவுக்கரசர் முத்தியடைந்த சீர்மையும் தண்ணளி புரிந்தமையால் அத்திருக்கோயில் உட்கோயிலாக விளங்குவது வர்த்த மானீச்சரம். முருகன் என்னும் சிவனடியார் நித்தலும் அன்போடு பூமாலை சாத்தி வர்த்தமானீச்சரப் பெருமானை வழிபட்ட செய்தி தேவாரத்தால் அறியப்படுவதாகும்.

“மூசுவண் டறைகொன்றை முருகன்

        முப்போதும் செய்முடிமேல்

        வாசமா மலருடையார் வர்த்தமானீச் சரத்தாரே”.

என்று திருஞான சம்பந்தர் முருக நாயனாரது தொண்டின் திறத்தினைக் குறித்தருளினார்.

     இன்னும், பழமையான சில ஈச்சுரங்களின் பெருமையைக் கல்வெட்டுக்களால் அறியலாகும். அவற்றுள் சில இப்பொழுது ஊர்ப் பெயர்களாகவும் வழங்கி வருகின்றன.

தொண்டீச்சுரம்

     திருமுனைப்பாடி என முன்னாளில் பெயர் பெற்றிருந்த நன்னாட்டில் தேவாரம் பாடிய இருவர் பிறந்தருளினர்.

        “அறந்தரு நாவுக்கரசும் ஆலால சுந்தரரும்

        பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்

        சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடும் சீர்ப்பாடு

என்னும் சேக்கிழார் திருவாக்கால் திருநாவுக்கரசரையும் சுந்தர மூர்த்தியையும் ஈன்ற பெருமை அந் நாட்டுக்குரிய தென்பது இனிது விளங்கும். திருவெண்ணெய் நல்லூரில் தன்னை ஆட்கொண்ட இறைவனது கருணைத் திறத்தினை வியந்து திருநாவலூரிலே பாடினார் சுந்தார்.

        “நாதனுக்கூர் நமக்கூர் நரசிங்க முனையரையன்

        ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும்ஊர் அணி நாவலூர்

என்னும் ஆர்வ மொழிகள் அவர் திருவாக்கிலே பிறந்தன. இத்தகைய பெருமை வாய்ந்த திருநாவலூரில் ஈசனார் கோயில் கொண்ட ஈச்சுரங்கள் சாசனத்திற் குறிக்கப் பெற்றுள்ளன. தொண்டீச்சுரம் என்பது ஒரு திருக் கோயிலின் பெயர்.23 அகத்தீச்சுரம் என்பது மற்றொரு திருக்கோயில்.

தண்டீச்சுரம்

    தொண்டை மண்டலத்துப் புலியூர்க் கோட்டத்துக் கோட்டூர் நாட்டில் வெளிச்சேரி என்னும் பழமையான ஊர் உள்ளது. அவ்வூரில் உள்ள சிவாலயத்தின் பெயர் தண்டீச்சுரம் என்பது சாசனங்களால் அறியப்படுவதாகும். கண்டராதித்தன் முதலாய சோழ மன்னர்கள் காலத்தில் தண்டீச்சுரம் சிறப்புற்று விளங்கிற்று.24

கண்டீச்சுரம்

    தென்னார்க்காட்டு நெல்லிக்குப்பத்துக்கு வடமேற்கே திருக் கண்டீச்சுரம் என்னும் ஊர் உண்டு. அங்கமைந்த திருக்கோயில் மிகப் பழமையானதென்பது சாசனங்களால் விளங்கும். அக் கோயிலின் பெயரே ஊர்ப்பெயராயிற்றென்று தோன்றுகின்றது.25

வாலீச்சுரம்

    திருச்சி நாட்டில் பச்சை மலைக்கும் கொல்லி மலைக்கும் இடையே பாங்குற அமைந்த ஊர் வாலீச்சுரம் என வழங்குகின்றது.26 பெரம்பலூர் என்னும் பெரும் புலியூர் வட்டத்திலுள்ள வாலி கண்டபுரத்திலும் வாலீச்சுரம் என்ற சிவாலயம் உண்டு.

அனந்தீச்சுரம்

    தொண்டை நாட்டுத் தென்னேரி என்னும் திரையனேரியில் அமைந்த ஆலயத்தின் பெயர் அனந்தீச்சுரம் என்பது.27 வடஆர்க்காட்டில் உள்ள பாதூர் என்னும் வாதவூரில் மற்றோர் அனந்தீச்சுரம் விளங்கிற்று.28

மயிண்டீச்சுரம்

    திருஞான சம்பந்தர் தேவாரத்தில் மயிண்டீச்சுரம் எனக் குறிக்கப்பெற்ற தலம் சேலம் நாட்டுத் தருமபுரி வட்டத்திலுள்ள அதமன் கோட்டைச் சிவாலயமாகும். அங்குள்ள சோமேசுரர் கோயிற் சாசனத்தில் மயிந்தீசுரமுடையார் என்று அவ்விறைவன் குறிக்கப்படுதலால் இவ்வுண்மை விளங்குகின்றது.29

கார்க்கோடீச்சுரம்

    காமரச வல்லி என்னும் ஊரில் அமைந்துள்ள பழமையான சிவாலயம் கார்க்கோடீச்சுரம் என்று பெயர் பெற்றிருந்தது. ஆதியில் அவ்வூர் திருநல்லூர் என வழங்கிற் றென்பது கல்வெட்டால் அறியப்படும். பிற் காலத்தில் அது காமரவல்லி சதுர்வேதி மங்கலம் என்னும் பெயரை எய்திற்று. “விறைக் கூற்றத்துப் பிரம தேயமாகிய காமரவல்லி சதுர்வேதி மங்கலத்தில் திருநல்லூரிலுள்ள கார்க் கோடீச்சுரம்” என்பது சாசனம்.30 நாளடைவில் நல்லூர் என்னும் பெயர் மறைந்து காமரவல்லி என்பதே ஊரின் பெயர் ஆயிற்று. பாடல் பெற்ற திருப்பழு வூருக்குப் பன்னிரண்டு கல் தூரத்தில் இப்போதுகாமரசவல்லியா விளங்குவது இவ்வூர்.

                        அடிக் குறிப்பு

19. தெ.இ.க., தொ.4, ப.337 ( S.I.I., Vol. IV., p. 337.)

20. 466 / 1911.

21. முதல் இராசராச சோழன் (உலகநாதபிள்ளை) 85.

22. திருவிளையாடல் – அருச்சனை,

23. 335 / 1903; 325 / 1903.

24. 306 /1911.

25. Iசெ.மா.க., ஆற்காடு,242-265 (.M.P. South, Arcot, 242-65.)

26. திருச்சிராப்பள்ளி அரசிதழ்,தொ.1, ப.291) (Trichinopoly Gazetteer. Vol. I. P. 291.)

27. 224 / 1922.

28. 413 / 1922.

29. ஆராய்ச்சித் தொகுதி, மு. ரா. 296.

30. 64 / 1914.

(தொடரும்)

இரா.பி.சேது(ப்பிள்ளை)

ஊரும் பேரும்