(தந்தை பெரியார் சிந்தனைகள் 28 இன் தொடர்ச்சி)

தந்தை பெரியார் சிந்தனைகள் 29

3. மொழிபற்றிய சிந்தனைகள்

அன்பு நிறைந்த தலைவர் அவர்களே!
அறிஞர் பெருமக்களே!
மாணாக்கச் செல்வங்களே!

இன்றைய மூன்றாவது பொழிவு பெரியாரின் மொழி பற்றிய சிந்தனைகள் ஆகும். பேச்சைத் தொடங்குவதற்குமுன் வேறு சில செய்திகளை உங்கள் முன் வைக்கிறேன்.

இரண்டு சொற்பொழிவுகளில் தந்தைபெரியாரைப்பற்றி மின்வெட்டு போல சில குறிப்புகள் மட்டிலும் தான் உங்கட்குத் தெரிந்திருக்கும். இந்தப் பெரியார் யார்? என்பதை இன்றைய பொழிவில் விவரமாகச் சொல்வேன். (குறிப்பு 1)

 

  1. பெரியார் வாழ்க்கைக் குறிப்புகள்

தந்தை பெரியார் பிறந்தது- அவதரித்தது என்றே சொல்லலாம், ஈரோடு நகரில். கன்னட பலிச நாயுடு வகுப்பினர். ‘நாயக்கர்’ என்பது பட்டப்பெயர். வைதிகக் குடும்பம்; பழுத்த வைணவக் குடும்பம். எப்பொழுதும் பாகவதர்கள், சந்நியாசிகள், மதவாதிகள் இவர்கட்கு இங்கு விருந்து நடைபெற்ற வண்ணம் இருக்கும்.

தந்தையார் வெங்கட்ட நாய்க்கர்; தாயார் சின்னத் தாயம்மை யார் என்று வழங்கும் முத்தம்மாள். வைணவ பக்தர்களாக இருந்த இவர்கட்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன; இரண்டும் இறந்தன. பின்னர் 19 ஆண்டுக்காலம் மக்கட்பேறு இல்லை. இருவருக்கும் கவலை மிகுந்திருந்தது. திருமாலிடம் அன்பும் பக்தியும் பெருகியது. இருவரும் பெருமாளை நினைத்துப் பிள்ளைவரம் வேண்டினர்; பாகவதர்கட்குப் பணிவிடை செய்தனர்; சனிக்கிழமை நோன்பு, ஏகாதசி விரதம் இருந்தனர்; இராமாயணம் கேட்டனர்; பாகவதம் கேட்டனர்; இவ்வகையாக இருவருக்கும் வைணவப்பற்று மிகுந்தது.

இவர்கள் ஏக்கம்தணிய .வெ. கிருட்டிணசாமி 1877 ஆம் ஆண்டு செட்டம்பர் 28-ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பின் 1879-ஆம் ஆண்டு செட்டம்பர் திங்கள் 17ஆம் நாள் .வெ. இராமசாமி பிறந்தார். இவருக்குப் பின் இரண்டாண்டுகள் கழித்துப் பொன்னுதாயம்மாள் பிறந்தார். இவருக்குப்பின் பத்தாண்டுகள் கழித்துக் கண்ணம்மாள் பிறந்தார். குடும்பம் புதல்வர்களால் பொலிந்தது.

ஈ.வெ.ரா வுக்குக் கல்வி சரியாக அமையவில்லை. துடுக்குத்தனத்தை அடக்கவே பள்ளியில் போடப்பெற்றார். திண்ணைப் பள்ளியில் 3 ஆண்டும் ஆங்கிலப்பள்ளியில் 2 ஆண்டும் படித்தார். 4-ஆம் வகுப்பு தேறி சான்றிதழ் பெற்றார். படிப்பு 11-வயதிலேயே முடிந்தது. தந்தையார் மண்டியில் வேலை. நன்றாகப் பேசுவார். வணிகர்களிடம் நன்றாகப் பழகுவார்.

19-வயதில் 13-வயதுடைய நாகம்மாளை மணந்தார். நாகம்மாள் தம்தாயின் ஒன்றுவிட்ட தம்பியின் பெண். பள்ளியை எட்டிப்பார்க்காதவர். திருமணம் ஆகிச் சில ஆண்டுகட்குப் பின்னர் கையெழுத்துப்போட மட்டிலும் கற்றுக்கொண்டவர். 35 ஆண்டுகள் கணவனோடு இணைந்து-பிணைந்து-வாழ்ந்து கணவனுடைய எல்லா நிகழ்ச்சிகட்கும் தோள் கொடுத்து உதவினார். படிப்பில்லாவிட்டாலும் சிறந்த அறிவாளியாகத் திகழ்ந்தார். திருமணம் ஆகி இரண்டாண்டுகள் கழித்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஐந்து மாதங்கள் வாழ்ந்து இறந்தது. பிறகு குழந்தையே பிறக்கவில்லை.

வகித்த பதவிகள்: இளமைத் துடுக்கில் இருந்தபோது நேரிட்ட விலைமாதர் தொடர்பு, காலிகள் தொடர்பு முதலியவை நாளடைவில் நல்லோர் கூட்டுறவுவால்(குறிப்பு 2)  அகன்றன. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத வெள்ளை உள்ளமும், செல்வராயினும் எளிய வாழ்வும், அஞ்சாமையும், உரிமை வேட்கையும் இவரைப் பொதுநலத் தொண்டில் கொண்டு செலுத்தின. இந்நிலையில் இவர் வகித்த பதவிகளைப் பட்டியலிட்டுக் காட்டுவேன்.

(1) 70 ஆண்டுகள் உலக அநுபவம் (2) 30 ஆண்டுகள் வாணிக அநுபவம் (3) 4 ஆண்டுகள் ஈரோடு வணிகர்சங்கத் தலைவர் (4) தென்னிந்திய வணிகர் சங்க நிருவாக சபை உறுப்பினர் (5) ஐந்து மாவட்டங்களுக்கு வருமானவரி தீர்ப்பாய(டிரைபூனல்) ஆணையர்கள் மூவரில் ஒருவர் (மைய அரசால் நியமிக்கப்பெற்ற பதவி) (6) ஈரோடு நகரப் படிப்பகச் செயலாளர் (7) பழைய மாணாக்கர் சங்கச் செயலர் (8) உயர்நிலைப் பள்ளிவாரியச் செயலர் (9) 1914இல் கோவை மாவட்டக் காங்கிரசு மாநாட்டுச் செயலர் (10) 10 ஆண்டு கெளரவ நீதிபதி (11) பல்லாண்டுகள் ஈரோடு நகராண்மைக் கழகத்தலைவர் (12) மாவட்டவாரிய உறுப்பினர் (13) குடிநீர்ப்பணிகள் (வாட்டர் வொர்க்சு) செயலர் (14) கொள்ளைநோய்த்தடுப்புக்(பிளேக்) குழு செயலர் (15) கோவை மாவட்ட இரண்டாவது வட்ட தேவசுதான கமிட்டி செயலராக 10 ஆண்டு (16) பின்னர் 1929 வரை துணைத்தலைவர் (17) பின்னர் அதன் தலைவர் (18) 1918-ஆண்டு முதல் உலகப்போரில் கெளரவ ஆள் சேர்க்கும் அதிகாரி (19) 1918-ஆண்டுப் போர் வட்டம் மாவட்டம் அரிசி கட்டுப்பாட்டின் அரசு நிருவாகி (20) கார்னேசன் குழு செயலர் (21) தமிழ்நாடு காங்கிரசு கமிட்டி செயலர் (22) பின்னர் அதன் தலைவர் (23) காதிவாரிய நிறுவனர் (24) அதன் தலைவராக 5 ஆண்டு இருந்தபோது  மரு. டி.எசு.எசு. இராசன், கே. சந்தானம், எசு.இராமநாதன் கே. எம். தங்கப்பெருமாள், ஐயாமுத்து ஆகியோர் அவருக்குச் செயலராக பணிபுரிந்தமை-இங்ஙனம் பொதுத் தொண்டில் ஈடுபாடு கொண்டு பணிபுரிந்தவர் நம் தந்தை.

1940, 1942இல் இரண்டு வைசுராய்கள் இரண்டு ஆளுநர்கள் தந்தையாரை அழைத்து அமைச்சரவை அமைக்கக்கேட்டனர். இராசாசியும் வேண்டினார். ஆனால் தந்தை மறுத்துவிட்டார். 1919இல் ‘இராவ்பகதூர்’ விருதுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரை செய்தார். அதையும் மறுத்துவிட்டார். காங்கிரசுக்கு விரோதியான பிறகுகூட சட்டசபை உறுப்பினருக்கு விண்ணப்பத்தில் கையெழுத்து போடுமாறு பி. இராசகோபலாச்சாரியார் (லோகல் பண்டு அண்டு முனிசிபல் அவை கவுன்சில் மெம்பர்) கேட்டும் அதற்கும் மறுத்துவிட்டார். அக்கால அமைச்சர்கட்குச் சிறிதும் குறையாத அறிவும் அநுபவமும் திறமையும் கொண்டு இருந்த தந்தை அவர்களின் தியாகம் என்றுதான் சொல்லவேண்டும்.

காங்கிரசில் தொண்டு: ஈ.வெ.ரா., காந்தியாரின் சொற்களை நம்பினார். அவற்றையே தமது ஒத்துழையாமைப் பிரச்சாரத்தில் பேசினார். தாம் அணிந்த ஆடம்பரமான ஆடைகளையெல்லாம் உதறி எறிந்தார். சிறுசுருட்டு பிடிப்பது, வெற்றிலை போடுவது முதலியவற்றை ஒரே பகலில் அடியோடு நிறுத்தினார். ஒரு சாது ஆனார். முரட்டுக்கதரையே உடுத்தினார். தம் துணைவியார் நாகம்மையாரையும் கதர் உடுத்தச் செய்தார். 80 வயதுள்ள தம் அன்னையாரையும் கதர் உடுத்தச் செய்தார். தம் வீட்டிலுள்ளவர்களையும் இனத்தவரையும் நண்பர்களையும் கதர் அணியச் செய்தார். (குறிப்பு 3)  கதர் இயக்கம் இவரால்தான் பலமடைந்தது. கதர்இயக்கம், கள்ளுக்கடைமறியல் போன்றவற்றில் இவர் தொண்டு ஈடு எடுப்பும் அற்றது. கதர்வளர்ச்சிக்காக இராட்டினத்தைத் தூக்கிக் கொண்டு ஊர்ஊராகச் சுற்றி வந்தார். கதர் மூட்டை தூக்கிவிற்றார். இங்ஙனம் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட காங்கிரசு கட்சியில் சாதி வேறுபாடு தலைவிரித்தாடியது. ‘தமிழ்நாட்டுக் குருகுலம்’ என்ற பெயரில் சேரன் மாதேவியில் (நெல்லை மாவட்டம்) பார்ப்பனப் பிள்ளைகட்குத் தனிஉணவு, பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு வேறு உணவு, வேறு இடம், வேறு வேறு பிரார்த்தனை. இதன் மூலம் சாதிப்பிரிவுக்கு ஆக்கம். இவை குருகுலத்தில் நடைபெற்றன. ஈ.வெ.ரா இதனை எதிர்த்தார். அப்போது அவர் காங்கிரசு செயலாளர். இதனையும் வேறு பலகாரணங்களையும் கொண்டு காங்கிரசுக்கு முழுக்கு போட்டார். சுயமரியாதைக்கட்சி தொடங்கப்பெற்றது. இத்தகைய கோடாரிக்காம்புகள் காங்கிரசில் இருப்பதனால் தமிழ்நாடு காங்கிரசு கழுதை தேய்ந்த கட்டெறும்புபோல் ஆகிவிட்டது. இத்துடன் இவை நிற்க.

தாய்மொழி கன்னடம், இருந்தாலும் தமிழில் தான் ஈடுபாடு. இதைத்தான் பயன்படுத்தினவர். (குறிப்பு 4.) தம்வாழ்க்கையை கடவுள், சாதி ஒழிப்பு இவற்றிற்காக அருப்பணித்துக் கொண்டு வாழ்ந்தவர். அமைச்சர் பதவி, ஆளுநர் பதவி எல்லாம் வந்தன. அனைத்தையும் மறுத்து பொதுத்தொண்டையே வாழ்க்கைப் பணியாக ஏற்றுப் பணியாற்றியவர். தமிழுக்குத் தொண்டு செய்தார். “தமிழர்கட்கு நிறைய நன்மைகள் விளையவேண்டும்; நாட்டில் புரட்சிகரமான செயல்கள் பல நடைபெறவேண்டும். இதுவே என் ஆசை” என்று சொன்னவர். “அறிவியல் முறையில் தமிழ் வளம் பெறவேண்டும்” என்று அவாவுபவர். பல மேடைகளில் “ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்பெறும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப் பற்றேயாகும். மொழிப்பற்று இல்லாதாரிடத்து நாட்டுப்பற்று இராதென்பது உறுதி. . . தமிழ் நாட்டில் பிறந்தவர்கட்கு மொழிப்பற்று அவசியம் அவசியம்” என்று சொல்லி வந்தவர்.

இப்பொழிவின் கருவாக உள்ள கருத்துகளுக்குள் புகுவதற்கு முன் அறிவியலடிப்படையில் மொழியின் தோற்றம், வளர்ச்சி பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளல் சாலப்பயன் தரும் எனக்கருதுகிறேன். சிலவற்றை உங்கள்முன் வைக்கிறேன்.

சென்னைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் சி.பெருமாள்அறக்கட்டளைச் சொற்பொழிவு – நாள்: 27.2.2001 முற்பகல், ‘தமிழ்ச்செம்மல்’ ‘கலைமாமணி’  

பேராசிரியர் முனைவர் . சுப்பு(ரெட்டியார்), 

தெற்கு தென்கிழக்கு நாடுகளின் மரபுவழிப் பண்பாட்டு நிறுவனம், 

சென்னைப் பல்கலைக் கழகம்

குறிப்பு 1. இது ஒரு உத்தி முறை. பாகவதபுராணத்தில் பத்து இயல்கள்வரை கண்ணனைப்பற்றிச் சில குறிப்புகள்தாம் சொல்லப் பெறுகின்றன. 11ஆம் இயலில்தான் பிறப்பு வளர்ப்பு, தாய், தந்தையர் போன்ற விவரங்கள் தரப்பெறுகின்றன. அது போல ஒருமுறைதான் இன்று பெரியாரைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது.

குறிப்பு 2. திரு.வி.க., ஆர்.கே. சண்முகம் செட்டியார், இராசாசி, சேலம் விசயராகவாசாரியர், நாவலர் எசு.எசு. பாரதியார் முதலிய பலர். அதிக விவரம் வேண்டுவோர் சாமி. சிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ என்ற நூலைப் படித்தறியலாம்.

குறிப்பு 3. 1937-1941 வரை நான் கதர் அணிந்தவன். 1936 திருமண முகூர்த்த சேலையும் முகூர்த்த வேட்டியும் கதரே. நானும் என்மனைவியும் (1937முதல்) இராட்டையில் நன்கு நூற்போம். 1942 முதல் சிறிது சிறிதாகவிடநேர்ந்தது வெறுப்பால் அல்ல. தலைக்குமீறிய பள்ளிப்பணி. தொண்டெல்லாம் கல்விக்கு அருப்பணித்தேன். திருச்சி மாவட்டத்தில் சிறந்த தலைமை ஆசிரியர், கணித அறிவியல் ஆசிரியர் என்ற புகழ் பெற்றேன்.

குறிப்பு 4. எனது தாய்மொழி தெலுங்கு. படித்தது தமிழ். அறிவியல் படிப்பு; தமிழுக்கு வந்தவன். தாய்மொழி தெலுங்கு என்று கூறி சென்னைப் பல்கலைக் கழகத்தில் நுழையமுடியாமல் செய்துவிட்டனர். திருப்பதியிலும் ‘அரவவாடு’ என்று கூறி அருவருப்புக் காட்டினர். The mother has come to daughter’s house. Treat her with respect என்பது போல் நகைச்சுவையாகப் பேசி அனைவராலும் அரவணைக்கப் பெற்றவன். இப்போது இங்குத் தமிழ் இலக்கியத் துறையில் வாழ்நாள் Emeritus Professor ஆகப்பணி; மூன்று பிஎச்.டி. மாணவர்கட்கு வழி காட்டும் பொறுப்பு.