(தமிழ்நாடும் மொழியும் 18 தொடர்ச்சி)

தமிழ்நாடும் மொழியும் 19

பல்லவப் பேரரசு  தொடர்ச்சி

அடுத்து தெற்கே சென்றால் நாம் பார் புகழும் பஞ்ச பாண்டவர் இரதங்களைப் பார்க்கலாம். இவ்வைந்து விமானங்களும் ஒற்றைக்கல் கோவில்களாகும். இவற்றுள் பெரிதாக உள்ளது ‘தருமராச இரதம்’ என்று கூறப்படுகின்றது. இதன்கண் அழகிய வேலைப்பாடுகளைக் காணலாம். மாடப்புரைபோல் விளங்கும் இதன் கருப்பக் கிருகம் வெகு அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இதன்கண் சோமாசுகந்த விக்கிரகம் அழகாக விளங்குகின்றது. பீமசேன இரதம் முன்னும் பின்னும் மண்டபங்கள் உள்ளன. திரெளபதி இரதத்தையும், அர்ச்சுனன் இரதத்தையும் முன்மண்டபம் ஒன்று ஒன்றாய் இணைக்கின்றது. இவற்றிற்கு முன்னால் ஒரே கல்லில் வெட்டிய மதகரி, அரியேறு இவற்றின் சிலையுருவங்கள் விளங்குகின்றன. திரௌபதி இரதத்தின் மூலத்தானத்தில் துர்க்கையின் படிமத்தைக் காணலாம். இச்சிலையின் கீழ் பக்தனொருவன் தன் சிரத்தைத் தானே துணித்துக் கொள்ளும் பாவனையில் ஒரு சிற்பம் உள்ளது. இந்த இரதக்கோவில் சிறு கூரை வீடு போல் காட்சி தருகிறது. நகுல சகாதேவ இரதங்கள் எனக் கூறப்படுபவை முற்றுப் பெறாதவையாகும்; இவ்வொற்றைக் கற்கோவில்கள் இரத வடிவமாக அமைந்திருப்பதால் மக்கள் இவற்றை இரதங்கள் என அழைத்தனர் போலும். மேலும் பஞ்ச பாண்டவர் இரதங்கள் என்றே நெடுங் காலமாக இவற்றை மக்கள் அழைத்து வருகின்றனர்.

மகேந்திரன் காலத்து வாழ்ந்த சிற்பியர் தங்களுக்கு முன்னர் வாழ்ந்த மரத் தச்சர் காட்டிய சிற்பத் திறமைகளை எல்லாம் கல்லிலே காட்டினர். மகேந்திரன் காலத்துத் தூண்கள் மேலே பொதிகைகளுடன், கீழே சதுரமான பீடங்களுடன், நடுவில் பட்டை தீட்டிய மூலைகளுடன், புறத்திலே மன்னனது விருதுப் பெயர்களுடன் விளங்குகின்றன. போதிகைகளிலும், பீடத்திலும் தாமரைப்பூ செதுக்கப்பட்டுள்ளது. நரசிம்மன் காலத்தில் கட்டிய கோவில்களில் காணும் படிமங்களும், வரிசை வரிசையாக வண்ணமுடன் விளங்கும் அன்னங்களும், சிறு மணிக்கோவை நிரைகளும், பூ வேலைகளும் மிகச் சிறந்து விளங்குகின்றன. இவன் கட்டிய தூண்களின் போதிகைகள் பந்து வடிவாக உருண்டு காணப்படுகின்றன. இதன் மேற்பாகத்தில் வெட்டப்பட்டிருக்கும் பள்ளமான கழுத்து வளையத்தின் மேல் ஒரு சதுரப் பலகையும், அதன்மீது சதுரக் கல்லும், இக்கல்லின்மீது தலைப்பொதிகைப் பலகையும் அமைந்துள்ளன. சிங்கத்தின் முதுகிலே தூண்கள் நிற்கின்ற முறையில் தம்ப பீடங்கள் காணப்படுகின்றன.

அடுத்து வடகிழக்கில் முற்றுப் பெறாது காணும் குகைக் கோவிலின் தம்ப பீடங்கள் யானையுருவில் உள்ளன. இதைச் சார்ந்த மிகப் பெரிய பாறையில் சிற்பியர் தங்கள் கைவண்ணம் முழுவதையும் காட்டியுள்ளனர். இங்குதான் தவம் செய்யும் அர்ச்சுனனைக் காணலாம். இதனைப் ‘பகீரதன் தவம்’ என்றும் சொல்லுவர். பகீரதனைச் சுற்றிலும் பல மனித உருவங்களும், பல்வேறு விலங்குகளின் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. குட்டியுடன் கூடிய யானையையும், குரங்குக் குடும்பத்தையும், தவஞ்செய்யும் பூனையையும் பார்ப்பவர் பரவசமுறாமலிருக்க முடியாது. இப்பாறைக்குச் சற்றுத்தள்ளி கண்ணனின் வெண்ணெய்த் திரள் என்று கூறப்படுகின்ற பாறையும், வராக சுவாமி கோவிலும் உள்ளன. இக்கோவிலில் மால் பூதேவியை அசுரரிடமிருந்து மீட்டு வந்த காட்சியை வெகு அழகாகச் சிற்பி படைத்துள்ளான்.

இறுதியில் நாம் காணவேண்டியது கரைக் கோவிலாகிய தலசயனக் கோவிலாகும். கடலலைகள் வந்து மோதும் வண்ணம் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில் காண்போர் கண்களுக்குச் சிறந்ததொரு விருந்தாகும்.

இரண்டாம் நரசிம்மனான இராசசிம்மன் அமைத்த கோவில்கள், மகேந்திரன், நரசிம்மன் ஆகியோரின் கோவில்களினின்றும் வேறுபட்டவை. இவன் காலத்தில் கற்றளி அமைக்கும் முறை ஏற்பட்டது. சுண்ணம் சேர்க்காமல் கற்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிக் கட்டப்படும் கோவில் கற்றளி ஆகும். காஞ்சியின்கண் உள்ள கைலாச நாதர் கோவில், வைகுந்தப்பெருமாள் கோவில், மாமல்லபுரக் கடற்கரைக் கோவில் ஆகியன இராசசிம்மனால் அமைக்கப்பட்டன. 1000 ஆண்டுகளுக்கு முன்னர்க் கட்டப்பட்ட இக்கோவில்கள் இன்றும் நல்ல நிலையில் நம் நாட்டத்தை எல்லாம் கவரும் வகையில் உள்ளன. இராசசிம்மன் அமைத்த கோவிலினின்றும் கலை நுணுக்கத்தில் சிறிது வளர்ந்த அமைப்புடைய கோவிலை அபராசிதவர்மன் அமைத்தான். புதுக்கோட்டையின் அருகில் உள்ள சித்தன்ன வாசல் குகைக் கோவில் இன்றும் பல்லவரின் கலைப்பற்றை உலகுக்கு வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது.

பல்லவர் காலத்து வாழ்ந்த சிற்பிகள் மனிதரின் உருவங்களை உள்ளவாறே செதுக்குவதில் தலைசிறந்தோராவர். இவர்கள் செய்த உருவங்கள் மிகவும் பழைமை வாய்ந்தனவாகும். மாமல்லபுரம் வராகப்பெருமாள் கோவிலில் உள்ள சிம்மவிட்டுணுவும் அவனது மனைவியரும் ஆகிய மூவரது உருவச் சிலைகளும், தருமராச இரதத்திலுள்ள நரசிம்மவர்மனது உருவச் சிலையும், அர்ச்சுனன் இரதம் என்னும் கோவிலில் காணும் பல பல்லவ அரசர்களது உருவச்சிலைகளும் இன்றும் அவர்தம் பெருமையைப் பறைசாற்றுகின்றன. இதே போன்று கைலாசநாதர் கோவிலிலும், சித்தன்னவாசல் குகைக்கோவிலிலும் காணப்படும் ஓவியங்கள் ஒப்பற்றனவாகும். சித்தன்ன வாசல் குகைக் கோவில் ஓவியம் தமிழ்நாட்டு மிகப் பழைய ஓவியமாகும். சித்தன்னவாசல் என்னும் ஊர் திருச்சி மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டைக்கு வடமேற்கே பத்துக்கல் தொலைவிலுள்ளது. இங்குள்ள ஓவியங்களில் குறிப்பிடத்தக்கவை, இரு நடன மங்கையரின் ஓவியங்களும், தாமரை பூத்து விளங்கும் காதிகா பூமி என்னும் அகழியின் ஓவியமும், மகேந்திரன், இவன் அரசி இவர்களது ஓவியங்களுமாம். கைலாசநாதர் கோவில் சுவர் ஓவியங்களில் பெரும்பாலானவை பெரிதும் சிதைந்தும் அழிந்தும் உள்ளன. பல காலம் மறைந்திருந்த பல்லவர் காலத்து ஓவியங்களை உலகிற்கு வெளிப்படுத்திய பெருமை பிரெஞ்சு அறிஞர் மூவோதூப்ராய் அவர்களுக்கே உரியது.

பல்லவர் காலத்தில் இசைக்கலையும் பெரிதும் போற்றப்பட்டது. பல்லவ மன்னன் மகேந்திரன் சிறந்த இசைக் கலைஞன் ஆவான். இவன் புத்தம் புதிய இசை ஒன்றினைக் கண்டுபிடித்த காரணத்தால் சங்கீர்ணசாதி என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றான். மகேந்திரனது குடுமியா மலைச் சாசனம் தமிழ் நாட்டு இசையினைப்பற்றி நன்கு விளக்குகின்றது. இச்சாசனம் வடமொழியில் உள்ளது; பல சுரங்களின் தன்மையை நன்கு எடுத்தியம்புகின்றது. மகேந்திரனது மாமண்டூர் குகைக்கோவில் சாசனம் இம்மன்னன் ‘தட்சண சித்திரம்’ என்னும் பழைய ஓவிய நூலுக்கு உரை எழுதினான் எனக் கூறுகின்றது.

இலக்கியம்

பல்லவர் காலத்திலே எல்லாக் கலைகளோடு இலக்கியக் கலையும் ஓரளவிற்கு வளர்க்கப்பட்டது. பல இலக்கியங்களும் இவர்கள் காலத்திலே தோன்றின. ஆனால் ஒரு கருத்து குறிப்பிடத்தக்கது. பல்லவர் காலத்திலே தமிழைவிட வடமொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் பல்லவ அரசர்களால் அளிக்கப்பட்டது. வடமொழிக் கல்லூரிகள் பல தோற்றுவிக்கப்பட்டன. மகேந்திர மன்னனே வடமொழியில் ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்று ஒரு நாடகம் எழுதியிருப்பது நாமறிந்த தொன்றே . தண்டின், பாரவி, திக் நாகர் என்பவர்கள் பல்லவர்களால் ஆதரிக்கப்பட்ட வடமொழிப் புலவர்கள் ஆவார்கள். பாரவி எழுதிய வடமொழி நூல் ‘கிராதார்ச்சுனீயம்’; தண்டின் எழுதிய வடமொழி நூல் ‘காவ்யாதர்சம்’. திக்நாகர் ‘ நியாயப் பிரவேசம்’ என்ற வடமொழி நூலை எழுதினார். இவ்வாறு வடமொழி பல்லவர் காலத்திலே நன்கு வளர்க்கப்பட்டபோதிலும் தமிழ் வளர்ச்சிக்கு அவர்கள் ஊறு செய்தமைக்குக் குறிப்புகள் காணோம். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும் தேவாரப் பாக்களும், இலக்கியச்சுவை ஒழுகும் நந்திக் கலம்பகமும், பெருந்தேவனார் எழுதிய பாரதமும் பல்லவர் காலத்திலே எழுந்தன. மற்றும் சிவத்தளி வெண்பா, யாப்பு இலக்கண நூல்கள், அணி இலக்கண நூல்கள் சிலவும் பல்லவர் காலத்திலே எழுதப்பட்டன. எனவே இதுவரை கூறியவாற்றால் பல்லவர்காலத்திலே வடமொழி இலக்கியங்கள் பேரளவிலும், தமிழ் இலக்கியங்கள் ஓரளவிலும் வளர்ந்தன என்பது தெளிவாகும்.

(தொடரும்)
பேரா.அ.திருமலைமுத்துசாமி,
தமிழ்நாடும் மொழியும்