மழை05 : mazhai05

மழை

உச்சந்தலையில் உட்கார்ந்து

கிச்சுகிச்சு மூட்டும்

ஒரு குழந்தை மழை!

காலை நேரத்தில்

‘கோல’ப்பெண்களுடன் கொஞ்சி விளையாடும்

ஒரு குறும்பு மழை!

காயசண்டிகைக் கடலை

நேயமுடன் நெருங்கி முத்தமிடும்

ஒரு முத்து மழை!

அரசியல் பிழைத்தோர்க்கு

வாரக்கணக்கில் வகுப்பெடுக்கும்

ஒரு புரட்சி மழை!

ஆறுகளைக் கூறுபோட்ட

அறிவிலார் மூளைக் கழிவுகளை அகற்றும்

ஒரு துப்புரவு மழை!

செம்புலப் பெயல்நீராய்த் தோன்றிச்

சங்கப்புலவர்க்குக் காதல்சொன்னது

ஓர் அந்தி மழை!

முத்தொழில் செய்து

கடவுளாய் நின்ற மழை!

களவாடப்பட்ட எல்லாவற்றையும்

மீட்டெடுக்க மீண்டும் மீண்டும்

பெய்யெனப்பெய்து

வென்ற மழை!

புகுந்து புகார் சொன்னபோதும்

கேளாமல் விட்டுவிட்டால்

வெகுண்டு எழும் இனியும்

ஒரு வெள்ள ம(லை)ழை!

                           தமிழ்சிவா

சிவா தமிழ்01 - siva, gandhigram