தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி தலைதூக்கும் அவலம்
கந்துவட்டி தலைதூக்கும் அவலம்
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி மீண்டும் தலைதூக்குவதால் பல குடும்பங்கள் தற்கொலையின் விளிம்பிற்குச் செல்கின்றன.
தமிழக முதல்வர்அவர்கள் கந்துவட்டிக்கொடுமையிலிருந்து மீளவேண்டும் என நினைத்து அவசரச் சட்டம் ஒன்றைப் பிறப்பித்தார். அதன்படி கந்துவட்டி, கடப்பாரை வட்டி, அலகு(மீட்டர்)வட்டி, ஓட்ட(இரன்)வட்டி எனப் பலகோரமுகங்கள் செயல் இழந்தன. அதன்பின்னர் மீண்டும் கந்துவட்டி ஆசாமிகள் தங்கள் கோரமுகத்தைக் காட்டி 100க்கு 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை வட்டி வாங்கி வட்டிக்கு வாங்கியவர்களின் வீடு, நிலம் போன்றவற்றைப்பறிக்கின்றனர்.
சில கந்துவட்டி ஆசாமிகள் பணத்தைக் கொடு அல்லது உன்பொண்டாட்டியை அனுப்பு என்று கூறி வீட்டில் உள்ள பெண்களைக் கொத்தடிமைகளாகவும் ஆசைநாயகியாகவும் வைத்து வருகின்றனர். இது வெளியில் தெரியாத செய்தி. இதில் அவமானப்பட்டு பலர் ஊரைவிட்டு இரவோடு இரவாகச் சென்றுவிடுகின்றனர். பலர் தூக்கமாத்திரைகளையும், மருந்துகளையும் தின்று உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள்.
இதன் தொடர்பாகக் காவல்துறையில் முறையிட்டாலும் அம்மனுமீது நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து பேசி கந்துவட்டிக்காரருக்கே சாதகமாகச் செயல்படுகின்றனர் என்பதுதான் கந்துவட்டிக்காரர்களுக்குக் கூடுதல் ஊக்க மருந்தாக உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு ஊரில் கூலித்தொழிலாளியான நசுருதீன் என்பவர் கந்துவட்டிக்கு இராசேந்திரன் என்பவரிடம் கடன் வாங்கி யுள்ளார். வட்டியை மட்டும் கொடுத்துள்ளார். அவரால் வாங்கிய தொகையைத் தரமுடியவில்லை. இதனால் இராசேந்திரன் “அசலைத்தராவிட்டால் பரவாயில்லை. உன்பொண்டாட்டியை என்னுடன் அனுப்பு” எனக்கூறி அவருடைய மனைவியைக் கையைப் பிடித்து இழுக்க முயன்றுள்ளார். இதனால் கோப்பட்ட நசுருதீன் வத்தலக்குண்டு எண்ணெய்க்கடை முக்கு என்ற இடத்தில் வைத்து இராசேந்தினை 17 இடங்களில் கத்தியால் குத்தினார். அதில் நிகழ்விடத்திலேயே இராசேந்திரன் உயிர்போனது. நசுருதீன் மதுரை சிறைச்சாலைக்கு அனுப்பட்டார்.
இதே போன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூர் வட்டத்திற்குற்பட்ட தெக்கேரியில் ஊராட்சிமன்றத் தலைவர் கந்துவட்டிக்கு விட்டு அந்த ஊரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் பறித்துவைத்துள்ளார்.
இதே போல நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏராளமானோர் கந்துவட்டியால் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துள்ளனர். இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், புதுதெருவைச்சேர்ந்த அசுரப்பு அலி என்பவர் தன்னுடைய மருத்துவச் செலவிற்கு நாகப்பட்டினம் மாவட்டம், எருதுக்கார தென்சந்துவைச்சேர்ந்த செல்வராசு மகன் காளிதாசு என்பவரிடம் 30,000 உரூபாய் கந்துவட்டிக்கு வாங்கியுள்ளார். மாதந்தோறும் 10 % வட்டியையும் அவ்வப்பொழுது முதல் தொகையில் ஒரு பகுதியையும் திருப்பிச்செலுத்தி கணக்கை நேர்செய்துள்ளார். இந்நிலையில் கந்துவட்டிக்காரர் திடீரென்று பணத்தைக்கேட்டு நச்சரித்துள்ளார். பணம் தராவிட்டால் காசோலையை நிரப்பி நில, புலன்களை வாங்கிவிடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அவமானம் அடைந்த அசுரப்பிற்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு 19.3.2013 அன்று மருத்துவமனையில் அறுவை மருத்துவம் செய்து கொண்டுள்ளார். அதன்பின்னர் மறுபடியும் பணம் தரவேண்டும் என அடியாட்களுடன் சேர்ந்து இரவு, நேரத்தில் மிரட்டி வருவதும், பொதுஇடங்களில் நா கூசாத சொற்களாலும் அர்ச்சனை செய்துள்ளார்.
இதன் தொடர்பாக அசுரப்பு அலி கூறியதாவது, நான் காளிதாசிடம் 30,000 வாங்கி முதல்தொகையையும் வட்டியையும் முழுவதுமாகத் திருப்பிச் செலுத்திவிட்டேன். தற்பொழுது இருதய நோயாளியாக உள்ளேன். மறுபடியும் என்னிடம் பணம் கேட்டு நச்சரித்தும், என்னை அவமானப்படுத்தியும் வருகிறார். இதன் தொடர்பாகத் தமிழக முதல்வரிடமும் காவல்துறை இயக்குநரிடமும் புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
இதன் தொடர்பாக அலைபேசி 99654-09836 என்ற எண்ணில் காளிதாசிடம் தொடர்பு கொண்டோம். “எனக்குக் காவல்துறையினர், வழக்குரைஞர் ஆதரவு உள்ளது. கந்துவட்டி தொழில் செய்வது உண்மைதான். பணம்தராவிட்டால் வீடு, நில,புலன்களைக் கந்துவட்டிக்கு வாங்கியவர்களே தாங்களாவே வந்து தந்துவிடுகிறார்கள். நான் யாரிடம் வன்முறையில் வாங்கவில்லை” என்றார்.
நாகப்பட்டினம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளரை 04365-242822 என்ற எண்ணில் தொடர்பு கொண்டோம். மறுமுனையில் இருந்தவர் “ஐயா வெளியே சென்றுள்ளார்; வந்தவுடன் அழைக்கின்றோம்” என்றார். மறுமொழி வரவில்லை.
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கந்துவட்டி ஆசாமிகள் மீது நடவடிக்கை எடுத்து இவர்கள்மீது பிணையில் வெளிவராத வழக்குகள் பதிவு செய்யப்படவேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீர்வேண்டுகோள்.
முன் வந்தவை:
தேனிப் பகுதியில் கந்துவட்டிக்கொடுமை – தற்கொலை அவலம்
கந்துவட்டியாளர்களுக்கு அஞ்சித் தலைமறைவு வாழ்வு!
‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி
Leave a Reply