தலைப்பு-அனல்மழை : thalaippu_analmazhai_pavithra02

பொழிவது அனல் மழை தானே!

விடுதலை வேண்டி வீழ்ந்தவர்
உணர்வைப் பாடிட வேண்டும்
வா மழையே!

விதைக்குள் வீரம்
வெளிக்கிடும் நேரம்
தழுவிட வேண்டும் வா
மழையே!

ஈழ மண்ணில் வீசுகின்ற
காற்றும் கூட காவியம்
ஈகம் செய்த மாவீரம்
எங்கள் வாழ்வியம்
மெல்ல சாரல் பூவைத் தூவிடு
சாதனைகள் பாடிடு
சந்ததியை வாழ வைக்கும்
கல்லறையைத் தழுவிடு

களம் பல ஆடித் தாய்
நிலம் காத்த
விழி தொட வேண்டும்
வா மழையே!
காவியப் பூக்கள் கால்
தடம் தேடி
கரைந்திட வேண்டும்
வா மழையே!

துயிலும் இல்லம்
ஈழ மண்ணில் தூய்மையான
கோயிலே
தூங்குகின்ற மாவீரர்
எங்கள் தெய்வமே
நல்ல காலம் சேரும்
பொழிந்திடு
கார்த்திகையில்
மொழிந்திடு
வாழ்வைச் சரித்த பகைவரை
அடைமழையால்
அழித்திடு.

வீர உறவு மண்ணைப் பாரம்மா
தமிழீழம் சுமந்த
கனவைப் பாரம்மா
எங்கள் தேச விழியில்
நாளும் கண்ணீர்
மழை தானே
எங்கள் வீர உயிர்கள்
சிந்துவது இரத்த
மழை தானே
எங்கள் வாசல்
முழுவதும் அன்பு மழை தானே
எங்கள் ஈக உணர்வு
பொழிவது
அனல் மழை தானே!

பவித்திரா நந்தகுமார்