(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 36 தொடர்ச்சி)

குறிஞ்சி மலர் 14 தொடர்ச்சி

தனக்குச் சமயம் நேர்ந்த போதெல்லாம் உதவியிருக்கும் அந்தத் தாய்க்குத் தான் ஆறுதல் சொல்லி உதவி பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டிய சமயத்தில் தன் துன்பத்திற்கு ஆறுதல் தேட விரும்பவில்லை அவள். வசந்தாவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொடுக்க அரவிந்தனின் உதவியை நாடலாம் என்றுதான் அந்த அம்மாளையும் அழைத்துக் கொண்டு உடனே அச்சகத்துக்கு வந்தாள் அவள். நல்லவேளையாக அந்த நேரத்துக்கு முருகானந்தம் அங்கு இருக்கவே அவளுடைய வேலை எளிதாகப் போயிற்று.

இப்போது முருகானந்தம் கூறியதிலிருந்து அந்த அம்மாளே ஏதோ புரிந்து கொண்டு தம்பியைப் பற்றிக் கேட்கிறாள். வலுவில் கேட்கும்போது எப்படிச் சொல்லாமல் இருப்பது? அச்சகத்து வாயிலிருந்து புறப்பட்ட கார் தானப்ப முதலித் தெருவில் அந்த அம்மாள் வீட்டு வாயிலில் போய் நிற்பதற்குள் சில விநாடிகளில் தம்பி திருநாவுக்கரசின் நடத்தை மாறுதல்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி முடித்தாள்.

பூரணியையும் மங்களேசுவரி அம்மாளையும் அனுப்பிவிட்டு உள்ளே திரும்பிய அரவிந்தனும் முருகானந்தமும் சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்குச் செய்தி ஒன்றுமே இல்லாதது போல் வீற்றிருந்தனர். இந்த அமைதியைக் கலைத்துக்கொண்டு அரவிந்தன் கூறலானான்.

“உனக்கு இன்னும் ஒரு புதிய செய்தி சொல்லப் போகிறேன், முருகானந்தம். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் இந்த அச்சகமும் இதில் நிறைந்துள்ள அறிவுச் செல்வங்களும் தீப்பிடித்து எரிவதற்கும், அழிவதற்கும் ஏற்பாடு நடந்ததென்று சொன்னால் இப்போது நீ நம்புவாயா?”

“தெளிவாகப் பேசு. நீ சொல்வது எனக்கு விளங்கவில்லை, அரவிந்தன்!”

முருகானந்தத்துக்கு நன்றாக விளங்கும்படி பின்புறம் அவனைக் கூட்டிக்கொண்டு போய்க் காட்டி எல்லாவற்றையும் கூறினான் அரவிந்தன்.

“பாவி! இவ்வளவு கெட்ட எண்ணத்தோடு வந்தவனை எப்படியப்பா தப்பிப் போகவிட்டாய்? நல்ல சமயத்தில் நான் இல்லாமற் போய்விட்டேனே! ஆளைப் பிடித்துச் சுவரிலேயே அறைந்து கொன்றிருப்பேன். சொப்பனத்தில் கூட இனி இந்த மாதிரி கெட்ட வேலை செய்ய வரும் துணிவு அவனுக்கு உண்டாகாமல் பண்ணியிருப்பேனே” என்று கொதிப்படைந்து கூறினான் முருகானந்தம். அதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான்.

“ஆளைப் பிடித்துக் கட்டி வைத்து உதைத்த பின் இம்மாதிரிக் கெட்ட செயல் செய்யும் துணிவு குன்றுவதற்குப் பதிலாக அதிகமாகிவிட்டால் என்ன செய்வாய் முருகானந்தம்? கையில் சிராய்ந்து இரத்தம் வருகிறதே என்பதற்காகக் கையைக் குத்தி நுனியில் கொண்டுபோய்த் துடைத்தால் இரத்தம் குறையுமா அப்பா? கீழ்மைக்குணம் என்பது உள்ளிப் பூண்டைப் போன்றது. கற்பூரத்தினால் பாத்திகட்டி, கத்தூரியை எருவாகப் போட்டுப் பன்னீரை தண்ணீராகப் பாய்ச்சினாலும் உள்ளிப்பூண்டு விளைகிறபோது அதன் பழைய நாற்றம்தான் வரும். கள்ளன் பெரியவனா? காப்பான் பெரியவனா? என்று பழமொழி உண்டு. நாளைக்கே முதலாளியிடம் சொல்லி ஓட்டலுக்கும் இதற்கும் நடுவிலிருக்கிற சந்துக்கு ஒரு கதவோ சுவரோ போட ஏற்பாடு செய்யப் போகிறேன். நாம் செய்ய முடிந்தது அதுதான்…”

“யாரோ வேண்டுமென்று சொல்லி ஏவிவிட்டுத்தான் இது நடந்திருக்கிறது அரவிந்தன்! நீ சொல்லுகிறபடி பார்த்தால் குப்பை அள்ள வருகிற தோட்டியும் ஓட்டல் வேலையாட்களையும் தவிர வேறு ஆட்கள் கொல்லைப் பக்கம் புழங்குவதில்லை என்று தெரிகிறது. ஓட்டல் ஆட்கள் இந்த வம்புக்கு வர மாட்டார்கள். தோட்டியே காசுக்கு ஆசைப்பட்டு இதைச் செய்ய ஒப்புக் கொண்டிருக்கலாம். எதற்கும் காலையிலே விசாரித்து விடலாம்.”

“விசாரித்துத் தெரியப்போவதை நான் இப்போதே சொல்லி விடுகிறேன். கேட்டுக்கொள். எங்களுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒரே பகைவர், அந்தப் புதுமண்டபத்துப் புத்தகக் கடைக்காரர்தான். அந்த நாளிலிருந்து தொழில் முறையில் மீனாட்சி அச்சகத்துக்கும் அவருக்கும் புகைச்சல் உண்டு. எங்கள் முதலாளியை அவருக்குக் கட்டோடுப் பிடிக்காது. இப்போது பேராசிரியரின் நூல்களை நாங்கள் அவருடைய கொடுங்கோன்மைப் பிடியிலிருந்து விடுவித்து நியாயமாக வெளியிடத் தொடங்கியிருப்பதால் பழைய புகைச்சல் வளர்ந்திருக்கிறது. எதையும் செய்வதற்குக் கூசாத மனிதர் அவர். இருக்கட்டுமே! நாம் முறையான வழியிலேயே நேர்மையாகப் போகலாம். ஒரு நாள் அவரையே சந்தித்து இப்படியெல்லாம் செய்யலாமா? என்று நானே நியாயத்தைக் கேட்கத்தானே போகிறேன்.”

“நியாயத்தைக் கேட்கிற ஆளா அவர்? மறுபடியும் அவரிடம் அறை வாங்கிக் கொண்டு வராதே. இந்தத் தடவை நீ அவருக்கு அறை கொடுத்துவிட்டு வா. அதற்குப் பலம் இல்லையானால் அவரிடம் நியாயம் கேட்கப் போகிறபோது என்னையும் உடன் அழைத்துப் போ. நான் கொடுக்கிறேன் அவனுக்கு! நியாயமாம், நியாயம்! இந்தத் தலைமுறையில் நியாயத்தைப் பற்றிப் பேசுவதுதான் நாகரிகம் அப்பனே. கடைப்பிடிப்பது அநாகரிகம்!” கழுத்திலிருந்து கைக்குட்டையை உருவி முழங்கை மணிக்கட்டில் இறுக்கிச் சுற்றியவாறே மேலும் பேசினான் முருகானந்தம்.

“அந்தப் புதுமண்டபத்து ஆளிடமிருந்து பேராசிரியரின் புத்தகங்களைக் காப்பாற்றியதற்காக உனக்கும், உங்கள் முதலாளிக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் தகும் அரவிந்தன். பத்து பன்னிரண்டு நாட்களுக்கு முன் என் சிநேகிதன் ஒருத்தன் அந்த புதுமண்டபத்துக் கடையிலிருந்து அவர்கள் பதிப்பித்து வெளியிட்ட புத்தகம் ஒன்று வாங்கி வந்தான். தனிப்பாடல் திரட்டு என்கிற அந்தப் புத்தகத்தின் பெயர் தலைப்பிலிருந்து உள்ளே இறுதிப் பக்கங்கள் வரை எல்லா இடங்களிலும் தனிப்பாடல் திருட்டு என்று அச்சிடப்பட்டிருந்தது. அவர்கள் வெளியிட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பிரதிகளிலும் இந்தத் தவறு இருக்கத்தானே செய்யும்? தமிழுக்கு எத்தனை பெரிய பாவம் இது?”

தமிழுக்கு பாவம் ஏது? எல்லா பாவமும் அவருக்குத்தான். ஒருவகையில் அவர் வெளியிட்டிருக்கும் புத்தகத்திற்குத் தனிப்பாடல் திருட்டு என்று பெயர் இருப்பதே பொருத்தம் தான். அவர் சொந்தமான ஓலைச்சுவடிகளைக் கொண்டு ஒப்பு நோக்கி அதைப் பதிப்பிக்கவில்லை முருகானந்தம், வேறு ஒருவர் சிரமப்பட்டுப் பல ஆண்டுகளாக முயன்று பதிப்பித்த தனிப்பாடல் திரட்டு புத்தகத்தை அப்படியே ஒரு மாதத்தில் காப்பியடித்துத் திருடி வெளியிட்டு விட்டார். மலிவுப் பதிப்பு என்று பெயராம்! எது மலிவோ? பிழையோ? அல்லது விலையோ? தெரியவில்லை. அதனால் அவர் செய்த காரியத்துக்கு ஏற்பத்தான் புத்தகத்தின் பெயரும் வாய்த்திருக்கிறது” என்று குறும்பு பேசினான் அரவிந்தன்.

அன்று அவர்கள் இருவரும் கொல்லைப் பக்கத்துத் தாழ்வாரத்தின் அருகிலேயே படுத்துக் கொண்டார்கள். அவர்கள் படுக்கும்போது மணி ஒன்றரை இருக்கும். களைப்பும் அலுப்பும் உடல் தாங்காமல் நிறைந்திருந்தாலும் மனக்குழப்பத்தால் தூக்கம் உடனே அணுக மறுத்தது. படுக்கையில் சாய்ந்து முழங்கையை முட்டுக் கொடுத்து தலையை நிமிர்த்திக் கொண்டு முருகானந்தம் கேட்டான், “பூரணியக்காவுக்கும் இந்த அம்மாளுக்கும் என்ன உறவு? இந்த அம்மாள் யார்?”

மங்களேசுவரி அம்மாளைப் பற்றிப் பூரணியிடமிருந்து, தான் தெரிந்து கொண்டிருந்தவற்றை முருகானந்தத்திற்குச் சொன்னான் அரவிந்தன்.

“இவ்வளவு நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு இப்படியா புத்தி போகவேண்டும்? இந்தக் காலத்தில் பள்ளிக் கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிக்கிற பையன்களும், பெண்களும் தவறு செய்யக் கூசுகிற தயக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறார்களே அரவிந்தன், இதற்கு என்ன காரணமென்று உன்னால் சொல்ல முடியுமா? தமிழ்ப் பண்பாட்டின் உருவாய் வாழ்ந்தவருக்குப் பிள்ளையாய்ப் பிறந்து தமிழ்ப் பெண்மையின் இலட்சியம் போல் நம்மிடையே வாழும் பூரணியக்காவின் கண்காணிப்பில் வளரும் பையன் இப்படி ஆகிவிட்டானே! செல்வமும், செல்வாக்கும் நற்பண்பும் உள்ள மங்களேசுவரி அம்மாளின் பெண் வீட்டுக்குத் தெரியாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடியிருக்கிறாளே! குருத்துவிடும் வயதிலேயே கெட்டுப் போகத்துணியும் இத்துணிச்சல் இவர்களுக்கு எங்கே கிடைத்தது?”

அரவிந்தன் நெடுமூச்சு விட்டான். முருகானந்தத்தின் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதெனச் சிந்தித்தான். சிறிது நேர அமைதிக்குப் பின் அவன் முருகானந்தத்தை நோக்கிச் சொல்லலானான்:

(தொடரும்)

தீபம் நா.பார்த்தசாரதி

குறிஞ்சி மலர்