(சனாதனம் – பொய்யும் மெய்யும் 70-72 தொடர்ச்சி)

 

  1. பிராமணரைத் தவிரப் பிறர் பதவிகளுக்குத் தகுதியற்றவர்கள் எனக் கூறும் சனாதனம் இருப்பதால்தான் கீழோர் எனப்படுவோர் உயர் பதவிகளில் அமர்வதாகக் கூறுவது நெஞ்சறிந்து சொல்லும் பொய். இல்லாத உண்மையை இருப்பதாக ஏமாற்றும் மோசடி. “சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான், அமித்துசா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்குச் சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராசன் இன்று ஆளுநர்! எங்களால்தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எசு. வானதி சீவாசன் இன்று வழக்கறிஞர் ஆனார்.” – இவ்வாறு ஆ.இராசா பேசியுள்ளதே இதற்குத் தக்க விடையாகும்.

சனாதனத்தால்தான் கீழோர் எனப்படுவோர் ஒடுக்கி வைக்கப்பட்டனர். அவ்வாறிருக்க அதற்கு நேர்மாறாகத் துணிந்து கூறுவோருக்காகத்தான், “படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்” எனப் பாரதியார் பாடிச் சென்றார்.

  • உடலில் உள்ள எல்லா உறுப்புகளும் சமம்தான். எனினும் ஆரியர்கள், கால் இழிவானது, காலில் பிறந்தவர்கள் இழிவானவர்கள் என்கிறது. தலை உயர்வானது. தலையில் பிறந்த பிராமணன் உயர்வானவன் என்கிறது. இதையறிந்தே பொய்யைத் தலைவிரித்தாடச் செய்கின்றனர்.

“அந்தப் பிரம்மாவானவர் இந்த உலகத்தைக் காப்பாற்றுவதற்காகத் தன் முகம், தோள், துடை, பாதம் இவைகளினின்று  உண்டான பிராமண, சத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும் மறுமைக்கும் உபயோகமான கருமங்களைத் தனித்தனியாய்ப் பகுத்தார்.” –  மனு 1.  87.)

“இடைக்கு மேல் உடல் மிகவும் தூய்மையாகும். எனவே பிரம்மாவின் முகம் பெரிதும் தூயது” என மனு(1.92) கூறுகிறது. “மிக்க தூயதான முகத்திலிருந்து வெளிப்பட்டமையினாலும், வேதங்களைப் பெற்றிருப்பதனாலும், முதலில் தோன்றியமையாலும், படைக்கப்பட்ட யாவற்றினும் பிராமணன் சிறந்து விளங்குகின்றான்” என்றும்  வருணாசிரமத்தைச் சொல்கிறது மனு(1.93). எனவே, காலில் பிறந்தவன் சூத்திரன்  எனச் சொல்வதை இழிவுபடுத்தும் நோக்கில் அல்ல என்பது பொய்தானே! இழிவு படுத்தத்தானே அவ்வாறு கூறியுள்ளனர்.

காலில் பிறந்ததாகக்கூறி இழிவாகக் கூறும் சனாதனம் “உடல் உழைப்பு இழிவானது. எனவே அதை மேற்கொள்வோரும் இழிவானவர்” என  உழைப்பவர்களை இழிவுபடுத்துகிறது. ஆனால் தமிழ்நெறியை உணர்த்தும் திருவள்ளுவர் ஓயாமல் உழைப்பவரின், தளராமல் பாடுபடுவரின், அயராது பணியாற்றுபவரின் காலில்தான் திருமகள் உறைகிறாள் என்கிறார் திருவள்ளுவர்.

 மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்

தாள்உளாள் தாமரையி னாள்  (குறள் 617)

 செல்வத்தின் கடவுளான திருமகள் அல்லது இலக்குமி திருமாலின் மார்பில் தங்கியிருப்பதாகக் கூறுவது ஆரியப்புராணம். அதை மறுத்து உழைப்பவரின் காலில் இருப்பதாகக் கூறுகிறார். இங்கும் உழைப்பவரின் நெஞ்சில்  அல்லது தலையில் இருப்பதாகக் கூறாமல் காலில் இருப்பதாகக் கூறிக் காலை உயர்த்துகிறார்.

காலில் பிறந்தவர்களாக ஒரு சாராரை இழிவு படுத்துவது சனாதனம். அத்தகையோர் காலில் தான் திருமகளே தங்குவதாகக் கூறி அத்தகையோரை உயர்த்துவது தமிழ் நெறி .

போரில் வெற்றி பெற்றுக், கொண்டு வரப்பட்டவன், பத்தி யினால் வேலை செய்கிறவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக் கப்பட்டவன், குலவழியாக தொன்றுதொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன், எனத் தொழிலாளிகள் எழுவகைப்படுவர். (மனு.8.415) இவ்வாறு சனாதனம் சொல்வதுதான் உயர்வா?

  • சனாதன தருமத்திற்குள் உள்ளே செல்ல விரும்பவில்லை.  … . தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரண்டகம்(துரோகம்), அநீதி இழைத்த திமுக, சனாதன ஒழிப்பு பேசுவது வேடிக்கையாக உள்ளது” என எடப்பாடி பழனிசாமி கூறுகிறாரே.
  • சரி. தி.மு.க. பேச வேண்டா. இவர் பேசலாமே. இவருக்குச் சனாதனத்தின் அநீதி தெரிந்திருக்கிறது. அதைப்பற்றிச் சொன்னால் பாசகவின் தோழமை இல்லாமல் போகும். இதனால் அ.தி.மு.க.மீதுள்ள பிடி நழுவும் என்ற அச்சத்தால் இவ்வாறு கூறுகிறார் என்பது தெரிகிறது.