வங்கி விவரம் கேட்டுப் பணம் திருடும் மோசடி பெருகிவருகின்றது!
வங்கி விவரம் கேட்டுப் பணத்திருட்டில் ஈடுபடுவோர் பெருகிவருகின்றனர்.
கோவை மாநகரில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து புது முறையில் பணம் திருடப்பட்டதாகக் கடந்த மூன்று மாதங்களில் 62 முறையீடுகள் (புகார்கள்) வந்துள்ளன. இது தொடர்பாகக் குற்றவாளிகளின் எண்களை வெளியிட்டு மின்வெளிக் குற்றப்பிரிவுக் (Cyber Crime) காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கைப்பேசிக்கு, அவர்களுடைய வங்கியின் மேலாளர் பேசுவதாக அழைப்பு விடுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பண அட்டை (ATM) விவரம், கடன் அட்டை (credit card) விவரம், பிறந்த நாள் முதலியவற்றைக் கேட்கிறார்கள். பண அட்டையையும் கடன் அட்டையையும் புதுப்பித்துத் தருவதாகக் கூறி ஒரு தடவைக் கடவுச்சொல் (OTP) எனப்படும் கமுக்க (இரகசிய) எண்ணையும் பெற்றுக் கொள்கிறார்கள். இதை உண்மை என நம்பி இவ்வாறு விவரங்களைக் கொடுத்துவிட்டால் அவர்களது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது.
இதே போல், கடந்த சனவரியில் 22 முறையீடுகளும், பிப்ரவரியில் 26 முறையீடுகளும், மார்ச்சு மாதத்தில் 14 முறையீடுகளும் பெறப்பட்டுள்ளன. எனவே, பண அட்டை, கடன் அட்டை எதிலிருந்தாவது உங்களுக்குத் தெரியாமல் பணம் எடுக்கப்பட்டால் அது குறித்து மின்வெளிக் குற்றப்பிரிவில் உடனடியாக முறையிடுங்கள்!
எந்த வங்கியும் தங்கள் வாடிக்கையாளர்களைக் கைப்பேசியில் தொடர்பு கொண்டு ஒருபொழுதும் மேற்கண்ட விவரங்களைக் கேட்பதே இல்லை. இம்மோசடி நாடுமுழுவதும் நடைபெற்று வருகிறது. பலமுறை வங்கியினர், தாங்கள் எவ்விவரமும் கேட்பதில்லை எனவும் யாரும் அப்படிக் கேட்டால் எவ்விவரமும் அளிக்க வேண்டா என்றும் எச்சரித்தாலும் மக்கள் விழிப்படையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். எனவே, இவ்வாறு கைப்பேசிக்கு அழைப்பு வந்தால் வங்கிக்கு நேரடியாக வருவதாகச் சொல்லி அழைப்பைத் துண்டிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply