(தமிழ் வளர்த்த நகரங்கள் 4. – அ. க. நவநீத கிருட்டிணன் தமிழ் வளர்த்த சங்கங்கள் 1/2 -தொடர்ச்சி)

அத்தியாயம் 2. தமிழ் வளர்த்த சங்கங்கள் தொடர்ச்சி

மதுரையில் கடைச்சங்கம்

இச்செய்திகளால் இடைச்சங்கம் இருந்த கபாடபுரம் இராமாயண காலத்திலும் பாரத காலத்திலும் சீரிய நிலையில் இருந்த செய்தி தெளிவாகின்றது. முதற் சங்கம் விளங்கிய தென்மதுரையும் இடைச்சங்கம் இருந்த கபாடபுரமும் கடல்கோளால் அழிந்தபின்னர், இந்நாளில் உள்ள மதுரை மாநகரில் கடைச்சங்கம் நிறுவப்பெற்ற செய்தி, பல புலவர்களால் கூறப்படுகின்றது. மதுரை மாநகரில் இயற்றமிழ்ச் சங்கமும் இசைத்தமிழ்ச் சங்கமும் இலங்கிய செய்தியை மாணிக்க வாசகர் தம் திருக்கோவையார் நூலில் குறிக்கின்றார்,

“சிறைவான் புனல் தில்லைச் சிற்றம்
பலத்துமென் சிந்தையுள்ளும்
உறைவான் உயர்மதில் கூடலின்
ஆய்ந்த ஒண் தீந்தமிழின்
துறைவாய் நுழைந்தனை யோ? அன்றி
ஏழிசைச் சூழல்புக்கோ ?
இறைவா! தடவரைத் தோட்கென்
கொலாம்புகுந் தெய்தியதே.”

இப்பாடலில் கூடலெனப் பெயர் வழங்கும் மதுரைமாநகரில் தமிழ்ப் புலவர்கள் சங்கமிருந்து தமிழ்க்கலைத் துறைகளே ஆராய்ந்த செய்தி கூறப்படுகின்றது. ஏழாம் நூற்றாண்டில் திகழ்ந்த திருநாவுக்கரசர், ‘நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கமேறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளினேன் காண்’ என்று தருமிக்குப் பொற்கிழியளித்த வரலாற்றைத் தம் தேவாரப் பாட லில் குறிப்பிடுகின்றார். இச்செய்திகளால் கடைச் சங்கம் இன்றைய மதுரைமாநகரில் இலங்கியதென்பதும் விளங்குகிறது.

களவியல் உரையில் தலைச்சங்க வரலாறு


இறையனார் களவியல் உரையால் காணலாகும் முச்சங்கச் செய்திகளைச் சிறிது நோக்குவோம். பழந்தமிழ்நாடு இந்நாள் உள்ள கடற்குமரித் துறைக்குத் தெற்கே பன்னூறு கல் தொலைவு பரவியிருந்தது. அது பண்டைநாளில் குமரிநாடு முதலாக நாற்பத்தொன்பது நாடுகளாகப் பிரிந்திருந்தது. அப்பகுதியில் விளங்கிய தென்மதுரையே பாண்டியர்களின் முதற் கோநகரம் ஆகும். அந்நகரில்தான் பாண்டியர்கள் தலைச்சங்கத்தை நிறுவித் தமிழை வளர்த்தனர். இம்முதற்சங்கத்தை நிறுவியவன் காய்சினவழுதி என்னும் பாண்டிய மன்னன். இதன்கண் அகத்தியனார், முரஞ்சியூர், முடிநாகராயர் முதலான ஐந்நூற்றுநாற்பத்தொன்பது புலவர்கள் வீற்றிருந்து தமிழை ஆராய்ந்தனர். அவர்களால் பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் போன்ற எண்ணிறந்த நூல்கள் ஆக்கப்பெற்றன. இச்சங்கம் நாலாயிரத்து நானூற்று நாற்பது ஆண்டுகள் நிலவியது. இதில் பாண்டியர் எழுவர் கவியரங்கேறினர். அவர்கட்கு இலக்கண நூல் அகத்தியமாகும். இச்சங்கத்தின் இறுதியில் இருந்தவன் கடுங்கோன் என்னும் பாண்டியன்.

இடைச்சங்க வரலாறு

தலைச்சங்கமிருந்த தென்மதுரை கடல்கோளால் அழிந்தபின், கடுங்கோன் என்னும் பாண்டியன் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே இருந்த வளநாட்டில் கபாடபுரம் என்னும் நகரைத் தலைநகராக்கினான். அந்நகரில் மீண்டும் தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழைப் புரந்தான். இதுவே இடைச்சங்கம் எனப்படும். இதன் கண் தொல்காப்பியர் முதலான பல புலவர்கள் வீற்றிருந்து தமிழாராய்ச்சி செய்தனர். இச்சங்கத்தில் ஐம்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் கலியும், குருகும், வெண் டாளியும், வியாழமாலை அகவலும் முதலான பல நூல்கள் பாடப்பெற்றன. அவர்கட்கு இலக்கணநூல் அகத்தியமும் தொல்காப்பியமும் ஆகும். இச்சங்கம் மூவாயிரத்து எழுநூறு ஆண்டுகள் விளங்கிற்று என்று ஆராய்ச்சியாளர் கூறுவர்.

கடைச்சங்க வரலாறு

இடைச்சங்கத்தின் இறுதிக்காலத்தில் முடத்திரு மாறன் என்னும் பாண்டியன் இருந்தான். இவனே இன்றைய மதுரைமாநகரைப் பாண்டிய நாட்டின் தலைநகராக்கினான் ; இம்மதுரையில் மூன்றாம் சங்கமாகிய கடைச்சங்கத்தையும் நிறுவினான். இவன் கடல்கோளால் ஏற்பட்ட தன்னாட்டின் குறையை நிறைத்தற்குச் சேர சோழரோடு போர்புரிந்து அவர்கள் காட்டின் ஒரு பகுதியைக் கைப்பற்றினான். அதனால் இவன் ‘நிலந்தரு திருவிற் பாண்டியன்’ என்று வியந்தேத்தும் சீர்த்தி பெற்றான். இவன் காலமுதல் இன்றைய தென்றமிழ் மதுரை, பாண்டிய நாட்டிற்கே யன்றிப்பைந்தமிழ் நாடு முழுமைக்கும் மொழி வளர்ச்சியில் முதன்மைபெற்றுத் திகழ்வதாயிற்று.

கடைச்சங்கத்தில் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும்

அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மதுரை மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் முதலான நாற்பத்தொன்பது புலவர்கள் சிறந்து விளங்கினர். அவர்களால் நெடுந்தொகை நானூறு, குறுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, நூற்றைம்பது கலி, எழுபது பரிபாடல், கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலான எண்ணிறந்த நூல்கள் இயற்றப்பெற்றன. அவர்கட்கு அகத்தியமும் தொல்காப்பியமும் இலக்கண நூல்களாக விளங்கின. இச்சங்கம் ஆயிரத்து எண்ணூற்றைம்பது ஆண்டுகள் நின்று நிலவியது. இச்சங்கத்தின் இறுதிநாளில் விளங்கிய மன்னன் உக்கிரப்பெருவழுதி என்பான்.

புலவர் கழிவிரக்கம்
இறையனார் களவியல் உரைப் பாயிரத்தால் மூன்று சங்கங்களிலும் தோன்றிய நூல்கள் பலவற்றை அறிகின்றோம். அவற்றுள் முதற் சங்கத்தில் எழுந்த நூல்களுள் ஒன்றேனும் இன்று காணுதற்கில்லை. அச்சங்கத்தில் எழுந்த பேரிலக்கணமாகிய அகத்தியத்தின் ஒரு சில சூத்திரங்களையே உரைகளிடையே காணுகின்றோம். இடைச்சங்க நூல்களுள்ளும் தொல்காப்பியம் நீங்கலாக ஏனையவெல்லாம் கடலுக்கு இரையாயின. இச்செய்தியைக் குறித்து ஒரு புலவர் இரங்கிக்கூறும் பாடல் இங்கு எண்ணுதற்குரியது :

“ஓரணம் உருவம் யோகம்
இசைகணக்(கு) இரதம் சாலம்
தாரண மறமே சந்தம்
தம்பம்நீர் நிலம் உலோகம்
மாரணம் பொருள்ளன் றின்ன
மான நூல் பலவும் வாரி
வாரணம் கொண்ட(து) அந்தோ!
வழிவழிப் பெயரும் மாள.”

இப் பாடலால் மூன்று சங்கங்களிலும் பல துறைக் கலைநூல்கள் அளவிலாது எழுந்தனவென்றும், அவற்றுட் பெரும்பாலன கடல்கோளால் அழிக்தொழிந்தன என்றும் அறிகின்றோம்.

சமண பெளத்த சங்கங்கள்

இற்றைக்கு ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த மன்னனாகிய உக்கிரப்பெருவழுதியின் காலத்திற்குப் பின்னர்த் தமிழ்ச்சங்கம் பேணுவாரின்றி மறைந்தொழிந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சமணரும் பெளத்தரும் தமிழகத்தே புகுந்தனர். அவர்கள் தத்தம் சமயக் கொள்கைகளைப் பரப்புவதற்காகத் தமிழ்மதுரையில் சங்கங்களை அமைத்தனர். அவற்றின் வாயிலாக இலக்கண இலக்கிய நூல்கள் பல வெளிவந்தன. அவையனைத்தும் சமயச்சார்புடைய நூல்களாகவும் சமயக்கொள்கைகளைப் பரப்ப எழுந்த நூல்களாகவுமே விளங்கின.

(தொடரும்)
அ. க. நவநீத கிருட்டிணன்
தமிழ் வளர்த்த நகரங்கள்