(தோழர் தியாகு எழுதுகிறார் : ஆயுதப் போராட்டமா, உற்பத்திப் பெருக்கமா – தொடர்ச்சி)

கீற்று நேர்காணல் (1.4)


தோழர் தியாகு எழுதுகிறார்
மா.இலெ.தான் சரி

இதன் விளைவாக அப்பாவை மன்னார்குடி தாண்டி பெருகவாழ்ந்தான் ஊருக்கு மாற்றி விட்டார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது போல் குடும்பம் இடம்பெயரவில்லை. அப்பா அந்த ஊரிலேயே தங்கி வேலை பார்த்து வாரம் ஒருமுறை வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இது எனக்கு நல்வாய்ப்பாய் அமைந்தது. அப்பாவிற்குப் பயந்து தினமும் வீட்டிற்கு வர வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அப்பா திங்கட்கிழமை காலை கிளம்பியதும் வெளியே புறப்படும் நான் அவர் வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகத் தான் வீடு திரும்புவேன். அப்பாவிடமிருந்து அம்மா தொடர்ந்து என்னை காப்பாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது பேராசிரியர் இராதாகிருட்டிணனுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. என்னுடைய பெரும்பாலான நேரம் அவர் வீட்டில்தான் கழிந்தது. மாவோவின் அறிக்கைகளை மொழிபெயர்த்துத் துண்டறிக்கைகள் வெளியிடும் வேலையை அப்போது செய்தேன். Liberation பத்திரிகையில் சாரு மசூம்தாரின் பேட்டி வந்தது. அதில் அவர், ‘மாணவர்கள் படிப்பை விட்டுக் குடும்பத்தைத் துறந்து சிற்றூர்களுக்குச் சென்று, ஆயுதப் போராட்டத்தை உருவாக்க வேண்டும். அழித்தொழிப்புதான் நம்முடைய ஒரே போராட்ட வடிவம்” என்று கூறியிருந்தார். அந்தப் பேட்டியை படித்ததும் இதுதான் என்னுடைய வழி என்று நான் தீர்மானித்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் உங்களுக்கு மா.பொ.க.(சி.பி.எம்.) கட்சியில் சேர வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததல்லவா?


67 தேர்தலில் தி.மு.க., சுதந்திரா கட்சிகளோடு மா.பொ.க.(சி.பி.எம்.) கூட்டணி வைத்திருந்தது. இராசாசியின் சுதந்திரா கட்சி மீது எனக்குக் கடுமையான வெறுப்பு இருந்தது. அவர்களோடு கூட்டணி வைத்ததால் மா.பொ.க.(சி.பி.எம்.) மீதும் கடுமையான கோபம் இருந்தது. இ.பொ.க.(சி.பி.ஐ.) இன்னொரு காங்கிரசு என்ற கருத்துதான் எனக்கு அப்போது இருந்தது. ‘உடனடியாக ஆயுதம் எடுத்து புரட்சிக்குத் தயாராக இருக்கும் மா.இலெ.(எம்.எல்.)தான் சரி’ என்று முடிவு செய்திருந்தேன்.

கீழவெண்மணிக் கொடுமை எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமான ஆதிக்கக் கும்பலை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது. அதற்கு அழித்தொழிப்புதான் சரி என்று அந்தப் பாதையை தேர்ந்தெடுத்தேன்.

மா.இலெ.(எம்.எல். கட்சியில் எப்படி இணைந்தீர்கள்?

எனக்கோ, இராதாவுக்கோ மா.இலெ.(எம்.எல்.) கட்சியுடன் நேரடியாகத் தொடர்பு இல்லை. முதலில் புதிய உலகம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிப்பது என முடிவெடுத்தோம். என்னை ஆசிரியராகக் கொண்டு பத்திரிகை தொடங்கலாம் என முடிவெடுத்து விண்ணப்பம் அனுப்பினோம். அதே நேரத்தில் ‘எங்களுக்கு இயக்கத்தோடு நேரடியாகத் தொடர்பு வேண்டும்’ என்று திருச்சியிலுள்ள அசுரன் என்ற தோழரிடம் பேசினோம்.

சில நாட்கள் கழித்து ஒரு நாள் நள்ளிரவில் தோழர்கள் அனந்தரங்கனும், ஏ.எம்.கேவும் எங்களை சந்திக்க வந்தனர். வந்தவுடனேயே ஏ.எம்.கே. அழித்தொழிப்பு குறித்து வகுப்பெடுக்க ஆரம்பித்தார். மறுநாளும் எங்களுடனேயே தங்கினார். எங்களின் அடுத்த வேலை பற்றிக் கேட்ட போது, பத்திரிகை ஆரம்பிக்கவிருப்பதாகக் கூறினோம். ஏ.எம்.கே. உடனே கோபமாகி, ‘நாடே பற்றியெரிந்து கொண்டிருக்கிறது. புரட்சி வந்து கதவைத் தட்டும் நேரத்தில் பத்திரிகை நடத்தப் போகிறீர்களா, அப்படியானால் புரட்சிக்கான தயாரிப்பையே இனிதான் தொடங்கப் போகிறீர்களா?’ என்று கேட்டார்.

‘அதெல்லாம் சரிப்படாது. உடனடியாகச் சிற்றூருக்குச் செல்லுங்கள்’ என்று கூறி ஒரு முகவரியையும் கொடுத்தார். நான் உடனடியாகக் கிளம்பியாக வேண்டும். ‘கடைசியாக ஒருமுறை வீட்டிற்குப் போய் விட்டு வந்து விடுகிறேன்’ எனக் கூறினேன். இராதாவும் அவரது மனைவி இந்திரா அக்காவும் என்னைக் கிண்டலாகப் பார்த்தார்கள். காரணம் அன்று வெள்ளிக்கிழமை. அப்பா ஊரிலிருந்து வந்திருப்பார். இந்திரா அக்கா, ‘இவரை நம்பியா புரட்சி பண்ணப் போகிறீர்கள்? இப்ப இவர் வீட்டுக்குப் போவார், அப்பாவைப் பார்த்ததும் கசாப்புக் கடை ஆடு மாதிரி நிற்பார், புரட்சியெல்லாம் மறந்து போய்விடும்’ என்று கிண்டலாகக் கூறினார்.

‘இல்லை நான் உடனடியாக வந்துவிடுவேன். அழித்தொழிப்புதான் சரி’ என்று உறுதியாகக் கூறினேன். ‘அப்பா வந்ததும் தேடுவார் அதனாலதான் வீட்டுக்குப் போகத் துடிக்கிறீங்க, உண்மையிலேயே அப்பா மேல பயம் இல்லைன்னா இன்னிக்கு வீட்டுக்குப் போகாதீங்க’ என்று ராதா கூற அன்றும் மறுநாள் சனிக்கிழமையும் நான் வீட்டுக்குச் செல்லவில்லை. அப்போது கல்லூரியில் தேர்வு வேறு நடந்து கொண்டிருந்தது. நான் ஒரே ஒரு தேர்வு எழுதியிருந்தேன். அதிலும் தாளை வாங்கி முழுவதும் மாவோவின் மேற்கோள்களை எழுதிக் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சனி, ஞாயிறு முடிந்து திங்கட்கிழமை காலையில் வீட்டிற்குக் கிளம்பினேன். அம்மா பதற்றமாக இருந்தார். ‘நீ ஏதோ மாவோ கட்சியில் இருக்கிறியாமே, அப்பாவுக்குத் தெரிஞ்சுப் போச்சு, உன்னுடைய நெடும் பேழையை(பீரோவை) உடைச்சிப் பார்த்துட்டார்’ என்று கூறினார். நான் உடனடியாக வீட்டிலிருந்து கிளம்பி பக்கத்து ஊரிலுள்ள என் அக்கா வீட்டிற்குப் போய்க் கொஞ்சம் பணம் வாங்கிக் கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தேன். அப்பாவிடம் மாட்டிக் கொள்ளாமல் கிளம்பி விட வேண்டும் என்று சொல்லி என்னுடைய பையை எடுத்துக் கொண்டு வாசலுக்கு வரவும் அப்பா வந்து விட்டார். என்னுடைய கையை உறுதியாகப் பிடித்து வெளியே அழைத்துக் கொண்டு போனார். ‘உன்னுடையது எந்தக் கட்சி, உன்னுடைய தலைவர் யார்’ எனக் கேட்டார். ‘இருப்பது காங்கிரசு கட்சி, தலைவர் காமராசர்’ என்றேன். ‘பொய் சொல்லாதே , உன்னுடைய தலைவர் மாசேதுங்கு. மதுரை முத்து உள்ளூர் இரவுடி, மாசேதுங்கு உலகத்துக்கே இரவுடி. உன் கட்சியோட பெயரென்ன’ என்று கேட்டார். ‘மார்க்குசிய இலெனினிய கட்சி’ என்றேன்.

‘முதல்ல மார்க்சியக் கட்சி, அப்புறம் மார்க்குசிய இலெலினியக் கட்சி, அடுத்து என்ன மார்க்குசிய இலெனினிய மாவோயிளகா’ என்று கேட்டு விட்டு என்னுடைய தேர்வைப் பற்றி விசாரித்தார். எழுதியிருப்பதாகக் கூறினேன். அதைப் கல்லூரியில் வந்து விசாரிக்க வேண்டும் என்று கூறிவிட்டு என்னுடைய கையை இறுக்கமாகப் பிடித்து கல்லூரி செல்வதற்காக இழுத்துக் கொண்டு போனார். பேருந்திலும் என்னுடைய பிடியை விடவேயில்லை. இவரிடம் இருந்து எப்படியாவது தப்பி ஓடிவிடுவது என்று முடிவு செய்தேன்.

பேருந்தில் இருந்து இறங்கியதும் இரண்டு மிதிவண்டிகளை வாடகைக்கு எடுத்தோம். நான் அப்பாவிடம், ‘என்னுடைய ரிக்கார்டு நோட் நண்பனிடம் இருக்கிறது, அதை வாங்கிட்டு வருகிறேன், நீங்கள் பேராசிரியரிடம் பேசிக் கொண்டிருங்கள்’ என்று கூறிவிட்டு தப்பினேன். மிதிவண்டி நேரே இராதா வீட்டுக்கு போய், ‘இராதா வந்துட்டேன் பாருங்கள்’ என்றேன். அதன்பிறகு அப்பாவைப் பன்னிரண்டு வருடங்கள் கழித்துத்தான் பார்க்க முடிந்தது.

நக்சலைட்டு வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் எப்படி இருந்தது?

இராதா வீட்டிலிருந்து பெருமண்ணையூர் ஊருக்குச் சென்று தோழர் மாணிக்கத்தை சந்தித்தேன். உடனடியாக வெண்மணி செல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே குறிக்கோளாக இருந்தது. ஊரிலுள்ள ஐந்தாறு இளைஞர்களைத் தயார் செய்து வெண்மணிக்கு அழைத்துச் சென்றேன். அதற்குள் நான் வயல்வேலைகளை கற்றுக் கொண்டேன். சிற்றூர் மக்களுடன் பழகுவதற்கு அது மிகவும் முக்கியமானது. வெண்மணி கொலைக்குக் காரணமான கோபாலகிருட்டிண நாயுடுவின் வயலில் வேலை செய்தேன்.

இராமையாவின் குடும்பத்தினரையும் சந்தித்தேன். இயக்கத் தலைமையும் எனக்கு ஆதரவாக இருந்தது. உங்களால் முடிந்தால் கோபாலகிருட்டிணனை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். கீழ வெண்மணியில் இருந்து திரும்பி மாணிக்கத்தைச் சந்தித்து அவரிடம் நான் கீழவெண்மணிக்கு சென்று வந்த விவரத்தைக் கூறினேன். அவர் சுவாரசியமில்லாமல் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசியதில், அவர் அழித்தொழிப்புக்குத் தயாராக இல்லை என்பது புரிந்தது.

அதோடு, மாணிக்கம் ஊரிலுள்ள பெண்களிடம் ‘இவன் உங்கள் வீட்டு ஆண்களையெல்லாம் சிறைக்கு அனுப்பத் திட்டம் தீட்டுகிறான்’ என்று செய்தி பரப்பி விட்டார். என்னைக் கூப்பிட்டு சாப்பாடு போட்டவர்கள் என்னைக் கண்டதும் ஒதுங்கிப் போக ஆரம்பித்து விட்டார்கள். இவரை மீறி யாரும் வரப் போவதில்லை என்பது தெரிந்ததும் அவரது மகனை அழித்தொழிப்புச் செயலுக்குத் தயார் செய்தேன். இதற்குள் ஒரு வருடம் ஓடி விட்டது. நான் வேறொரு நடவடிக்கையில் சிறைக்குப் போய் விட்டேன் பிற்காலத்தில் கோபாலகிருட்டிணனன வேறொரு குழு அழித்தொழித்தது.

கீழவெண்மணி கோபாலகிருட்டிணனைக் கொலை செய்தது யார்? திராவிடர் கழகத்தினர் என்ற பேச்சும் இருக்கிறதே?

இல்லை. மா.இலெ.(எம்.எல்).கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் அதைச் செய்தவர்கள். அவர்கள் ஒரு காலத்தில் திராவிடக் கட்சிகளில் இருந்தவர்களாக இருக்கலாம். கீழத்தஞ்சையிலிருந்து நாகை செல்லும் சாலையில் ஒருபக்கம் இருப்பவர்கள் பொதுவுடைமைக் கட்சியாகவும், எதிர்ப் பக்கம் இருப்பவர்கள் திராவிடர் கழகத்தினராகவும்தான் பெரும்பாலும் இருப்பார்கள். இரண்டு அமைப்புகளுக்குமே அங்குப் பெயர் பறையன் கட்சி என்பதுதான்.

திராவிடர் கழகத்தினரும் இதே போன்று விவசாயத் தொழிலாளர் போராட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். திராவிட விவசாயத் தொழிலாளர் அமைப்பும் அந்த நேரத்தில் உதயமானது. அப்போது நாகைக்கு வந்த பெரியாரிடம் இதைப் பற்றிச் செய்தி சொல்லப்பட்டது. அதற்கு அவர் இதுபோன்ற காலித்தனங்களை நான் அனுமதிக்க முடியாது என்று கூறி விட்டார். அதனால் திராவிடர் கழகத்தில் இருந்து பல தோழர்கள் வெளியேறிப் பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்கள். தோழர் ஏ.சி..கே.வும் 1964 வரை திராவிடர் கழகத்தில் இருந்தவர்தான்.

(தோழர் தியாகுவின் அழித்தொழிப்பு நடவடிக்கைகள், சிறை வாழ்க்கை அனுபவங்கள் தொடர்பான உரையாடல் அடுத்த பகுதியில்)

(தொடரும்)
தோழர் தியாகு
தாழி மடல் 295