(யாதும் ஊரே யாவரும் கேளிர் 4/8 – தொடர்ச்சி)

 

யாதும் ஊரே யாவரும் கேளிர் 5/8

பிறர்வாழப்    பொறுக்காத    மனத்தைப்    பெற்றோம்

பிறர்நெஞ்சைப்    புண்ணாக்கும்    கலையில்    தேர்ந்தோம்

பிறர்போற்றப்    பொதுநலத்தை    மேடை    மீது

பிசிரின்றிப்    பேசிநிதம்    கள்ள   ராகப்

பிறர்பொருளை   அபகரிக்கும்    தன்ன   லத்தால்

பிறர்காலை    வெட்டுவதில்   வல்லவ    ரானோம்

சிரம்தாழ்த்தும்    பழிதனுக்கே    நாணி    டாமல்

சிறப்பாக    நடிக்கின்ற    நடிக    ரானோம் !

 

சாதிகளின்    பெயராலே    சங்கம்   வைத்தோம்

சாதிக்காய்த்    தலைவரினைத்    தேர்ந்தெ   டுத்தோம்

சாதிக்கும்    சக்தியெல்லாம்    ஊர்வ    லத்தில்

சாதனையாய்ப்   பகையுணர்ச்சி   பெருக்கு   வித்தோம்

வாதிக்கும்    கருத்தெல்லாம்    வாயா    லன்றி

வாள்தடிகள்    சங்கிலியால்    மோதிக்    கொண்டோம்

போதிக்கும்    அன்புவிட்டு   மதங்க    ளென்னும்

போதையாலே    மதம்பிடித்தே    அலைகின்   றோம்நாம் !

(தொடரும்)

 

இரண்டாம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு

இடம் இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.

நாள்  : வைகாசி 26, 2048 /  09 06 2017

கவியரங்கம்

தலைமை   கவியரசு  ஆலந்தூர் மோகனரங்கம்

தலைப்பு யாதும் ஊரே யாவரும் கேளிர்

பாடுபவர் பாவலர் கருமலைத்தமிழாழன்