தமிழ்நாட்டில் நெல் விற்பனையாகாமல் தேக்கம்

ஆந்திர – கருநாடக நெல் வராமல் தடுக்க வேண்டும்!

காவிரி உரிமை மீட்புக் குழு கோரிக்கை!

   ஆந்திரத்திலிருந்தும் கருநாடகத்திலிருந்தும் அன்றாடம் ஆயிரக்கணக்கான பாரம்(டன்) நெல்லை, தமிழ்நாட்டில் உள்ள பெரும் பெரும் அரைவை ஆலைகளுக்குத் தனியார் வணிகர்கள் கொண்டு வந்து குவிக்கிறார்கள். இதனால், தமிழ்நாட்டில் காவிரி நீர், பாலாற்று நீர் தடுக்கப்பட்ட நிலையிலும் கடுமையான வறட்சியிலும் உழவர்கள் பெருஞ்செலவு செய்து உற்பத்தி செய்த நெல், விலை போகாமல் தேங்கிக் கிடக்கிறது.

    கடும் உழைப்பைச் செலுத்தி விளைவித்த நெல், அரசு வரையறுத்த குறைந்த விலை அளவுக்குக் கூட விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதால், உழவர்கள் பெரும் சோகத்தில் உள்ளார்கள்.

   இந்த அவலத்தைப் போக்க உடனடியாகத் தமிழ்நாடு அரசு அதிகாரிகளை அனுப்பி, தனியார் நடத்தும் பெரும் பெரும் அரைவை ஆலைகளை ஆய்வுசெய்து வெளி மாநிலங்களிலிருந்து நெல் வாங்கக் கூடாது என்று கூறித் தடுத்திட வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டு எல்லைகளிலுள்ள ஆய்வுச் சாவடிகளில் வெளி மாநில நெல் வராமல் தடுத்திட, என்னென்ன உத்திகளைக் கையாள வேண்டுமோ அனைத்தையும் கையாண்டு தடுத்திட வேண்டும்.

  தமிழ்த்தேசியப் பேரியக்கமும், காவிரி உரிமை மீட்புக் குழுவும் தொடர்ந்து தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாடு தனி உணவு மண்டலமாக்கப்பட்டால், பாலாற்று நீரையும் காவிரி நீரையும் தடுக்கின்ற ஆந்திர – கருநாடக மாநிலங்களிலிருந்து நெல் வருவதைச் சட்டப்படியே தடுக்க முடியும். இக்கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு இந்திய அரசிடம் எழுப்பி, தமிழ்நாட்டைத் தனி உணவு மண்டலமாக்க வேண்டும்.

  இப்பொழுது எழுந்துள்ள சிக்கலைக் கையாளும் உத்திகளை வகுத்து, ஆந்திர – கருநாடக நெல் வராமல் தமிழ்நாடு அரசு தடுக்க வேண்டும். அத்துடன் நேரடிக் கொள்முதல் நிலையங்களைத் தேவையான இடங்களுக்கெல்லாம் விரிவுபடுத்தி, வரும் நெல் அனைத்தையும் உடனுக்குடன் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும். நேரடிக் கொள்முதல் நிலையங்களில் விதிகளுக்கு முரணாகக், கட்டணமின்றிக் கூடுதலாக நெல் எடுக்கும் செயலைத் தமிழ்நாடு அரசு  தடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்

பெ. மணியரசன்

ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு.

இடம்: தஞ்சை.

செய்தித் தொடர்பகம்,

காவிரி உரிமை மீட்புக் குழு

இணையம்:www.kaveriurimai.com

பேச: 94432 74002, 76670 77075