இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  01–  சி.இலக்குவனார்

 

அ.  முகவுரை, பதிப்புரை

முகவுரை

  இமிழ்கடல் உலகில் இனிதே வாழும் மக்கள் இனங்களுள் தமிழ் இனமே தொன்மைச் சிறப்புடையது. ஆயினும், தமிழ் இனத்தின் தொன்மை வரலாற்றைத் தமிழரே அறிந்திலர். முன்னோர் வரலாற்றைப் பின்னோரும் அறிந்து கொள்ளுதல் மக்களின் முன்னேற்றதிற்குப் பெருந்துணை புரிவதாகும்.

  தமிழர் வரலாறு இன்னும் புதைபொருளாகவே இருந்து வருகின்றது. வெளிவந்துள்ள வரலாற்று நூல்களில் தமிழரைப்பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளுள் பல உண்மையொடு பொருந்தாதனவாய் உள்ளன. வரலாற்றாசிரியர் பலர்க்குத் தமிழிலக்கிய அறிவு கிடையாது. தமிழிலக்கியமே பழந் தமிழர் வரலாறு அறிவிக்கும் மூலங்களுள் முதனமை பெற்று நிற்கின்றது. அதனை நேரே அறியாது தமிழர் வரலாறு எழுதப் புகின்,  குருடர் கண்ட யானைக் கதை போன்று அமைவது இயல்புதானே!

  இந்நூல், இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியலை எடுத்து இயம்புகின்றது; சங்கக் கால மக்களின் கி.பி.முதல் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தோரின், வாழ்வியல் எவ்வாறு இருந்தது என்பதைத் தமிழர் அறியத் துணை செய்யும்.

  எனது ஆராய்ச்சி நூல்களை வெளியிட்டு உதவும் வள்ளுவர் பதிப்பக உரிமையாளர், அண்ணல் பு.அ.சுப்பிரமணியனார், இதனையும் செம்மையாக வெளியிட்டு உதவியுள்ளார். அன்னார்க்கு என் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும்.

சி.இலக்குவனார்

 

பதிப்பக முன்னுரை

  சங்கக் காலமே தமிழகத்தின் பொற் காலம் என்பர். அக்காலத்தில் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தனர் என்பதைத் தெளிவுறக் கூறுகின்றது இந்நூல்.

 அக்கால மக்கள் எல்லா வகையினும் சிறப்புறவே வாழ்ந்துள்ளனர். உயர் நாகரிகம் பெற்றுள்ளதாகக் கருதப்படும் இவ்விருபதாம் நூற்றாண்டு மக்கள் வாழ்வோடு ஒப்பிட்டு நோக்கின் அக்காலமக்கள் வாழ்வு பல துறைகளில் ஏற்றம் பெற்றிருந்தது என்பதை இனிதே அறியலாம்.

  மக்கள் வாழ்வியலும் வரலாறும் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் ஆங்காங்கு இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டு மாணவர்களும், மக்களும், தம்நாட்டு வாழ்வியலையும் வரலாற்றையும் விரும்பிக் கற்றல் வேண்டும். தம் நாட்டு உண்மை வரலாற்றை உலக மக்களுக்கு அறிவிக்கும் முயற்சியிலும் தமிழர் கருத்து செலுத்துதல் வேண்டும்.

 ‘வள்ளுவர் பதிப்பகம்’ இத்துறையில் தம்மாலியன்ற தொண்டைச் செய்து வருகின்றது. தமிழ் மக்களின் பெருமையைத் தரணிக்கு எடுத்துரைப்பதையே தம் தலையாய கடனாகக் கொண்டுள்ளது.

  நிறைந்த உழைப்பும் மிகுந்த பொருட்செலவும் பெற்று வெளிவரும் உயர் ஆராய்ச்சி நூல்களைத் தமிழ் மக்கள் பெற்றுப் பதிப்பகத்தை ஊக்குவித்தாலன்றி மேலும் பல நூல்கள் வெளியிடுதல் இயலாததாகும். ஆதலின் தமிழக மக்கள் ஒல்லும் வகையால் எம் நூல்களைப் பெற்றுத் தாமும் பயனடைந்து எம்மையும் பயனடையச் செய்யுமாறு அன்போடு வேண்டுகின்றோம்.

  இந்நூலாசிரியர் டாக்டர் சி.இலக்குவனார் அவர்கள் ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திறனும், தமிழ் உள்ளமும் பெற்ற பெருமகனார் என்பதைத் தமிழுலகம் நன்கு உணர்ந்ததே. அவர்கள், மக்கள் நலனைக் கருதி இந்நூலை எளிய, இனிய, தூய நடையில் எழுதி வழங்கியுள்ளார். அவர்கட்கும், இது அழகுற வெளிவருவதற்கு அச்சுப்பிழைகளைத் திருத்தி உதவிய நண்பர்கள்  புலவர் நடராசனார் அவர்கட்கும், திரு த.உ.நடராசப் பிள்ளை அவர்கட்கும் பதிப்பகம் தம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

6.12.62            புதுக்கோட்டை   பதிப்பக உரிமையாளர்

பதிப்பகக் குறிப்பு

 ‘தமிழர்களின் பொற்காலம்’ எனப்படும், சங்கக் கால மக்களின் வரலாற்றை யறியப் பெரிதும் பயன்படும், இந்நூலின் முதற்பதிப்பு வெளியாகி நான்கு ஆண்டுகட்குப்பிறகு இவ்விரண்டாம் பதிப்பு வெளியாகின்றது. பண்டைத் தமிழ் மக்கள் வரலாற்றை அறிய விரும்பும் ஒவ்வொருவர் இல்லத்திலும் இந்நூல் இருத்தல் வேண்டும்.

  தமிழர்களின் முற்கால நிலையை அறிந்து இக்கால நிலையை எண்ணி வருங்காலத்திற்குத் திட்டமிடும் செயல்களில் விரைந்து ஈடுபடுதல் கற்றறிந்தார் கடனாகும். எம்பதிப்பக நூல்களை விரும்பிப் பெற்று வரும் அன்பர்கட்கும். பாடநூல்களாக ஏற்றுள்ள சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களுக்கும் எம் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகுக.

6.12.66          புதுக்கோட்டை            பதிப்பக உரிமையாளர்

(தொடரும்)

சங்கத்தமிழறிஞர் முனைவர் சி.இலக்குவனார்