வடக்குத்திசை – நமக்கு எமன் திசை
1.
சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
என்று சொன்ன மகாகவியே
எப்படி?
கற்களினாலா?
கபால ஓடுகளாலா?
2.
கிளறிப் போட்ட சேற்றில்
கண்களைத் திறந்தபடி
செத்துக் கிடந்த
குழந்தையின் விழியில்
நீலவானம் சிறுத்துச் சிறுத்து
போர் விமானமாய்…
இரத்தம் உறைந்த
உதடுகளின் நெளிவில்
ஏளனம்
3.
சிட்னியில்
சிறுவர் பள்ளியில்
‘இலங்கையின் தலை நகரம் எது?’
வினாவுக்கு
விடை எழுதியது
புலம் பெயர் தமிழ்க்குழந்தை
‘கொழுப்பு’
4.
முகம் சிவந்தார் இட்லர்
மகிந்த இராசபட்சேவைப் பார்த்து
“ஆசுட்விட்சு புக்கன் வால்டு
என ஆங்காங்கே
கொலைக்களம் வைத்திருந்தேன்
யூதர்களுக்கு…
நீங்கள்
என்னை வென்று விட்டீர்கள்
மூன்றில் ஒரு பங்கு
நாட்டையே அல்லவா
படு கொலைக் கூடமாக்கிவிட்டீர்கள்
விட்டுத் தருகிறேன்
‘பிரபஞ்சக் கொலைகாரர்‘ பட்டம்
உங்களவர்களுக்கே”
5.
டொரான்டோவில்
புலம் பெயர் மக்கள் ஊர்வலம்
சிறுவன் கையில் தட்டி
“உயிர்த்தெழுவோம்
உயிர்த்தெழுவோம்”
பக்கத்தில் சென்று கேட்டேன்
“தலைவர்
உயிரோடிருக்கிறாரா”?
சுட்டும் விழிச் சுடரோடு
சுடச் சுட வந்தது பதில்:
“தெரியாது
உயிரோடு இருக்கிறார்கள்
துரோகிகள்”.
6.
பசப்புச் சொற்கள்
பயனற்ற சொற்கள்
பச்சோந்திச் சொற்கள்
கசப்புச் சொற்கள்
கர்சனைச் சொற்கள்
சுனாமியாய்த் தாக்க
ஈழத்துக் கடற்கரையில்
மேலும் ஒதுங்கின
தமிழர் பிணங்கள்!
7.
குண்டுபட்ட தழும்பு
கிளிநொச்சி
பனை உச்சியில்
தாய்க்கிளி
குஞ்சுக்கிளிக்குச்
சொல்லிற்று :
“சிறகு முளைத்ததும்
பறக்கலாம் கண்ணே
எல்லாத் திசையிலும்…
வேண்டா வடக்குத் திசை
அது நமக்கு எமன் திசை”.
8.
கதவு தட்டிப்
பாற்சோறு காட்டி
வெற்றியைக் கொண்டாடச்
சாப்பிடச் சொன்னான்
சிங்கள இளைஞன்
கதவு திறந்த தமிழர் பார்வையில்
தெரிந்தது
பாற்சோறு அல்ல
இரத்தம் கசியும்
பலிச்சோறு.
9.
யாரோ பத்திரிக்கை ஆசிரியராம்
தமிழ் நாட்டிலிருந்தாம்
அகதிகள் முகாமில்
ஆர்வத்தோடு கேட்டாராம்
“இனி யார் உங்களைப்
பார்த்துப்பா”?
கிழிந்த லுங்கியை
இறுக்கிய பெரியவர் சொன்னார்
“எங்கள் உழைப்பு”.
10.
முள்ளி வாய்க்காலில்
பாதி கரையிலும் பாதி
நீரிலுமாகக்
கிடந்தது
விடுதலைப்போர்
வீரனின் உடல்
முகம்
கால் பிடிவாதமாக
வடக்குத் திசையை
எற்றியபடி.
11.
பெய்சிங்கிலிருந்து
கொழும்புக்கு வந்தது
வாழ்த்துச் செய்தி!
“திட்டமிட்டு
வெற்றிபெற்றுவிட்டீர்கள்
நாங்கள்
திபேத்தில் செய்தது போல”
12.
கண்டியில்
படுத்திருந்தார் புத்தர்
கோரைப் பற்களுடன்
சிங்கள பிக்குகள்
ஊதுவத்தி கொளுத்தி
வழிபடலாயினர்
“புத்தம் சரணம் கச்சாமி
தமிழர் மரணம் கச்சாமி”
13.
இன்று துரோகிகள்
ஓடி ஒளிக்கின்றனர்
முப்பது நாடும் ஒன்றாய்
செய்த தவற்றை மறைக்க தமிழனுக்கு
தீர்வு கொடுப்பதுபோல் நடிக்கின்றன
நாட்களை நகர்த்தியபடி..
14.
தமிழகத்திலும், புலத்திலும்
தலைவன் வருகைக்காக
பாதை அமைக்கின்றன
தாயக வடக்கிலும் கிழக்கிலும்
புலியில்லா வாழ்வை தமிழ்
உறவுகள் ஏற்க மறுக்கத்
தொடங்கி விட்டனர்
15.
உலக வல்லரசும், சிங்களத் தேசமும்
தமிழர்களை முட்டாளாக்க
எடுத்த முயற்சியும் படுதோல்வியிலே
தன் மானமுள்ள ஒவ்வொரு
தலைவனுடன் இணந்து
தமிழீழம் நோக்கி நடக்க
புறப்பட்டு விட்டான்!!!
16.
ஏற்றுக் கொள்ள முடியாத
கோத்தபாய கொக்கரிக்கிறார்
பசீலும் பச்சையாகப் பேசுகிறான்
இராசபக்சாவும் சோனியாவும்
கருணாநிதியை அழைத்து கற்பூரம்
காட்டுகின்றனர். இதில்
சிங்களச் சொறி நாய்களும்
எலும்புக்காக அலையும் துரோகிகளும்
தமிழர் அடையாளங்களை
அழிக்கின்றார்கள்…
17.
முள்ளிவாய்க்காலோடு முடக்கி
கிடந்த தமிழினம்
முழு மூச்சோடு நிமிர்ந்து
நிற்கிறது
இனிமேலும் எவனும்
கிட்ட நெருங்கி எம்மை அடக்க
நினைப்பானா என்ன??
18.
முள்ளிவாய்க்கால்
ஆன்மாவொன்று ..
சின்னத் தூக்கம் கொண்டோம் அன்றி
எங்கள் தேகம் வாடியது இல்லை
உங்கள் அண்ணன்
தங்கை பிள்ளைகள்
யாரும் கண்கள் மூடியது இல்லை
உள்ளே உயிராய் உள்ளோம் உள்ளோம்
உங்கள் நினைவுடனே..
இங்கு வெல்லும்வரையும் வீசும்
காற்றாய் உள்ளோம்
உங்கள்
அருகினிலே..
– சிற்பி
நன்றி : http://www.keetru.com/index.php/2010-01-12-05-23-05/09/1962-2010-01-12-06-24-44
http://nerudal.com/nerudal.16217.html
அன்புராசா – வலைப்பக்கம்
Leave a Reply