126 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு – நரேந்திரருக்கு பக்சே அறைகூவல்
சிங்களக்கொடுங்கோலர்களுக்கு நண்பர்களாகப் பலர் பா.ச.க. வில் உள்ளனர். இருப்பினும் நரேந்திர(மோடி) ஆட்சியில் தமிழக மீனவர்களுக்கு விடிவு கிடைக்கும்; இதுபோன்ற காரணங்களுக்காகத்தான் நரேந்திரர் பதவியேற்பிற்கு இனப் படுகொலையாளி பக்சே அழைக்கப்பட்டான்; மாபெரும் மாற்றம் நிகழப்போகிறது என்றெல்லாம் நம்பிக்கை விதைகள் விதைக்கப்பட்டன. ஆனால், நரேந்திரர் அழைத்தது தந்திர வினையல்ல; பக்சேவை வழிக்குக் கொண்டுவரும் முயற்சியும் அல்ல. இங்கு வருமாறு அழைக்க வைத்த பக்சேதான் தந்திரவினையில் வல்லவன் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு 126 தமிழக மீனவர்கள் சிங்களப் படைத்துறையால் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் படகுகள், வலைகள் வெட்டிச் சிதைக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது வேண்டுமென்றால் நாடகம் நடத்தப்படலாம். பக்சேவிற்குத் தெரியாமல் சிறைப்பிடிக்கப்பட்டதுபோலும், அவருக்குத் தெரிந்ததும் விடுதலை செய்யப்படுவதுபோலும், காட்சிகள் அரங்கேறலாம். நமக்குத் தேவை நாடகம் அல்ல. தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு! தமிழக மீனவர்கள் மீது யார் கை வைத்தாலும் அவர்களை இந்திய அரசு சிறைப்பிடித்து உரிய தண்டனை வழங்கல். கேரளா இந்தியாவில் உள்ளது. தமிழ்நாடும் இந்தியாவில் இருப்பதாகத்தான் சொல்லப்படுகிறது. மீனவர் கொலையில் அங்கொரு நீதி! இங்கொரு நீதி என்பது தொடர வேண்டுமா? கொலைகார நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றத் துடிக்கும் இந்திய அரசு தன் நாட்டு இறையாண்மையைக் காப்பாற்ற வேண்டுமா? வேண்டாவா?
‘’மானம் உடைய தரசு’’ (குறள் 384) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். மானமிழந்த அரசு இறையாண்மையை இழந்த அரசே ஆகும். இந்தியாவின் மானத்தைக் காக்கும் பொறுப்பு நரேந்திரருக்கு உள்ளது. முந்தைய வெளிநாட்டுத் துறை அலுவலர்களை வைத்துக் கொண்டு நமக்கு ஊறு விளைவிக்கும் உருப்படாக் கொள்கையை வைத்துக்கொண்டு பேராயக் கட்சியின் வழியில்தான் செல்லும் எனில் – பெரும்பான்மை இருந்தாலும் – ஐந்தாண்டு ஆட்சி நிலைப்பது இயலாததாகிவிடும். நம் நாட்டு மீனவர்மீது யார் கை வைத்தாலும் உடனடியாக அவர்கள் தளையிடப்பட்டு அழைத்து வரப்படுவர் என அறிவித்து, வான்படையையும் அதற்குப் பயன்படுத்த வேண்டும்.
அஞ்சாமை மிக்க தமிழக முதல்வர், மத்திய அரசிற்கு மடல் அனுப்புவதை நிறுத்தி விட்டு, மீனவர் நலனுக்காகக் கடல்பரப்பு காவல் அணியும் கடல்பரப்பு வான்அணியும் உருவாக்கப்படும் என அறிவிக்க வேண்டும். அதற்கான செயல்களிலும் இறங்க வேண்டும். தேசியப்பாதுகாப்பு மத்திய அரசின் பட்டியலில் இருக்கலாம். மாநிலமக்கள் பாதுகாப்பு என்று கூறி இத்தகைய காவல் அணிகளை உருவாக்க முயல வேண்டும். அதன்பின்னராவது, மத்திய அரசு விழித்துக் கொள்கிறதா? போலியான வெளி உறவுக் கொள்கை மூலம் நம் நாட்டு மக்களை அடுத்த நாட்டுப் படையினர் தாக்குவதில் இருந்தும் அழிப்பதில் இருந்தும் காக்காமல் சரணடையும் போக்கை நிறுத்திக் கொள்ளப் போகிறதா எனப் பார்க்கவேண்டும்.
நாட்டு மக்களைக் காக்காத அரசு மலர்ந்தென்ன? மறைந்தென்ன? அடுத்த நாட்டு இறையாண்மையைக் காப்பதாகக் கூறித் தன்னை அழித்துக்கொண்ட பேராயக்கட்சி வழியில்தான் செல்லப்போகிறதா? அல்லது விழித்துக்கொண்டு தன் நாட்டு மக்களைக் காக்ககும் தன்மான அரசாகத் திகழப் போகிறதா?
விரைவில் விடையை எதிர்நோக்குகின்றனர் நாட்டு மக்கள்!
– இலக்குவனார் திருவள்ளுவன்
Leave a Reply