கவியரங்கம், நட்பு, கருமலைத்தமிழாழன் ; thalaippu_natpirkuladankitru_karumalai

மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று ! 1/5

 தொலைபேசி  வருமுன்பு  நெஞ்சி   ருக்கும்

தொலைதூர   உறவோடு   தொடர்பு  கொள்ள

மலைகடந்து   பறக்கின்ற   புறாவின்   காலில்

மனக்கருத்தைக்   கட்டியன்று   அனுப்பி  வைத்தார்

அலைகடலைக்   கடந்தின்று   இருப்போ  ரோடே

அறிவியலால்   மின்னஞ்சல்   முகநூல்   தம்மில்

வலைத்தளத்தில்   கட்செவியில்   கையால்   தட்டி

வார்த்தையாக்கிக்   கண்களிலே   பேசு   கின்றார் !

எத்தனைதான்   முன்னேற்றம்   வந்த  போதும்

எழில்கிராமப்   பச்சைவயல்   அழகைப்   போல

சித்தத்தை   மயக்குகின்ற   சேலை  தன்னில்

சிரிக்கின்ற   அத்தைமகள்   முகத்தைப்  போல

முத்தான  கையெழுத்தில்   அன்பைக்   கொட்டி

முழுநெஞ்ச   ஆசையினை   வடித்த  னுப்பும்

வித்தான   கடிதத்தைப்   போல   ஆமோ!

விட்டிடாமல்   கடிதங்கள்   எழுது   வோமே !

செல்லிடக்கை    அலைப்பேசி    என்றே    இன்று

செப்புகின்ற   அறிவியலின்    பேசி   யாலே

இல்லத்தில்    இருந்தபடி     உலகில்    எங்கோ

இருப்பவரைத்   தொடர்புகொண்டு    பேசு   கின்றோம்

செல்கின்ற     இடத்திருந்தே    வீட்டா    ரோடு

செய்திகளைப்    பரிமாறி    மகிழு    கின்றோம்

எல்லைகளை    நாடுகளைக்    கடந்தி   ருந்தும்

எதிர்நின்று   பேசுதல்போல்   பேசு   கின்றோம் !

எழுத்தாலே    அனுப்பிவைத்த    செய்தி   தம்மை

ஏற்றவகை    படங்களொடு    அனுப்ப   லானோம்

கழுத்துவலி   எடுக்கமேசை    முன்ன   மர்ந்து

கணிணியிலே    செய்கின்ற   பணியை  யெல்லாம்

அழுத்திவிரல்    படுத்தபடி   சாய்ந்த   மர்ந்தும்

அடுத்தஊர்க்குச்   செலும்போதும்   செய்ய   லானோம்

பழுதின்றி   முகநூலைக்   கூடக்   கையுள்

படமாகக்   காண்கின்ற   வசதி   பெற்றோம் !

இந்தியப்  பேனா  நண்பர்  பேரவை

கவியரங்கம்

இடம் – தமிழ்ச் சங்கக் கட்டடம், கௌகாத்தி (அசாம்) 

ஆவணி 05, 2047 / 21 -08 – 2016

தலைமை

பாவலர் கருமலைத்தமிழாழன்

தலைப்பு-தொடரும் : thalaippu_thodarum