இயற்கை எழில் !
வான்மிதந்து சென்றடையும் கதிரவனைத்
தான்தழுவி ஒளிஉமிழும் தண்நிலவில்
கண்நிறைந்த காட்சிகாண கடல்வெளியில்
மண்மீது படுத்தேன்என் கண்முன்னே
தொங்கிச் சுழலும்இப் பூமிப்பந்தில்
தங்கிவாழும் மக்கள்குலம் தழைக்க
பொங்கிவழியும் அழகுடன்நம் பூமித்தாய்
இங்கிருக்கும் மக்களுக்கே படைத்தாள்
குறிஞ்சிமுல்லை குறையாத மருதத்துடன்நாம்
அறிந்த நெய்தல்பாலை எனப் படைத்தாளே !
ஐவகைநிலத்தை அழகுடன் பார்த்தேன்
மூவகைத் தமிழுடன் முத்திரைபதித்து
பாவகையுடன் பைந்தமிழ்ப் புலவர்கள்
பாடக்கேட்டேன் இயற்கை எழில்பற்றி !
எங்கு பார்க்கினும் மக்களெல்லாம்
பொங்கும் மகிழ்ச்சியால் பூரித்ததையும்
வறுமையைப் புறந்தள்ளி வாழும்
வளமையும் கண்டேன் நாட்டில் !
இயற்கை அன்னை ஈந்தளித்த
எழில் நலத்தை எம்மக்கள்
செயற்கையால் அழிக்காமல் சிறப்போடு
செம்மைவாழ்வு வாழும்நிலை கண்டேன் !
” செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத்தேன் வந்துபாயுது காதினிலே “
என்னை அறியாமல் எட்டயபுரத்து
எழிற்கவிஞன் பாடியதை என்வாய்
பாடக்கேட்டு மணலில் படுத்தவன்
பதறிஎழுந்தேன் பக்கமெல்லாம் பாழ்வெளி
கண்ட இயற்கை எழில்எல்லாம்
கனவுதான் என்றே கருதிக்கொண்டேன்!
அன்புடன்
இளையவன் – செயா, மதுரை
பெரியார் ஆண்டு 135 தொ. ஆ. 2878 தி.ஆ. 2044
சிலை ( மார்கழி ) 24 08–01–2014
Leave a Reply