–    திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

92802 53329

maghizhnan thaay03   

தாயுனைத் தொழுதுன் திருவடி பணிவேன்

 தன்னலச் சேற்றினில் மாயேன்!

கோயிலில் உறையும் கொற்றவை போலே

  குடியினைக் காப்பவள் நீயே!

சேயெமைக் காக்க சீரலொ மிழந்தாய்!

  செல்வமே பிள்ளைக ளென்றாய்!

ஓயுத லின்றி உழைப்பினைத் தந்தாய்!

 உனக்கிலை ஒருவரு மீடே!

 

பற்பல தெய்வம் படைத்தன ரெனினும்

 பண்புடை தாய்முதற்  தெய்வம்

நற்றவம் செய்தேன் நானுனைத் தாயாய்

 நல்லறப் பேற்றினால் பெற்றேன்!

 

வெற்றுரை யில்லை வெடித்தெழும் நெஞ்சின்

  விழைவது அம்மையே கேட்பாய்!

மற்றொரு முறையும் மணக்குமுன் கருவில்

  மலர்ந்திட நீவரம் அருள்வாய்!

 

 

 தென்றமிழ்ப் பாடம் தெற்றெனக் கற்க

  தேடினர் மாணவ ருன்னை!

நன்குநீ பாடம் நடத்திய அழகை

  நாள்பல கடக்கினும் நினைப்பார்!

உன்னிடம் தமிழைக் கற்றவர் பலபேர்

  உன்புகழ் பாடிடக் கேட்டேன்!

சென்றிடும்வழியில் சிரித்தெதிர் வந்தே

  சிறப்புறப் பயிற்றினை யென்றார்!

அழைக்குமுன் வந்தே அடிமையாய் நின்றே

  அன்பி்னை மழையாய்ப் பொழிந்தாய்!

பிழைபல செய்தேன்! பொறுத்தெனைக் காத்தாய்

  பெற்றவள் உனக்கென் செய்தேன்!

தழைத்திடுந் தமிழால் தடைகளை உடைத்தே

  தமிழ்நிலம் எங்கணும் நிலைப்பேன்!

விழைகுவேன் தாயே விரைவினி லெழுவாய்!

  வெற்றியை நான்பெறப் பார்ப்பாய்!

 

அன்புடை உயிரில் அன்றிலே உயர்வாம்

  அரற்றியே பிதற்றுவர் முன்னோர்!

அன்றிலும் தோற்கும் அன்னையுன் முன்னே

  ஆரிதை மறுப்பவ ரிங்கே!

நன்கெமை வளர்த்தாய்! நலிவினைத் தீய்த்தாய்!

  நலமுனைச் சூழ்ந்திடு மெழுவாய்!

உன்குர லொளியை உவப்புடன் கேட்கும்

 உயிர்’தமி ழரசி’னைப் பார்ப்பாய்!

அன்னையுன் அருளால் ஆழிசூழ் உலகில்

  அறமெழ அருங்குற ளோதி

தென்னவன் மண்ணில் தீதெலா மொழியச்

  செந்தமிழ்ப் பயிரினை வளர்ப்பேன்!

இன்னலை ஒழித்து இன்புற வாழ

  எம்மொடு நீயிரு அம்மா!

மன்னவர் போலே மண்ணினில் வாழ்வோம்

 மகிழ்வொடு மலர்முகம் காட்டு!

 

பொற்குவை வேண்டேன்! பூம்பொழில் வேண்டேன்!

 பொழுதெலாம் உன்நிழல் போதும்!

கற்சிலை வணங்கேன்! நின்கழல் தொழுவேன்!

 கண்மலர் திறந்தெனைப் பாராய்!

சொற்றமிழ்ப் பாடல் சுவைத்திடத் தருவேன்!

  தொல்லைநோ யொழிந்திடு மெழுவாய்!

பொற்புடைப் பூரணி போற்றியே காப்பாள்

  பொலிவுற நீயுட னெழுவாய்!

 

விடியலில் எழுந்தே வினைபல முடிப்பாய்!

  வீணுரை உன்னிட மில்லை!

முடியினைச் சூட முயற்சியே வழியாம்

  முயன்றிடு வென்றிடு என்பாய்!

படிப்பவர் வெல்வார் பாரினை ஆள்வார்

  படித்திடு பணிந்திரு என்பாய்!

அடியுறை யிதுவே! அன்பினைக் கலந்த

  அமிழ்திது சுவைத்திரு அம்மா!

(அடியுறை=பாதகாணிக்கை)

 

அடைமழை எனினும் கொடுங்குளி ரெனினும்

  அடைக்கல மருளினள் என்தாய்!

உடைந்தழும் பொழுதில் ஓடியே வந்து

  உலைவினை மாற்றினள் என்தாய்!

இடையிடை நிற்கும் இயல்பினை மாற்ற

  இன்னமு தூட்டினள் என்தாய்!

நடையிடும் பொழுதில் நற்கதை சொல்லி

  நன்னெறி பயிற்றினள் என்தாய்!

 

கொடைமடக் குடியில் குணத்தொடுதோன்றி

  குன்றென உயர்ந்தவள் என்தாய்!

இடையினில் உடைவாள் எழுகதிர் காக்க

  ஏந்தியோன் தலைமகள் என்தாய்!

தடைபல தாண்டி தலைவனின் நெஞ்சில்

  சந்ததம் உறைபவள் என்தாய்!

உடையினில் எளிமை உளமதில் தூய்மை

  உன்னத மானவள் என்தாய்!

 

கடைமடை பாயும் காவிரி போலே

  களிப்பினை அளிப்பவள் என்தாய்!

படைஞரை ஆக்கும் பாக்களை யாக்கும்

  பாத்திறம் தந்தவள் என்தாய்!

எடைக்கெடை தங்கம் ஈந்திட விழைவேன்!

  எம்முயிர்த் தாய்க்கது தகுமே!

மடைமையை மறுக்கும் மறத்தமிழ் மகிழ்நன்

மனத்தினில் நிறைந்தவள் அவளே!

maghizhnan thaay02

 [தாய் திருவாட்டி கல்விக்கரசி தமிழரசு உடல் நலிவுற்ற பொழுது மகன்  பாவலர் தமிழ்மகிழ்நன் பாடி நலமுறச் செய்த பாடல்]