(வள்ளுவர் சொல்லமுதம் 9 : அ. க. நவநீத கிருட்டிணன் : சொல்லும் செயலும்-தொடர்ச்சி)

வள்ளுவர் சொல்லமுதம்
அத்தியாயம் 5. சொல்லும் செயலும் பின் பகுதி

இங்ஙனம் நால்வகை வன்சொற்களைக் கடிந்து பேசிய கவிஞர்பெருமானாகிய திருவள்ளுவர், எவரிடத்தும் இன்பத்தைப் பெருக்கும் இன்சொல்லையே பேசுக என்று வேண்டுவார். அதுவே துன்பத்தை மிகுவிக்கும் வறுமையைத் தொலைப்பதாகும். இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தருவதாகும். இன்சொல் கூறுவானின் பாவங்கள் குறைந்து தேயும். புண்ணியங்கள் வளர்ந்து பெருகும். இவ்வாறு பன்னலம் விளக்கும் இன்சொல்லே தனக்கும் இன்பம் தருவதை அறிந்த ஒருவன் என்ன கருதி வன்சொல்லை வழங்குகின்றானோ ? என்று வள்ளுவர் வன்சொல் கூறுவானை நினைந்து உள்ளம் குழைகின்றார்,

கேட்பவர் உள்ளம் வேட்கை கொள்ளுமாறு இன்சொல் பேசுபவனே சிறந்த சொல்வல்லான் என்பது வள்ளுவர் கருத்து. சொல்லுக்கு இலக்கணம் இயம்பவந்த அப் புலவர், –
” கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.’

என்று அறுதியிட்டு உரைத்தருளுவார். இப் பாட லுக்குப் பரிமேலழகர் காணும் பொருள் அவர்தம் நுண்மாண் நுழைபுலத்தைப் புலப்படுத்துவதாகும். நட்பாய் ஏற்றுக்கொண்டாரை அந்நட்பினின்று விலகாதவண்ணம் மேலும் நயக்குமாறு செய்யும் நல் லாற்றல் அச் சொல்லுக்கு அமையவேண்டும். பகைமையால் வெறுப்பவரும் அப் பகைமை ஒழிந்து விரும்புமாறு செய்யும் பெருந்தகைமை அதன்பால் அமையவேண்டும். இங்ஙனம் நட்பை உறுதிப்படுத்திப் பகைமையை ஒழிக்கவல்ல சொல்லே போற்றல் வாய்ந்த சொல் என்பது உரையாசிரியர் கொள்ளும் உயந்ந்த கருத்தாகும்.

இத்தகைய நாநலம், எல்லார்க்கும் எளிதில் அமைவதன்று. அரிதாகப் பெற்ற நாவன்மை உடையவனைப் பகைமையால் வெல்வது எவர்க்கும். இயலாது. கேட்பவர் உளம் கொள்ளுமாறு கருத்துகளை நிரல்படக் கோத்துச் சொல்லும் வல்லமை உடையார்க்கு உலகம் விரைந்து ஏவல் கேட்கும். சொல்வன்மை இல்லாதவர் எத்துணை நூல்களைக் கற்றாலும் பயனில்லை. அவர் இணர் ஊழ்த்தும் நாறாத மலருக்கு ஒப்பாவர்; குடத்துள் வைத்த விளக்கனையர் என்று கூறுவர்.

ஆகவே, ஒருவன் சொல்லக் கருதிய சொல், பயன் விளைப்பதாகவும் இனிமை தழைப்பதாகவும் இருத்தல் வேண்டும். மற்றவர் உள்ளத்தைப் பற்றி ஈர்க்கும் பெற்றியதாக இருக்கவேண்டும். அச் சொல்லை வெல்லும் சொல், வேறொன்று இல்லாத வகையில் ஆய்ந்து சொல்லுதல் வேண்டும். அத் தகைய சொல்லே, தன்னையும் பிறரையும் செயற்படுத்தும் செம்மை வாய்ந்ததாகும்.

“செய்வன திருந்தச் செய்” என்பது ஒளவையாரின் அமுதமொழி. அறிவின் துணைகொண்டு அளவற்ற கருத்துகளைச் சொல்லிவிடலாம். அவற்றைச் செயன்முறையில் கொணர்பவனே சிறந்த அறிவாளன் ஆவான். உடலாற்றல் உளவாற்றல்களின் துணையின்றிச் செயலாற்றல் எவர்க்கும் இயலாது. பெரியார் துணையாற்றலும் செயல் நிறைவேறப் பெருந்துணை செய்யும். சொல்லும் செயலும் ஒத்து அமைதல் வேண்டும் என்ற கருத்தாலேயே திருவள்ளுவர், சொல்வன்மை என்ற அதிகாரத்தை அடுத்துச் செயலைப்பற்றி விரிவாகப் பேசத் தொடங்குகிறார். வினைத்துாய்மை, வினைத்திட்பம், வினைசெயல்வகை என்ற மூன்று அதிகாரங்களால் வினைத்திறத்தை விளக்குகின்றார். முதற் கண் செய்யும் வினையின் செம்மையைப் பற்றிப் பேசுகின்றார். “செயற்கரிய செய்வார் பெரியர்,” என்பது தெய்வப்புலவர் திருவுள்ளம். அருமையும் தூய்மையும் உடைய செயல்களே ஒருவரைப் பெரியவ ராக்கும் இயல்புடையன; பொருளும் அறமும் புகழும் பயப்பன; வினைநலம் வேண்டிய எல்லாம் தரும் என்பர்.

மக்கள் இயற்றும் செயல்களை இருவகையுள் அடக்கலாம். ஒன்று பொருள் கருதியதாகவும் மற்ருென்று புகழ் கருதியதாகவுமே அமையும். இரண்டும் செயல் துய்மையின் காரணமாக இம்மை மறுமை இன்பங்களைப் பயப்பனவே. ஆதலின் புகழும் அறமும் பயவாத செயல்களை என்றும் ஒழிதல் வேண்டும்; உலகில் பெருமை அடைய விழைவார்க்கு அவை தடையாக அமையும் என்பர். இறந்த மூப்பினராய இருமுது குரவரும் கற்புடை மனைவியும் குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவும் செய்தாயினும் புறந்தருக, என்னும் பிற அற நூல்கள். இக்கருத்து நம் தெய்வப்புலவர்க்கு உடன்பாடன்று. ஆதலின் வன்மையாக அதனை மறுத்துப் பேசுகிறார். தன்னைப் பெற்ற அன்னையின் பெரும்பசியைத் தணித்தற் கென்றேனும் அறிஞர் பழிக்கும் வினைகளைச் செய்யாது ஒழிக. என்று அறிவுறுத்துகிறார்.

“ஈன்றாள் பசிகாண்பா குயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

என்பது அப் புலவரது உறுதிமொழி.

தீய வினைகளைச் செய்து தீராத பழியுடன் பொருளைத் தேடிச் செல்வரென வாழ்வதில் என்ன சிறப்புளது; பழி சாராத பண்புடையார் அனுபவிக்கும் வறுமை, அச் செல்வ வாழ்வினும் மிகப் பெருமை. யுடையதாகும். ஒருவன் தீய வினைகளைச் செய்துதேடிய பொருள் அவன்பால் நிலைத்திருப்பதன்று. அது பசிய மட்பாண்டத்துள் நீரைப் பெய்து பாதுகாத்தற்கு ஒப்பாகும் என்பர். பிறர் வருந்துமாறு நீட்டிய பெருஞ்செல்வம் இம்மையிலேயே அவ் ஈட்டி னேர் இரங்கி வருந்துமாறு அகலும். “அழக் கொண்ட எல்லாம் அழப்போம்” என்பர் நம் தெய்வப்புலவர்.

புகழ் பயக்கும் தூய வினைகளைப் பொருந்தவும் திருந்தவும் ஆற்றுதற்கு ஏற்ற மனத்திட்பம்வேண்டும். வினைசெய்ய நினைந்தவர் துணிவுடையராயின், “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்,” என்பார். ஒருவன் செய்யும் செயலை முன்னெல்லாம் மறைத்து முடிவின் கண் பிறர்க்குப் புலப்படுமாறு செய்வதே வினவெற்றிக்கு உற்ற காரணமாகும். உருவத்தால் சிறியராய சிலர் உறுதியான உள்ளத்தால் சிறந்து விளங்குவர். அன்னாரை வடிவின் சிறுமை நோக்கி இகழ்தல் தகாது. அவர்கள் உருளும் பெருந்தேர்க்கு அச்சாணி ஒப்பர். ஆலம் வித்து மீன்முட்டையினும் மிகச் சிறியதே. எனினும் அதனின்று முளைத்துக் கிளைத் துச் செழித்த முழுமரத்தின் பெருநிழல் முடிமன்னர் நால்வகைப் படையுடன் தங்குதற்குத் தகுவதாகும். ஆதலின், “சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்,” என்பர் அதிவீரராமர்.

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிதல் வேண் டும். துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கைத் தரும். தெளிந்து செய்யத்துணிந்த வினைக்கண் இறுதி வரை தளர்தலின்றிக் காலத்தைத் தாழ்க்காது கடிது முடித்தல் வேண்டும். உடல் உழைப்பால் மிக்க துன்பம் உறுவதாயினும் அதுநோக்கித் தளர்தல் தகாது. முடிவில் அடையும் இன்பத்தையே குறிக் கோளாக எண்ணி உறுதியுடன் வினையாற்றுதல் வேண்டும். அத்தகைய செயல்உறுதி இல்லாத சிறியரைப் பெரியர் மதியார்.

சில செயல்களைக் காலம் நீட்டித்தே செய்தல் வேண்டும். சில வினைகளை விரைந்து முடித்தல் வேண்டும். இவ் இருவகை வினைகளையும் வலியாலும் காலத்தாலும் அறிந்து ஆற்றுதல் நலம். பொருள், கருவி, காலம், வினை, இடம் ஆகிய ஐந்தனையும் தெளிவுற ஆராய்ந்து செயலாற்றவேண்டும். வினை முடிதற்கு வேண்டும் முயற்சி, அதற்கு வரும் இடையூறு, அது நீங்கிச் செயல் முடிந்தால் தான் எய்தும் பயன் இவற்றை எல்லாம் சீர்தூக்கிச் செயல்புரிதல் வேண்டும்.

கல் ஒன்றை எறிந்து காய்கள் இரண்டைப் பெறு தலும் உண்டன்றோ! சிலர் தமது செயல் திறமையின் பயனாகச் செய்யும் ஒரு செயலாலேயே மற்றொரு செயலும் தானே முடியப்பெறுவர். கம்புக்குக் களைவெட்ட அழைத்துச்சென்ற காரிகையைத் தம்பிக்குப் பெண்டாகக்கொண்டவன் எத்துணைச் செயல் திறனுடையவன்! ஆடு மேய்க்கச் சென்றவன் அண்ணனுக்குப் பெண்ணும் பார்த்துவந்தால், அவன் பெருஞ் செயல் திறன் படைத்தவன் என்று பேசுவர் அன்றோ!
வினையால் வினையாக்கிக் கோடல் நனகவுள்
யானையால் யானையாத் தற்று.”

என்பது வள்ளுவர் சொல்லமுதம் ஆகும். மதங் கொண்ட யானையினைச் செலுத்தி அன்னது பிறிது மோர் யானையைப் பிணித்தல்போல்வதாகும் அச் செயல் என்பர். மதங்கொண்ட யானையை அத்தகைய மற்றொன்றன்மீது செலுத்திய ஒரு செயலால் இரண்டன் மதமும் அடங்குமாறு செய்தல் அருஞ்செயல் அன்றோ !

மேற்கூறியாங்குச் சொல்வல்லனாய்ச் செயலாற் றும் திறனும் உடையானே செயற்கரிய செய்யும் பெரியான் ஆவன். அன்னவனேயே மண்ணுலகம் செயல் வீரன் என்று சிறப்பிக்கும். சொல் வீரனால் உலகிற்கு விளையும் பயன் குறைவே. செயல் வீரனாலேயே உலகம் சிறப்பும் செழிப்பும் உறுவதாகும்.

(தொடரும்)

வள்ளுவர் சொல்லமுதம்

வித்துவான் அ. க. நவநீத கிருட்டிணன்