குளத்தூர் மணி : kulathuurmani

திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான்!

நாம் தமிழர் கட்சிமுன் வைக்கும் கருத்துகள் குறித்துத் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் குளத்தூர் மணியிடம் இணையத்தளம் வழியாகக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்துள்ள மறுமொழிகள்.

பகலவன்: நாம் தமிழர் கட்சியின் செயற்பாட்டு வரைவு படித்தீர்களா? படித்திருந்தால் அதைப்பற்றிய நிறை குறையைப் பகிர வேண்டுகிறேன்!

குளத்தூர் மணி: ‘நாம் தமிழர் கட்சி’யின் செயற்பாட்டு வரைவு எமக்குக் கிடைக்கவில்லை. கிடைத்ததும் தேவையெனில் எழுதுவோம்.

பகலவன்: ஆந்திர, கருநாடக, கேரள மாநிலத்தவர்கள் தங்களைத் திராவிடர் என்று அடையாளப்படுத்துவது இல்லை. நாம் மட்டும் ஏன் நம்மைத் திராவிடர்கள் என அடையாளப்படுத்த வேண்டும்?

குளத்தூர் மணி: ஆந்திர மாநிலம் சித்தூரில்தான் திராவிடப் பல்கலைக் கழகம் உள்ளது. அது போலவே கருநாடக மாநிலம் மைசூரில்தான் திராவிட மொழியியல் ஆய்வு மையம் உள்ளது.

மற்றொரு காரணம், திராவிடம் என்பது தமிழ் என்பதன் திரிந்த வடிவம்தான். தமிழ்ழூ, திரமிழ்ழூ, திரமிழழூ, திரமிடழூ, திரவிடழூ, திராவிட… என்று திரிந்தது எனக் கூறுகிறோம். அவ்வாறிருக்க, தனிமொழிப் பெருமிதத்தோடு விளங்கும் பிற திராவிட இனத்தவர், தங்கள் மொழி தனித்த மொழியில்லை; தங்கள் இனப் பெயர் கூடத் தமிழிலிருந்து வந்தது என்பதை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

ஆனால், அம்மொழி பேசும் அறிஞர்கள் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால்தான் திராவிடப் பல்கலைக் கழகமும், திராவிட மொழியியல் ஆய்வு மையமும் அங்கே இயங்குகின்றன. மேலும், அடூர் கோபாலகிருட்டிணன் எனும் மலையாள இலக்கியர், “எங்கள் மொழியின் இலக்கிய வரலாறு சிலப்பதிகாரத்தில் இருந்து தொடங்குகிறது” என்று ஒரு நேர்காணலில் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பெரியார், திராவிடர் என்ற சொல்லை, ஆரியர் அல்லாதார் என்ற பொருள் கொண்ட இடுகுறிப் பெயராகவே கையாண்டார். அதனால்தான் செகசீவன்ராம் கூட ஒருமுறை தன்னைப் பற்றி,

“நான் பீகாரிலிருந்து வரும் திராவிடன்” என்று குறிப்பிட்டார்.

பகலவன்: நீங்கள் ஏன் ‘நாம் தமிழரை’ ஆதரிக்கக் கூடாது?

குளத்தூர் மணி: பெரியார் ஆரியரை, பார்ப்பனரைப் பிரித்துப் பார்த்தது கூட, அவரே கூறியுள்ளதைப் போன்று குருதி ஆய்வு செய்து இல்லை; அவர்களின் ஒழுகலாறுகள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டுதான். பெரியார் கூறியுள்ளார், “நாங்கள் மக்களை ஒன்று சேர்க்க வந்தவர்களே தவிர, பிரிக்க வந்தவர்கள் இல்லை. நாளை பார்ப்பானே எங்களோடு சேர வந்தால் கூட ‘உனக்கு மட்டும் பூணூல் எதற்காக’ என்று கேட்போம். அதை அகற்றிவிட்டால் நமக்கென்ன தடை? அதற்கப்புறம் கேட்போம், ‘உனக்குத் தமிழ் உயர்ந்ததா சமசுகிருதம் உயர்ந்ததா’ என்று. ‘கீதை உயர்ந்ததா? குறள் உயர்ந்ததா?… வேதம் உயர்ந்ததா?’ என்று கேட்போம். தமிழ்தான் உயர்ந்தது, குறள்தான் உயர்ந்தது என்போரை அரவணைத்துக் கொள்வதில் எங்களுக்கென்ன சிக்கல்?” இதுதான் பெரியாரின், பெரியார் இயக்கத்தின் நிலைப்பாடு. ஆனால், ‘நாம் தமிழர் கட்சி’யோ “தமிழ் உயர்ந்தது, குறள் உயர்ந்தது” என்போரைப் பிற மொழியாளர் என்று கூறி விலக்கி வைக்கிறது; அதே வேளை “சமசுகிருதம் உயர்ந்தது, வேதமும் கீதையுமே சிறந்தவை” என்போரைத் தமிழ் பேசுகிறார்கள் எனக் கூறி ஆரத்தழுவி அரவணைக்கிறது.

  மற்றொருபுறம், ஆளுகைத் திமிரோடு தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படுகிற தாக்குதல்கள் குறித்துக் கள்ள அமைதி காக்கிறது. அதிலும் கூடத் தாக்கப்படுபவர், தாக்குகிறவர் ஆகியோர் பேசுகிற மொழி குறித்த ஆராய்ச்சியில் இருந்து விடுவார்களோ என்னவோ? சுரண்டப்படுவர், ஒடுக்கப்படுகிறவர் பக்கம் நிற்காத, தமிழை, குறளை ஏற்காதவர் பக்கம் நிற்கிற, ஒரு கட்சியை – சீர்பாட்டை (சமத்துவத்தை), தோழமையை விரும்புகிற ‘தமிழர்கள்’ எப்படி ஆதரிக்க முடியும்?

இதுதான் எமது சுருக்கமான மறுமொழி. விரித்தால் பெருகும்.

         பெரியார் முழக்கம், பங்குனி 2047 /  8.4.2016. 

முத்திரை-புரட்சிப்பெரியார் முழக்கம் : muthirai_periyamuzhakkam_logo

முத்திரை- கீற்று : muthirai_Keetru_logo  

பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_gnanaprakasan_peyar