தலைப்பு-நெடுஞ்சேரலாதனின் போர்முறை - மயிலை சீனி :thalaippu_neduncheralaathtnian_poarmurai_mayilaiseeni

நெடுஞ்சேரலாதனின் போர்முறை

  ‘கூற்று வெகுண்டுவரினும் மாறாதவன்’1 என்றும், ‘பகைவர் உள்ளத்தை வருத்தும் போர்ச் செயல்களைச் செய்பவன்’2 என்றும் வரும் செய்திகளால் இவனது போராற்றலை நன்கு உணர்கின்றோம்.

  இவனும், இவனது படைவீரர்களும் எழுமரம் போன்ற உறுதியான நெஞ்செலும்பை உடையவர்கள்;3 முறுக்கான உடற்கட்டு உடையவர்கள்;4 இவனது படை வரிசை வரிசையாக வந்தது.5 நெடுஞ் சேரலாதன் தன் மார்பில் பச்சைநிறக் கற்கள் பதித்த அணிகலன்களை அணிந்திருந்தான்.6 நெடுஞ்சேரலாதன் யானை மீதேறிப் போர்க்களம் சென்றான்.7 அப்போது அவன் படைப் பிரிவுகளின் கண்களாக விளங்கினான்.8 படைகளைத் தழுவிச் செல்லும் முறையில் படையின் கவசமாக விளங்கினான்.9 வெற்றிக்கொடி நாட்டும் படையை ஏராகக் கொண்டு இவன் பகைவர்களாகிய நிலத்தை உழுபவன்.10 இவ்வகைச் செய்திகள் எல்லாம் இவனது படைஎழுச்சி நிலையைக் காட்டுகின்றன. படையில் இருந்த இயவர்கள், உலகமெல்லாம் பாதுகாப்புக்காக இவனுடைய குடை நிழலின் கீழ் வரவேண்டும் என்று கூறி வெற்றி முரசினை முழக்கினர்.11

  இவன் படையெடுத்துச் சென்றபோது கூளியர்கள் காட்டு வழிகளில் படைசெல்ல வழி அமைத்துக் கொடுத்தனர். இதற்கு மாறாக நெடுஞ்சேரலாதன் வெற்றி பெற்ற நாடுகளில் உணவுப் பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டனர். வயவர்கள் தம் வேல்களில் இருந்த புலித்தோல் உறைகளை நீக்கிவிட்டு ஏந்திச் சென்றனர். முரசு முழக்குவோர் குருதிபாயும் போர்க்களத்தைக் காணும் விருப்பத்தோடு செந்தினையில் குருதியைக் கலந்து தூவிப் போர் முரசை முழக்கினர். இவனது படையினர் போருக்கெழுந்த நாள் முதல் போர் முடியும் நாள் வரை தம் போர் உடைகளைக் களைந்ததே இல்லை.12 இவ்வாறு இவனது படையெடுப்பு நிகழ்ந்தது.

  நெடுஞ்சேரலாதன் தன் போர்ப் பாசறையில் நீண்டநாள் தங்கினான்;13 ஓர் ஆண்டுக்கு மேல் தொடர்ச்சியாகத் தங்கியதும் உண்டு.14

  போரில் இவன் பகைவர்களது மதில்களையும் கதவுகளையும் அழித்தான்;15 அவர்களது ஊர்களைத் தீக்கிரையாக்கினான்.16 வளத்துடன் விளங்கிய பகைவரது நாடுகளும் இவனை எதிர்த்தமையால் அழிந்து தம் பொலிவை இழந்துபோயின.17 அரிமாக்கள் நடமாடும் இடங்களில் பிற விலங்குகள் தலைகாட்டாமைபோல நெடுஞ்சேரலாதன் தோன்றிய நாடுகளில் அரசர்கள் ஒடுங்கினர்.18

 1. பதிற்றுப்பத்து: 14 : 10
 2. ‘அணங்குடை நோன்றாள்’ (பதிற். பதி. 2 : 12)
 3. ‘எழுமுடி கெழீஇய திருஞெமர் அகலம்’ (பதிற். 14 : 11, 16 : 17)
 4. ‘வயவர்’ (பதிற். 12: 1, 19 : 7), ‘வயவர் வேந்து’ (பதிற். 15 : 21)
 5. ‘போரடு தானை’ (பதிற் 11 : 16), ‘நிரைய வெள்ளம்’ (பதிற். 15 : 4)
 6. ‘பசும்பூண்மார்பன்’ (பதிற். 17 : 14)
 7. ‘போர்வல் யானைச் சேரலாதன்’ (பதிற். 15 : 23, 11 : 14 – 16)
 8. ‘புரையோர் உண்கண்’ (பதிற். 16 : 18)
 9. ‘சான்றோர் மெய்ம்மறை’ (பதிற். 14 : 12)
 10. ‘படையே குழவ பாடினி வேந்தே’ (பதிற். 14 : 17)
 11. பதிற். 17 : 7-14
 12. பதிற். 19: 1 – 10
 13. பதிற். 16 : 8 – 9
 14. பதிற். 15 : 1 – 2
 15. பதிற். 16 : 4 – 5
 16. பதிற். 15 : 2
 17. பதிற். 13 : 10-13, 15 : 7, 19 : 16 – 17
 18. பதிற். 12 : 5 – 8

அட்டை-தமிழகவரலாறு, சேர சோழ பாண்டியர் : attai_pandaithamizhagavaralaaru_chera,chozha,paandiyar

–  தமிழ் வரலாற்று அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி:

பண்டைத் தமிழக வரலாறு :சேரர், சோழர், பாண்டியர்

படம்: நன்றி – மோகோமி

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar