தலைப்பு-ஆறு-அண்ணாமலை : thalaippu_aaru_annamalai

ஆறு

மலையில் பிறந்த நதி
மண்ணில் குதிக்கிறது
அலைகள் கொலுசுகட்டி
அசைந்து நடக்கிறது

நிற்க நேரமில்லை
நெடுந்தொலைவு போகிறது
மௌனம் உடைத்தபடி
மனம்விட்டு இசைக்கிறது

கல்லில் அழகாக
கூழாங்கல் செய்கிறது
தண்ணீர்ப் பாலாலே
தாவரங்கள் வளர்க்கிறது

நதிகள் கரையோரம்
நந்தவனம் மலர்கிறது
காயாமல் பூமியைக்
காப்பாற்றி வைக்கிறது

கல்லில் கிழிபட்ட
காயம் மறைக்கிறது
வெண்பல் நுரைகாட்டி
வெளியில் சிரிக்கிறது

இடையில் கோடுகளாய்
எங்கெங்கோ பிரிகிறது
கடல்தான் கல்லறையா
கடைசியில் முடிகிறது

நம்முடைய அழுக்குகளை
நதிகள் சுமக்கிறது
காரணம் இதுதான்
கடல்நீர் கரிக்கிறது

– திரைப்படப் பாடலாசிரியர் அண்ணாமலை

http://ilakkiyam.nakkheeran.in/Grammar.aspx?GRM=4