இனி என்ன செய்யப்போகிறோம் நாம்? – இனப் படுகொலைக்கு எதிரானவர்கள் கேள்வி!
இனி என்ன செய்யப்போகிறோம் நாம்?
இனப் படுகொலைக்கு எதிரான
செய்தியாளர்கள், கலைஞர்கள், வழக்கறிஞர்கள்
குழு கேள்வி!
“தமிழரைக் காப்பாற்றத் தவறிய ஆற்றல்கள் இலங்கையைக் காப்பாற்றத் துடிப்பது ஏன்”? என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஆவணி 27, 204613-09-2015 அன்று சென்னை, மயிலாப்பூர் நகரமேம்பாட்டுக்கட்டளை நகரில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது.
தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் கலந்து கொண்ட இக் கருத்தரங்கத்தி்ல், கடந்த 2011 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவையில் தனி ஈழம் அமையவும், இலங்கையின் மீது இனப்படுகொலை-போர்க்குற்றத்திற்கு எதிரான பன்னாட்டு விசாரணை வேண்டும் எனவும் வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதையும், தற்போது 2015-இல் இலங்கை வடமாகாணத்தின் முதலமைச்சர், நீதியரசர் விக்னேசுவரன் தலைமையில், பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும், குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களின் முதன்மையை உணர்த்தும் வகையில், திரைக்காட்சி ஒன்றின் மூலம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தார்கள்.
திரைப்பட இயக்குநர் திரு. புகழேந்தி தங்கராசு, இந்த கருத்தரங்க நிகழ்ச்சியினை உணர்வுடன் ஏற்பாடு செய்திருந்தார். ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைமையினை மிகுந்த வேதனையயோடும், உணர்ச்சி வசப்பட்டும், எடுத்துரைத்தார். கருத்தரங்கத்தில் கலந்து கொண்ட பேச்சாளர்களை அவர் அறிமுகப்படுத்தினார்.
பின்னர் ஓவியர் (இ)டிராசுகி மருது, நடிகை (உ)ரோகினி ஆகியோர் உரையாற்றியபோது போருக்கு முன்பும், அதன் பின்பும் இலங்கையில் பெண்கள்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட இன்னும் கொடுமைகளுக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் துயரங்களையும் எடுத்துரைத்தனர்.
பல் மருத்துவர் திரு. தாயப்பன், அருமையான பல நிகழ்வுகளைக் குறிப்பிட்டு நன்றாகத்தான் பேசினார். ஆனால் தேவையில்லாமல், “எதற்கெடுத்தாலும் கலைஞர்தான்காரணம் என்போர், ஈழப்படுகொலைகளுக்கும் அவர்மீது குற்றம் சுமத்துகின்றனர்” என்றார். அவர்பேசி முடித்ததும் திரு இலக்குவனார் திருவள்ளுவன், “எதற்கெடுத்தாலும் கலைஞர் மீது குற்றம் சுமத்தும் போக்கு தவறுதான். ஆனால், ஈழத்தமிழர் படுகொலைகளுக்குக் கண்டனம் தெரிவிக்காமல், ஒரே நாளில் மணப்பறையும் பிணப்பறையும் முழங்கும் நிலையாமைபற்றிக் கவிதை பாடிய கலைஞர் கருணாநிதி மீது குறை சொல்லக்கூடாது என்பது அதைவிடத் தவறு” என்றார்.
திராவிடர் கழக வழக்குரைஞர் அருள்மொழி, “கலைஞரால் ஈழத்தமிழர் படுகொலைகளைத் தடுத்திருக்க முடியாது. ஆனால், காங்கிரசிற்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தால் உண்மையின் பக்கம் இருந்தோம் என்ற நிம்மதியாவது கிடைத்திருக்கும்” என இருமுறை கூறினார். அந்த வகையில் கலைஞர் கருணாநிதியின் தவற்றை ஒத்துக் கொண்டார். ஆனால், “கள்ளத்தோணியில் சென்றவரும் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசுபவரும் என்ன செய்தார்கள்” என்று கேட்டு அரங்கின் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டார்.
கமுக்கமாகத் தோணியில் சென்று தமிழ்த் தேசியத் தலைவரைச் சந்தித்த திரு, வைகோதான் இந்தியாவின் புகழுறு வழக்கறிஞர் திரு. இராம் செத்மலானியை உச்சநீதி மன்றத்தில் வாதாட வைத்து இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் முதலான தமிழர்களுக்கு மரணத் தண்டனையிலிருந்து, ஆயுள் தண்டைனையாக மாற்றப்பட்ட தீர்ப்பினை வாங்கித் தந்தார். தொடர்ந்து தமிழ்ஈழம் தொடர்பாகக் குரல் கொடுப்பதுடன் அனைத்துக் கட்சித்தலைவர்களிடமும் முறையிட்டு வருகிறார்.
இப்படி அப்படிக் கை ஆட்டி பேசியவர்களால்தான் தமிழ் நாட்டில் காங்கிரசு கட்சி முகவரி இழந்தது. ஆனால் இவர் இயக்கம், ஈழப்படுகொலைகளை முன்னின்று நடத்திய காங்கிரசு-தி.மு.க. கூட்டணியை ஆதரித்துத் தமிழின உணர்வாளர்களிடம் நன்மதிப்பைக் கெடுத்துக் கொண்டார்கள்
அவ்வாறிருக்க நல்ல பேச்சாளரான வழக்குரைஞர் அருள்மொழி கொலைகாரக்கூட்டணியாளர்கள் சார்பாக இந்த அரங்கத்தில் பேசியது பேச்சு கிட்டத்தட்ட கருத்தரங்கில் கலந்துகொண்ட அனைவரின் கண்டத்திற்கும் உள்ளானது.
என்றாலும் நிறைவாக இயக்குநர் புகழேந்திதங்கராசு இதுபோன்ற பேச்சுகளுக்கெல்லாம் தக்க பதிலடி கொடுத்துக் கருத்தரங்கத்தினை உணர்ச்சிபொங்க முடித்துவைத்தார்.
தமிழீழப் போர் குறித்து இலங்கையின் கொலைக்களங்களின் உள்ளே இனக்கொலையை நான் கண்ணுற்றேன் (I witnessed genocide: Inside Lanka’s Killing Fields : Heads lines Today : August : 2011) என்னும் ஆவணப் படம் உருவாக்கிய ஊடகவியலாளர் பிரியம்வதா, நேரில் கலந்து கொள்ள இயலாமல் போனது. எனவே, கணிக்காட்சி மூலம் ஈழத்தமிழர் துயரங்களையும் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியது குறித்தும் சிறப்பாக உரையாற்றினார்.
வேறு அரங்கத்தில் நடந்திருந்தால் அல்லது சரியாக விளம்பரப்படுத்தியிருந்தால், அரங்கு கொள்ளாத கூட்டம் வந்திருக்குமே என்றும் வந்தவர்கள் பேசிக் கொண்டனர்.
படங்களைச் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.
String could not be parsed as XML
இதழாளர் இராசன் தனசேகர்.
தொலைபேசி : +91 99628 28939
Leave a Reply